பரமக்குடி, மார்ச் 28:
பரமக்குடி நகர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள், ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பரமக்குடியில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளில் விற்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள்ள மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மசாலா பொருட்கள், பேரிச்சம்பழம் ஆகியவற்றில் தயாரிப்பு தேதி, முடிவு தேதி இல்லை. சில பாக்கெட்டுகளில் இந்த தேதி பிரின்ட் செய்யப்பட்டிருந்தாலும், அவை காலாவதியான பின்னர, அந்த தேதிகளை அழித்து விடுகின்றனர். பொதுமக்களும் இந்த முறைகேட்டை கவனிக்காமல், இந்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு காலாவதியான பொருட்களை வாங்கி சென்று சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். எதனால் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை கூட கிராம மக்கள் உணர்வதில்லை.
வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் மட்டுமே, இந்த உணவுப்பொருட்களால் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்கின்ற னர்.
எனவே பரமக்குடி நகர் பகுதியில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்து வரும் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்ற னர்.
பரமக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில், நகர் பகுதியில் கிராம மக்கள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் உள்ள கடைகளிலும், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை அருகே உள்ள கடைகளிலும் காலாவதியான உணவுப்பொருட்கள், குளிர்பானங்களை கடைக்காரர்கள் விற்பனை செய்கின்றனர். பஸ்களை பிடிக்க செல்லும் அவசரத்தில் செல்லும் பயணிகள் இந்த உணவுப்பொருட்களின் காலாவதி தேதியை பார்ப்பதில்லை. இதனால் கிராம மக்களிடம் கடைக்காரர்கள் தைரியமாக காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
மேலும் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை மிக குறைந்த விலைக்கு கடைக்காரர்களிடம் மொத்த வியாபாரிகள் விற்பனை செய்து விடுகின்றனர். தெரிந்தே இந்த முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.