திருவாரூர்: அயோடின் கலக்காமல் உப்பு உற்பத்தியில் ஈடுபடுவோரின் குத்தகை உரிமைத்தை உப்புத்துறை ரத்து செய்ய நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், தமிழகம் முழுவதும் உள்ள நுகர்வோர் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, அயோடின் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆய்வு பணியை தமிழகம் முழுவதும் செய்து வருகின்றது. இந்த ஆய்வுக் குழு உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம திருவாரூர் ஹோட்டல் செல்வீஸ்-ல் தலைவர் பிறை. அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
Micronutrient Initiative India நிறுவன திட்ட மேலாளர் சையத் முன்னிலை வகித்தார். ஃபெட்காட் தலைவர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். பயிற்சியை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் துவக்கி வைத்து விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார். திருவாரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலுசாமி மற்றும் அன்பழகன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
இதில் பேசிய அதிகாரிகள், ''உப்புத்துறைக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனங்கள் உப்பை உற்பத்திச் செய்து வருகின்றனர். அயோடின் இல்லாமல் உப்பு தயாரிப்பில் ஈடுபடும் தனியார் உப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
தரம் குறைவான உணவுப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை அபராதத் தொகை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் வழி வகுத்திருக்கின்றது. ஆனால், தரமற்ற உப்பு தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அபராதத் தொகை வெறும் ரூ.500 முதல் ரூ.5000 வரை விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த விதிமுறை மாற்றம் காண வேண்டும்'' என்றனர்.
மேலும், ''மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர். அதுபோல நுகர்வோர் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கும் இரண்டு பிரதிநிதித்துவம் வழங்கி உத்திரவிட வேண்டும்
தோல் பதனிடுதல், மீன் பதப்படுத்துதல் போன்றவற்றிற்காக விற்கப்படும் உப்பில் அயோடின் சேர்க்க வேண்டியதில்லை. இதனைப் பயன்படுத்தி உப்பு விற்பனையாளர்கள் 'பதப்படுத்துவதற்கான உப்பு' என்ற போர்வையில் உணவிற்கான உப்பை அயோடின் சேர்க்காமல் விற்பனை செய்கின்றனர். எனவே, பதப்படுத்துவதற்கான உப்பு 2 கிலோ அல்லது அதற்கு மேல் உள்ள அளவில் மட்டுமே விற்பனை செய்யப்படல் வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.
சரியான முகவரி இல்லாமல் போலியான பெயர்களில் அயோடின் சேர்க்காத உப்பு மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் எடையளவு அலுவலர்கள் முன்வர வேண்டும்.
2009–ம் ஆண்டு முதல் சுகாதார ஆய்வாளர்களுக்கு உப்பில் உள்ள அயோடின் அளவை கண்டறியும் பரிசோதனை கிட் வழங்கப்படாமல் உள்ளதால் சுகாதார ஆய்வாளர்கள் அயோடின் அளவை பரிசோதிக்க இயலாமல் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் உடனடியாக இந்த பரிசோதனை கிட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த நுகர்வோர் அமைப்பு குழு பிரதிநிதிகள் தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் கடைகளில் 2305 உப்பு மாதிரிகளும், 297 நியாயவிலைக் கடைகளில் உப்பு மாதிரிகளும், 480 அங்கன்வாடி மையத்தில் உப்பு மாதிரிகளும், 92 உப்பு மாதிரிகள் உப்பு உற்பத்தி பகுதியிலும் எடுத்து ஆய்வு செய்ததில் 56 சதவீத உப்பு மாதிரிகளில் மட்டுமே போதுமான அளவு அயோடின் கலக்கப்பட்டுள்ளது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
இதில் கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 50 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின் உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட 1332 கல் உப்பில் 33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது. இந்த கல் உப்பினைதான் பெரும்பாலான கிராமப்பகுதி கடைகளில் விற்பனைக்கு உள்ளது. இந்த கல் உப்பினை உணவுப் பாதுகாப்புத்துறை தொடர்ந்து ஆய்வு செய்து மக்களுக்கு தரமான அயோடின் உப்பு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
மாவட்டங்களில் ஒரு சில நியாயவிலைக் கடைகளில் மட்டுமே தரமான உப்பு குறைந்த விலையில் கிடைக்கின்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் இந்த உப்பு கிடைக்க தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மோகன் ராஜ் அயோடின் உப்பின் அவசியத்தை விளக்கும் சுவரொட்டியை வெளியிட்டு அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.