காரிமங்கலம்,
காரிமங்கலம் அருகே போதை பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
போதை நெடி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் வெங்கட். இவருக்கு சொந்தமாக காரிமங்கலம் அடுத்த கேத்தனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் 6 ஏக்கரில் மாந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீப்பெட்டி தொழிற்சாலை அமைப்பதாக கூறி கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஆண்களோ, பெண்களோ யாரும் வேலைக்கு செல்லவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்த போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும் அந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் போதை நெடி வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், கலெக்டர் விவேகானந்தன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாக்கு தொழிற்சாலை
இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காலை உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிருந்தா மற்றும் அலுவலர்கள், காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் தலைமையிலான போலீசார், அதிரடிப்படை போலீசார் அந்த தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த தொழிற்சாலையில் போதை பாக்கு தயாரிப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் ஆகியோர் தொழிற்சாலையில் இருந்த வடமாநில தொழிலாளிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரவு நேரங்களில் போதை பாக்கு தயாரிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 5 டன் எடையுள்ள போதை பாக்குகள் மற்றும் போதை பொருட்கள் தயாரிக்க தேவையாக ஒரு டன் புகையிலை தனித்தனி அறைகளில் வைத்து இருப்பது தெரியவந்தது.
பொருட்கள் பறிமுதல்
இதையடுத்து தொழிற்சாலையில் தயாரித்து விற்பனைக்காக வைத்து இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 5 டன் போதை பாக்கு, போதை பாக்கு தயாரிக்க பயன்படும் 1 டன் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொழிற்சாலையில் இருந்த ஒரு வேன், 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதை பாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் சீல் வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிருந்தா காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ்–இன்ஸ்பெக்டர் கனகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் போதை பாக்கு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.