பள்ளி அருகே போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் 200 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
போதை சாக்லெட்
சென்னையில் போதை சாக்லெட் விற்றதாக 2 வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் போதை சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா மேற்பார்வையில் 3 பேர் கொண்ட 7 குழுவினர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் பள்ளிக்கூடம் முன்பு கட்டில் போட்டு விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்த சாக்லெட், முறுக்கு, கலர் கலரான மிட்டாய், ஜவ்வு மிட்டாய், நெல்லிக்காய், மாங்காய் போன்ற தின்பண்டங்களை சோதனை செய்தனர்.
பறிமுதல்
இதில் நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்டவை குறிப்பிடாமல் விற்கப்பட்ட சாக்லெட் மற்றும் மிட்டாய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்காரர்களிடம் பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக்கடை, டீக்கடை, பேன்சி கடை உள்ளிட்ட கடைகளிலும் சோதனை நடத்தினர். அங்கு சாக்லெட், ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளில் போதை சேர்க்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கும் எந்த ஒரு அடையாளமும் குறிப்பிடாமல் விற்கப்பட்ட சாக்லெட் பாக்கெட்டுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மாதிரிக்காக சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவை அங்கு சேகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடையின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டன.
புகையிலை பொருட்கள்
மேட்டூரை அடுத்த சாம்பள்ளி, குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே உள்ள 30–க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இளங்கோ, மாரியப்பன், சிவானந்தம் உள்ளிட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் போதை சாக்லெட் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த கடைகளில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
இதேபோல், பனமரத்துப்பட்டி பகுதிகளிலும் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
200 கடைகளில் சோதனை
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறும் போது, ‘சேலம் மற்றும் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை நடத்தினோம். மொத்தம் 200 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது பல கடைகளில் இருந்து எந்த ஒரு விவரமும் குறிப்பிடாமல் இருந்த சாக்லெட் பாக்கெட்டுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களையும் சந்தித்து இதுதொடர்பாக சில அறிவுரைகளை வழங்கி உள்ளோம்‘ என்றனர்.