உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி, இப்போது மருந்தே உணவாக மாறிவிட்டது. உடலை வலுவாக்கும் சக்தியையும் நோயை அண்டவிடாத தற்காப்பையும் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் உருவாக்கிய பாரம்பரிய மருத்துவ உணவுகள் ஏராளம். அத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த உணவுகளை இங்கே பட்டியலிடுகிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா.
மருந்து சாதம்
தேவையானவை: சுக்கு - ஒரு துண்டு, வெள்ளை மிளகு - 2 டீஸ்பூன், திப்பிலி - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி. இவை அனைத்தையும் வறுத்து அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு, கறி மசாலாத் தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கிக்கொள்ளவும். அத்துடன், ஏற்கெனவே அரைத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். கூடவே பூண்டு போட்டு நன்றாக வதக்கியதும், உப்பு, மஞ்சள் தூள், கறி மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இதை சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.
மருத்துவப் பயன்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், வாரம் ஒருமுறை இதுபோல் சமைத்துச் சாப்பிட்டால், அஜீரணப் பிரச்னையே இருக்காது.
வல்லாரைக் கீரைக் கூட்டு
தேவையானவை: வல்லாரைக் கீரை - ஒரு கட்டு, தோல் நீக்கிய இஞ்சி - 50 கிராம், மிளகு - 5 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்துக் கடைந்து, கீரை, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து கீரைக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
மருத்துவப் பயன்: மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். நினைவாற்றலைத் தூண்டும். காக்காய்வலிப்பு, நரம்புக் கோளாறுகள், இதய நோய், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும்.
பானகம்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - 200 மி.லி., மஞ்சள் வாழைப் பழம் - 10, நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு, சுக்கு - ஒரு துண்டு, ஏலக்காய் - 10.
செய்முறை: வாழைப் பழங்களை நன்றாகப் பிசையவும். சுக்கு, ஏலக்காயை லேசாகத் தட்டிக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் போட்டுக் கலக்கவும். சிறிது நேரத்தில் தூசி அடியில் தங்கிவிடும். வடிகட்டிக் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: தற்காலிகப் பசியைத் தணித்து, அரை மணி நேரத்தில், பசியைத் தூண்டிவிடும். பித்தத்தைத் தணிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். மயக்கம், களைப்பைப் போக்கும்.
அலுப்புக் குழம்பு
தேவையானவை: சுக்கு, சித்தரத்தை, பரங்கிச் சக்கை - தலா ஒரு துண்டு, மிளகு, வால் மிளகு, வெள்ளை மிளகு, மோடிக் குச்சி - தலா 10, திப்பிலி - 5, கடுகு, சீரகம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், கத்தரிக்காய் - அரை கிலோ, மொச்சை - 100 கிராம், புளி - சிறிதளவு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சுக்கு, சித்தரத்தை, மிளகு, பரங்கிச் சக்கை, வால் மிளகு, வெள்ளை மிளகு, திப்பிலி, மோடிக் குச்சி, சீரகம், மஞ்சள் தூள் இவற்றை லேசாக வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டுத் தாளித்து, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், ஊறவைத்த மொச்சை, அரைத்துவைத்துள்ள பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும்.
மருத்துவப் பயன்: உடல் வலி, அசதியைப் போக்கும். சளித் தொல்லை நீங்கும். பசியைத் தூண்டும். அடிக்கடி சாப்பிட்டால், ரத்த உற்பத்தியை ஊக்குவிக்கும். குழந்தை பெற்ற பிறகு உடம்பில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளித்தள்ளும். அடிவயிற்றுச் சதையைக் குறைக்கும்.