நாகர்கோவில், அக்.8:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய ஓட்டல்கள் சிலவற்றில் சுகாதாரமின்றி உணவுகள் தயாரிக்கப் படுவது தெரிய வந்துள்ளது. அதிகாரிகள் சில ஓட்டல்களுக்கு 15 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் ஒரு சில ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் சாலோ டீசன் தலைமையில் அலுவலர்கள் சங்கர நாராயணன், அய்யப்பன், குமார் பாண்டியன், சங்கர், சிதம்பர தாணு ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் வடசேரி பஸ் நிலைய ஓட்டல்கள், டீக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் டீ கடைகள் சிலவற்றில் கலப்பட தேயிலை பயன் படுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் வடைகள் மற்றும் பலகாரங்கள் திறந்த வெளியில் ஈ மொய்க்கும் வகையில் விற்பனைக்கு இருந்தன. அதிகாரிகளை பார்த்ததும் பிளாஸ்டிக் பேப்பர்களை வைத்து ஒரு சில கடைகளில் மூடினர். இதை பார்த்த அதிகாரிகள் அந்த வடைகள் மற்றும் பலகார ங்களை கைப்பற்றி குப்பையில் கொட்டி அதன் மேல் பினாயில் ஊற்றினர். காலாவதியான குளிர்பான ங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு இருந்தன. அதையும் அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள், புகையிலை பாக்கெட்டுகளும் விற்பனைக்கு இருந்தன. அதை அதிகாரிகள் கைப்பற்றி தீ வைத்து அழித்தனர். அதிகாரிகளின் இந்த சோதனையால் வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சாலோ டீசன் கூறுகையில், இனி வாரந்தோறும் இது போன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப் படும். இந்த சோதனையில் 6 ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த ஓட்டல்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அவர்கள் குறைபாட்டை சரி செய்யா விட்டால் சீல் வைக்கப்படும். பஸ் நிலையத்தில் ஓட்டல்கள் நடத்த உணவு பாதுகாப்பு துறையிடம் லைசென்சு பெறாமல் உள்ளனர். இதற்கான லைசென்சை உடனடியாக அவர்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வர இருப்பதால், இனி சிறிய ஓட்டல்கள் மட்டுமின்றி பெரிய ஓட்டல்கள், பேக்கரிகளிலும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார்.
இஷ்டத்துக்கு தீபாவளி பலகாரம் தயாரிக்க தடை
உணவு பாதுகாப்பு அலுவலர் சாலோ டீசன் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது :
தீபாவளி பண்டிகை வர இருப்பதால் ஆங்காங்கே சுவீட் வகைகள் தயாரிக்கப்படும். இது போன்ற சுவீட் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். எந்த இடத்தில் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி சுகாதாரமற்ற முறையில் இனிப்பு வகைகள், பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் இது பற்றிய புகார்களை உணவு பாதுகாப்பு துறைக்கு தெரிவிக்கலாம் என்றார்.