நம் முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானியங்கள் தொடங்கி இன்றைய தலைமுறையினர் விரும்பி சாப்பிடும் பீட்சா, பர்கர் வரை காலத்திற்கு ஏற்ப உணவுப் பொருட்களிலும் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இன்றைய சூழலில் உணவுப் பொருட்களின் ஆரோக்கியம், தரம் மட்டும்தான் கேள்விக்குறியாக இருக்கின்றது.
மளிகைக்கடை, டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் மளிகைப் பொருட்களாவது தரமானதாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றதா? இல்லை. ஹோட்டல்களில் சாப்பிடச் சென்றால் சாப்பிடும் உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில்தான் சமைக்கப்பட்டிருக்குமா? அரைத்த மாவில், சாம்பாரில் எதாவது பூச்சிகள் விழுந்திருக்குமோ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.
'இரசாயனம்', 'கலப்படம்', 'காலாவதி' இவை மூன்றும் நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுப் பொருட்களிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது நேரடியாகவோ, மறைமுகமாகவே நம்மைக் கடந்து செல்வதைத் தவிர்க்க முடியாத காலகட்டத்தில் வாழ்கிறோம். ஒரு கிலோ உணவுப் பொருளில் 100 கிராமில் தொடங்கி பல நூறுகிராம் அளவிற்கு குறையாமல் போலியான, தரமற்ற பொருட்களை சேர்த்தல் எப்படி நியாயம். இது தெரியாமலேயே ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான நுகர்வோர் ஏமாந்துகொண்டே இருக்கின்றனர். இதில் உணவுப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (Food Safety and Standards Authority of India) சட்டங்களை வகுத்து பாதுகாப்பான உணவை வழங்கி, மக்களின் நலத்தைக் காக்கும் கடமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தேவையான சட்டங்கள் இருக்கிறது. ஆனால், அவற்றை நடைமுறை படுத்துவதில்தான் தோல்வியே. அதுபோல நாட்டின் சுகாதார அமைச்சகம் தொடங்கி, மாநில சுகாதாரம் அமைச்சகம், உள்ளூர் சுகாதார ஆய்வாளர் வரை பல கட்டங்களாக மக்கள் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் தரமான சேவைதான் மக்களுக்கு சென்றுசேருவதில்லை. இதனால் பல இடங்களில் நுகர்வோராகிய நாம் தோல்வியடைகிறோம். பல்வேறு பொருட்களின் தயாரிப்பு நிர்வாகிகளும், விற்பனையாளர்களும் அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டியவற்றை கொடுத்து தங்களின் தரமற்ற, போலியான உணவுப் பொருட்களை மக்களை ஏமாற்றி விற்பனை செய்து காரியத்தை சாதிக்கிறார்கள். தெரிந்தே மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறார்கள்.
இதற்கு சமீபத்திய உதாரணம், சில நாட்களுக்கு முன் சென்னை, குரோம்பேட்டையில் தந்தை-மகன் இருவர் தனியார் பால் நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டினை வாங்கி உணவு சாப்பிட்டனர். பாதி உணவை சாப்பிட்ட நிலையில்தான் தெரிந்தது, அந்த தயிர் பாக்கெட்டில் இறந்த நிலையில் அட்டை பூச்சி இருப்பது. தந்தை-மகன் இருவரும் அடுத்த சில மணிநேரங்களில் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்களை காண அதிகாரிகள் விரைந்தனர். இது ஒரும்புறமிருக்க எண்ணெய், தானியங்கள், மசாலா பொருட்கள் என அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்கள், 'அக்மார்க்' எனப்படும் மத்திய அரசின் வேளாண் பொருட்களுக்கான சான்றிதழைப் பெற்றுதான் விற்பனைக்கு வரவேண்டும். ஆனால் முறையான சான்றிதழைப் பெற்றும், பெறாமலும் ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.
நம் உணவுப் பொருட்களுக்கான பாதுகாப்பை அச்சுறுத்தும் 'முறையான கண்காணிப்பு திட்டமில்லாமை, பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டிற்கான விழிப்பு உணர்வு இல்லாமை ஆகியவற்றின் காரணமாக, உணவு சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன'. பலரது பசியை ஆற்றும் உணவு விஷயம் என்பதால் சம்மந்தப்பட்ட உணவுப் பொருள் நிர்வாகிகளே தரமான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதைச் சோதித்து தவறு நடக்காமலும், நடந்தால் சம்மந்தபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டிய அரசும், அரசு அதிகாரிகளும் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும். ஊழலும், முறைகேடுகளும் புரையோடிப்போன நம் நாட்டில் நுகர்வோராகிய நாமும் விழிப்புடன் தரமான பொருட்களைத் தேர்வு செய்து வாங்கி, நம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நுகர்வோராகிய நாம் செய்ய வேண்டியவை:
* நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் தரமற்றதாக, கலப்படமானதாக இருப்பதாக நினைத்தால் அருகிலுள்ள ஃபுட் லெபாரட்டரிக்கு அவற்றை அனுப்பி சோதனை செய்யுங்கள். சோதனையின் முடிவில் அவை தரமற்று இருப்பது உறுதியானால் அந்தப் பொருளை விற்பனை செய்தவர், அந்த நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணமும் பெறலாம். தொடர்ந்து தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதை நம்மாள் இயன்ற அளவுக்கு குறைக்கலாம்.
