Oct 25, 2017
விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு
விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
விளாத்திகுளம் அருகே வெம்பூரில் எண்ணெய் குடோன் உள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (வயது 42) என்பவர் எண்ணெய் குடோனை நடத்தி வந்தார். இங்கு முறைகேடாக டின்களில் தரம் குறைந்த எண்ணெயை கலந்து விற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவபாலன் உள்ளிட்ட குழுவினர் நேற்று வெம்பூரில் உள்ள எண்ணெய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
சீல் வைப்பு
அப்போது அந்த குடோனில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் தரம் குறைந்த எண்ணெயை கலப்படம் செய்து டின்களில் அடைத்து, கடைகளுக்கு விற்றது தெரிய வந்தது. அந்த எண்ணெய் குடோனில் தலா 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 டின்கள் இருந்தன.
அவற்றில் இருந்து எண்ணெய் மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து, தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த எண்ணெய் குடோனை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆய்வக பரிசோதனையின் முடிவில் எண்ணெய் குடோனின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு வணிகம் பதிவு: நாளை சிறப்பு முகாம்
சேலம்: உணவு வணிகம் பதிவு செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் ரோகிணி விடுத்துள்ள அறிக்கை: உணவு வணிகம் செய்பவர்கள் பதிவு, உரிமம் பெறுவதற்கான கால அவகாசம், கடந்த ஆண்டு ஆக., 4 உடன் முடிந்துவிட்டது. உணவு வணிகம் பெறுபவர்கள், பதிவு, உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்பதற்காக, நாளை நாட்டாண்மை கழக கட்டட வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில், சிறப்பு முகாம் நடக்கிறது.
ஆண்டுக்கு, 12 லட்சத்துக்குள் வியாபாரம் செய்பவர், 100 ரூபாய், 12 லட்சத்துக்கு மேல், 2,000 ரூபாய், ஒரு டன்னுக்கு மேல், 3,000 ரூபாய், இரண்டு டன்னுக்கு மேல், 5,000 ரூபாய் கட்டணத்துடன், முகவரி, தொழில் புரியும் இட சான்று, உற்பத்தியாளர் எனில், கட்டடத்துக்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். டிச., 31க்குள் பதிவு, உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகத்தில் பல்லி சாம்பார் : பெண் வாந்தி
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சல், 28. நேற்று, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை பார்க்க வந்த இவர், அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டார். பாதி சாப்பிட்ட போது, சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். உடனே, வாந்தி எடுத்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி, அவர் யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
தகவலறிந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவை மாதிரி எடுத்து, பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு கூடத்துக்கு, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Posts (Atom)