துரைப்பாக்கம், டிச.4:
கடைகளில் பதுக்கி வைத்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.
தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலை பொருட்கள் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு கடையில் அதிகஅளவு பதுக்கி வைத்து சென்னை, புறநகரில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அலுவலர் லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அங்கு நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த 1200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம்.
அவை மினி லாரியில் ஏற்றி நேற்று பெருங்குடி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில், பொக்லைன் மூலம் குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி புகையிலை பொருட்கள் போடப்பட்டு அழிக்கப்பட்டன.
இதேபோல, வடசென்னை பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, காசிமேடு எஸ்என் செட்டி தெரு, தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு உள்பட பல பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா ஆகியவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விதிகளை மீறி குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து குட்கா பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.