Jun 8, 2014

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் கடைகளுக்கு சீல்



காஞ்சிபுரம், ஜூன் 7:
காஞ்சிபுரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்ய இருந்த 3 டன் மாம்பழங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் காஞ்சிபுரம் நகரில் விற்பனை செய்வதாக காஞ்சிபுரம் சுகாதார துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், நகராட்சி கமிஷனர் விமலா ஆகியோர் உத்தரவின்படி, நகர்நல அலுவலர் டாக்டர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், தேரடி, ஜவஹர்லால் நேரு மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மண்டிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கு கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு இருந்த, 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அதனை பயன்படுத்தி கடைகளுக்கு சீல் வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கால்சியம் கார்பைடு கல் பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்யபடுவதாக மாவட்ட சுகாதார துறைக்கு தகவல கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், வட்டார மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், சவுந்தர்ராஜன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேஷ், கன்னியப்பன், ரமேஷ், உதயகுமார், ஸ்டீபன், சைமா ஆகியோர் குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் நேற்று ஆய்வு நடத்தினர்.
இதில் பேரூராட்சியில் உள்ள 11 கடைகளில் கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் 198 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கிலோ கால்சியம் கார்பைடு கல் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் கொண்டு அழிக்கப்பட்டது.மேலும் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழ வகையினை தொடர்ந்து விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெ.ரெனிஷ் தலைமையில் சுகாதார குழுவினர் உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என பழக்கடைகளிலும், மாந்தோப்பிலும் திடீர் ஆய்வு செய்து, சாப்பிடத் தகுதியற்ற நிலையில் இருந்த 3,850 மதிப்பிலான 63 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

No comments:

Post a Comment