தமிழகத்தில், 'மேகி' உட்பட, நான்கு நிறுவனங்களின், நுாடுல்ஸ் விற்பனைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது; கையிருப்பு சரக்குகளை உடனே திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது.
சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும், உணவுப் பொருளில், கிட்டத்தட்ட, 30 ஆண்டு காலமாய் இடம் பிடித்துள்ளது, 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'மேகி' நுாடுல்ஸ். இதனால், இதன் விற்பனை படு வேகமாக அதிகரித்தது .இந்நிலையில், 'மேகி' நுாடுல்சில் உள்ள காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட, அதிகம் உள்ளது, சில மாநிலங்களில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து, சோதனை செய்து, அவை உணவு மற்றும் தர நிர்ணய சட்டத்தில், வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியும்படி, உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தமிழகம் முழுவதும், 65 நுாடுல்ஸ் உணவு மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். சென்னையில் எடுக்கப்பட்ட, 17 உணவு மாதிரிகளில், ஏழு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன.ஏழு மாதிரிகள் முடிவில், ஆறு மாதிரிகளில், காரீயத்தின் அளவு, உணவு பாதுகாப்பு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, 10 லட்சத்திற்கு, 2.5 பி.பி.எம்., - பார்ட்டிக்கிள் பெர் மில்லியன் - என்ற அளவை விட, அதிகம் இருப்பது தெரிய வந்தது.'நெஸ்லே' நிறுவனத்தின், 'மேகி நுாடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நுாடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நுாடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுாடுல்ஸ்' ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயத்தின் அளவு, அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நுாடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் மீது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, பிரிவு, 30-2-ஏ கீழ், இந்நிறுவனங்கள், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, தமிழகத்தில் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நுாடுல்ஸ் உணவுப் பொருட்களை, விற்பனையில் இருந்து, உடனடியாக திரும்பப் பெறவும், சம்பந்தப்பட்ட நூடுல்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
வணிகர்கள் வரவேற்பு:
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:'மேகி நுாடுல்ஸ்' சாப்பிட ஏற்றதல்ல என, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதால், தமிழக அரசு அவற்றை விற்க, தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மக்கள், 30 ஆண்டுகளாக விளம்பரங்களை நம்பி, இவற்றை வாங்கி உள்ளனர்.இவற்றில் நடித்த நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின், அனைத்து உணவுப் பொருட்களையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்வதில்லை.முறையான ஆய்வுக்கு உட்படுத்தினால், பெரும்பாலான நிறுவன தயாரிப்புகள் தடை செய்யும் அளவில் தான் இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'மேகி நுாடுல்சை, தமிழக அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோல், லேஸ், குர்குரே, பிங்கோ, சீட்டோஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தடை செய்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆய்வு:
நாடு முழுவதும் மேகி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க, மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதையடுத்து, சென்னையிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 'மேகி நுாடுல்ஸ்' மாதிரிகளை சேகரித்தனர். அபிராமபுரம், மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் உள்ளிட்டபகுதிகளில் உள்ள தனியார் கடைகளில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 'மேகி நுாடுல்ஸ்' மாதிரிகளை சேகரித்து, ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
நடிகையருக்கு 'சம்மன்' :
' மேகி நுாடுல்ஸ்'சை, தடை செய்ய கோரி தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், மதுரை நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி ஜெ.ஜெயராமன் மற்றும் உறுப்பினர் எம்.முருகேசன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், 'மேகி விளம்பர துாதர்களாக நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர், ஜூலை 6ம் தேதி, ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர்."
நுாடுல்ஸ் தயாரிப்பில் கலக்கப்படும் பொருட்கள்:
கோதுமை மாவு, வெங்காயத் துாள், சாதா உப்பு, சுவை கூட்டும் உப்பான மோனோசோடியம் க்ளூட்டாமேட், நுாடுல்சில் பூரிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் ஆகியவை. இது தவிர, காரீயம் தனியாகக் கலக்கப்படுவதில்லை. ஆனால், வெளிக் காரணிகள், காரீயத்தை துகள் வடிவில், நுாடுல்சில் சேர்த்து விடக் கூடும் என, மும்பை இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவன அதிகாரி உதய் அன்னபுரே கூறுகிறார்.அவர் கூறுகையில், ''ஆலைகளின் காரீய கழிவுகள், மோட்டார் வாகனப் புகை ஆகியவை, நுாடுல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலந்திருக்கலாம். நுாடுல்ஸ்சை பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் உலோகக் காகிதங்களிலும், காரீயம் படர்ந்திருந்து, அவை நுாடுல்சுடன் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. நுாடுல்சுக்குப் பயன்படுத்தப்படும் மசாலா பொடியில் கலக்கப்படும் மிளகாய், வெட்ட வெளியில் விளையும்போது, காரீயத் துகள்கள் அதன் மீது படர்ந்து, அது அப்படியே அரைபடும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கலாம்,'' என்கிறார்.''எதுவாக இருந்தாலும், இவ்வளவு ஆண்டு காலமாய், விழிப்புணர்வு இல்லாமல் இருந்த, தயாரிப்பாளர்களும், நுகர்வோரும், இந்த நேரத்தில் விழிப்படைந்தது, அனைத்து தரப்பினருக்கும் நல்லதே,'' என்கின்றனர் உணவு வல்லுனர்கள்.