புதுடில்லி : ஓட்டல், ரெஸ்டாரென்ட் உள்ளிட்ட உணவகங்களில், மக்களுக்கு பாதுகாப்பான உணவு வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, உணவு பாதுகாப்பு மேற்பார்வை அதிகாரியை நியமிக்கும் விதிமுறையை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது.டில்லியில், 'பிக்கி' அமைப்பின் 'உணவு சேவையில், சில்லரை விற்பனை' குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையமான - எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் பங்கேற்று பேசியதாவது: மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைப்பதை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உறுதி செய்கிறது. ஓட்டல், ரெஸ்டாரென்ட் உட்பட, உணவு சேவை துறையில் உள்ள, அனைத்து நிறுவனங்களும், மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.
அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வகுத்துள்ளது.அதனடிப்படையில், உணவு சேவை துறையின் செயல்பாடுகளை, பல்வேறு அரசு அமைப்புகள், கவனித்து வருகின்றன. உணவு சேவை துறை, பலதரப்பட்ட அரசு அமைப்புகளின் கீழ் இருப்பதால், நடைமுறை சிக்கல்களை சந்திப்பதாக, இத்துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு பாதுகாப்பான, தரமான உணவு கிடைக்கவும், அதே சமயம், உணவு சேவை துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பல்வேறு திட்டங்களை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இது தொடர்பாக, மாநில அரசு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். உணவு சேவை துறையில், அதிகாரிகளின், 'இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்' இருக்கக் கூடாது.
அதே சமயம், மக்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க வேண்டும் என்பதில், எவ்வித சமரசத்திற்கு இடமின்றி, உறுதியாக உள்ளோம். மாநிலங்களில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதை உயர்த்தும் நோக்கில், சோதனை அடிப்படையில், கோவாவில், 1,000 பேருக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில், இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
அனைத்து ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள் ஆகியவை, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை, கண்டிப்பாக நியமிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும். பாதுகாப்பான உணவு குறித்து, சாலையோர உணவகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.