* நம் குடும்ப நபர்கள், நண்பர்கள் யாராவது தரமற்ற, ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டும். தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் சம்மந்தபட்ட கடைக்காரர் மற்றும் நிறுவனத்தின்மீது புகார் தெரிவிக்க வேண்டும்.
அதிக அளவில் கலப்படம் செய்யப்படும் பொருட்களும் அதனைக் கண்டறியும் எளிமையான சோதனைகளும்:
டீ தூள்:
டீ கடைகளில் பயன்படுத்தப்பட்ட டீ தூள் கசடை குறைவான விலைக்கு வாங்கி, அதை வெயிலில் உலர்த்தி அதனுடன் சிவப்பு நிறம் சேர்த்து விற்பனை செய்கின்றனர்.
சாதாரண ஃபில்டர் பேப்பரில் டீ தூளைக் கொட்டி, நான்கு துளிகள் நீர் விட்டால், சிவப்பு நிறம் தனியே பிரிந்தால் அவை கலப்பட டீ தூள் என அர்த்தம்.
மிளகு:
காய்ந்த பப்பாளி விதைகளை மிளகுடன் கலப்படம் செய்வார்கள்.
ஒரு தண்ணீர் டம்ளரில் மிளகைப் போட, மிளகு உள்ளே சென்றால் அவை தரமானவை. மேலே மிதந்தால் அவை போலி. ஒரிஜினல் மிளகு பார்க்க பளபளப்பாகவும், வட்டவடிவிலும், வாசனையற்றும் இருக்காது.
பெருங்காயம்:
பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள்.
சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசலும் வாசனையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால் அவை கலப்படம் என அர்த்தம்.
சர்க்கரை:
சர்க்கரையில் சுண்ணாம்புத்தூள் சேர்க்கப்படும்.
சிறிது சர்க்கரையை சிறிதளவு தண்ணீரில் கலந்தால் நீரில் எந்த கசடும் இன்றி, நீர் நிறம் மாறாமல் இருந்தால் அது நல்ல சர்க்கரை. நீர் வெண்மை நிறமாகி, அதனடியில் கசடு சேர்ந்தால் அவை கலப்படமானது.
தேங்காய் எண்ணெய்:
மினரல் ஆயில் என்னும் பெட்ரோலிய கழிவு எண்ணெய் தேங்காய் எண்ணெய் உடன் கலக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்யை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை உறையும். ஆனால் உரையாமல் அப்படியே இருந்தால் அவை கலப்பட எண்ணெய்.
தேன்:
தேனில் சர்க்கரைப்பாகு அல்லது வெல்லப்பாகு கலப்படம் செய்யப்படுகிறது.
தேனை, தண்ணீரில் விட்டால் அவை கரையாமல் அடியில் சென்று தங்கும். பஞ்சைத் தேனில் நனைத்து நெருப்பில் காட்டினால் பஞ்சு எரிந்தால் அவை நல்ல தேன். எரியும்போது படபடவென சத்தம் வந்தால் அது கலப்படத் தேன்.
மிளகாய்த்தூள்:
மிளகாய்த்தூளுடன் செங்கல் பொடி, மரத்தூள், சிவப்பு நிற ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
தண்ணீரில் சிறிது மிளகாய்த்தூளை கலக்கும்போது அவை செங்கல்தூள் கலந்தாக இருந்தால் நீரின் அடியில் சேகரமாகும். இரசாயனம் சேர்ந்திருந்தால் அவை நீரில் அதிக நிறத்தை உண்டாக்கும்.
பச்சைப் பட்டாணி:
மாலசைட் கிரீன்( malachite green) என்னும் ரசாயனத்தில் முக்கி எடுக்கப்படுவதால் பச்சைப் பட்டாணிகள் அடர் பச்சைநிறத்தில் இருக்கும். இத்தகைய பச்சைப் பட்டாணியை வெந்நீரில் சேர்க்கும்போது அவற்றில் பச்சைநிறம் தனியாக பிரிந்து வெளியேறினால் அவை தரமற்ற, போலியானவை என அர்த்தம்.
மசாலா பட்டை:
பட்டையில் கேசியா(casia), சுருள் பட்டை என்னும் மசாலா பட்டை(cinnamon) என இருவகை உண்டு. இதில் சுருள் பட்டைதான் ஆரோக்கியமானவை. கேசியா பட்டை என்பது மரப்பட்டையில் நிறம் சேர்க்கப்பட்ட போலியானவை.
ஒன்றிரண்டு பட்டைகளை கசக்கிப் பார்த்தால் கைகளில் எந்த நிறமும் ஒட்டாமல் வாசனையாக இருந்தால் அவை தரமான பட்டை.