Nov 19, 2013

காலாவதி, தடை செய்த 30ஆயிரம் உணவு பொருள் பறிமுதல் சுகாதாரமற்ற கடைகளுக்கு எச்சரிக்கை

ஊட்டி, நவ.19:
நகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு தரமில்லாத, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுகாதாரமற்று இயங்கிய பேக்கரியை மூட உத்தரவிட்டனர்.
ஊட்டி நகராட்சி பகுதி ஏடிசி முதல் மத்திய பஸ் நிலையம் வரையில் சுமார் 60 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி தலைமையில் ஆய்வாளர்கள் சிவக்குமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். டீ கடை, ஓட்டல், பேக்கரி, மளிகை கடை, டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடந்தது. இதில், சுகாதாரமற்று இயங்கி பேக்கரியை மூட உத்தரவிட்டனர். பின்பு பேக்கரி முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே திறக்க அனுமதியளித்தனர்.
இந்த சோதனையில், தரமில்லாமல் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கலாவாதியான மசாலா பொருட்கள், உற்சாக பானங்கள், குளிர் பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதவிர தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்னர்.
கலாவாதியான பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. ஆனால், சிலர் தொடர்ந்து விற்பனை செய்கின்றனர். சுகாதாரமான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். சில கடைகளில் தொடர்ந்து சுகாதாரமில்லாத உணவு வகை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை உட்கொள்ளும் பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வணிகர்கள் சுகாதாரமான உணவு பொருட்கள், தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
கடைகள் மற்றும் ஓட்டல்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை தயாரிப்புக்கள் விற்பனை செய்யக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணது பாதுகாப்பு அலுவலர் ரவி தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் பான் மசாலா விற்பனை படுஜோர் அதிரடி காட்டுவார்களா அதிகாரிகள்

உத்தமபாளையம், நவ.19:
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், தேனி, போடி பகுதிகளில் வர்த்தகம் அதிகளவு நடைபெறுகிறது. இங்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பான் மசாலா, புகையிலை பொருட்களை விற்க தமிழக அரசு தடை விதித்தது.
ஆனால் தடையை மீறி பல இடங்களில் பான் மசாலா பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. நாள்தோறும் மூடை, மூடையாக தேனி மாவட்டத்திற்கு இந்த பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இதனை அதிகாரிகள் கண்டும், காணாதது போல உள்ளனர். கடைகளில் அடிக்கடி ஆய்வு செய்து பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் அயோடின் கலக்காத உப்பு, அசைவ ஓட்டல்களில் அஜினமோட்டா கலந்த உணவுகள் விற்கப்படுகின்றன. இதுதொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள மனு: தேனிமாவட்டத்தில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையால் கலப்பட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. தடைசெய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா, விற்பனைக்கும் பஞ்சமில்லை. எனவே இதனை தடுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

DINAMALAR NEWS