இதையெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்காதீங்க!
ஆரம்பத்தில் மருந்தையும் சமைக்காத உணவையும் குளிர்ப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஃபிரிட்ஜ். இன்று நம் வீட்டில் பழைய சாதம், குழம்பு, காய்கறிகள் முதல் சாக்லேட், பீட்சா வரை பல பொருட்களைச் சுமந்துகொண்டிருக்கிறது. ஃபிரிட்ஜில் என்னென்ன பொருட்களை வைக்கலாம், எவ்வளவு நாள் வைத்திருக்கலாம், எவற்றையெல்லாம் வைக்கக் கூடாது போன்ற அடிப்படை விஷயங்கள், இன்று பல இல்லத்தரசிகளுக்குத் தெரிவதில்லை. அப்படி ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரியாமலேயே, தினமும் நாம் அவற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். உடனே பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், நாளடைவில் இந்த உணவுகள் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுத்துவிடும்.
ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத பொருட்கள் எவை எவை... ஏன் வைக்கக் கூடாது... எந்தெந்தப் பொருட்களை சேர்த்து வைக்கக் கூடாது போன்ற விவரங்கள் இங்கே...
சூடான பொருட்கள்
சூடான உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இதனால் அந்தச் சூடு, ஃபிரிட்ஜ்ஜின் உட்பகுதி முழுக்கப் பரவி, மற்ற உணவுகள் கெட்டுப்போக வழிவகுக்கும். காய்ச்சிய பாலை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இதனால் பால் கெட்டுவிடக் கூடும். ஃபிரிட்ஜில் வைத்த பாக்கெட் பாலை உடனே சூடுபடுத்தக் கூடாது. எடுத்து, சாதாரண நிலைக்கு அது வந்த பிறகுதான் சூடுபடுத்த வேண்டும்.
இறைச்சி
கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால், இவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இறைச்சிக்கு என தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜ் வந்துவிட்டன. அவற்றில் அசைவ உணவுகளை வைக்கலாம்.
பழங்கள்
பழங்களை நறுக்கிய பிறகு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும். கிருமிகளின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்குப் பதிலாக முழுப் பழங்களை வைத்து, தேவையானபோது நறுக்கி, சாப்பிடலாம்.
வெங்காயம்
வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும். அத்துடன் ஃபோலிக் ஆசிட், குவர்சிட்டின் சத்துக்கள் குறைந்துவிடும். வெங்காயத்தை வெளியே வைத்திருந்தாலே போதும்.
கெட்ச்சப் / சாஸ்
கெட்ச்சப், சாஸ் போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்கவேண்டிய அவசியமே இல்லை. அவை, விரைவில் கெட்டுப்போகும் தன்மையற்ற உணவுகள்.
ஊறுகாய்
ஓர் உணவுப் பொருளை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கும்போது, அதில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். ஊறுகாய்களை நீர் படாமல் மட்டும் பாதுகாத்து வைத்தால் போதுமானது. இவற்றை பிரிஜ்ஜில் வைப்பதால் கெட்டுப்போய் ஃபங்கஸ் உருவாகும்.
தேன்
தேன், பல வருடங்கள் ஆனாலும் கெட்டுப்போகாத இயற்கை உணவு. தேனை ஃபிரிட்ஜில் வைப்பதனால் அடர்த்தியாகி அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். வெளியில் வைப்பதுதான் நல்லது.
பூண்டு
ஃபிரிட்ஜில் பூண்டை வைத்தால் அதன் சுவை குறைந்துவிடும்; விரைவில் கெட்டியாகிவிடும். பூண்டை காகிதப் பையில் போட்டு, நீர்படாத இடத்தில் வைத்தாலே போதும்.
பிரெட்
பிரெட்டை ஃபிரிட்ஜில் வைத்திருந்தால் சீக்கிரமாகக் காய்ந்துவிடும். மாறாக, காற்றுப் புகாத பைகளில் வைத்துப் பாதுகாப்பதே போதுமானது.
டீ, காபி
சிலர் டீ, காபி போன்ற பானங்களை ஃபிரிட்ஜில் வைத்துவிடுவார்கள். வேண்டியபோதெல்லாம் எடுத்து சுடவைத்துக் குடிப்பார்கள். இது காபியின் சுவையைக் குறைத்துவிடும். சில நேரங்களில் அதிலுள்ள காஃபைன் விஷத்தன்மை அடையவும் வாய்ப்புள்ளது.
தர்பூசணி, முலாம்பழம்
தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிமுள்ள பழங்களை வெளியில் வைத்தாலே போதுமானது. ஒருவேளை நறுக்கிவிட்டால், ஓரிரு நாட்கள் மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம். அதற்கு மேல் அவை நீர்த்தன்மையை இழந்துவிடும்.
ஜாம்
ஜாம் தயாரிக்க்கப்படும்போதே பலவிதமான பதப்படுத்தும் முறைகளைத் தாண்டித்தான் கடைகளுக்கு வருகிறது. எனவே, சீக்கிரம் கெட்டுப் போகாது. அதை ஃபிரிட்ஜில் வைக்க அவசியமே இல்லை.
கறிவேப்பிலை, கொத்தமல்லி
கறிவேப்பிலை, கொத்தமல்லி ஃபிரிட்ஜில் வைப்பதால், விரைவில் வாடிவிடும்; சத்துக்களை இழந்துவிடும். இதற்கு மாற்றாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இந்த உணவுகளை வைக்கலாம். இதனால் அவை சீக்கிரம் வாடாமல் இருக்கும்.
மருந்துகள்
ஃபிரிட்ஜில் வைத்தே பயன்படுத்த வேண்டிய மருந்துகளான, இன்சுலின் வைப்பதற்கு என ஃபிரிட்ஜில் ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இவற்றின் அருகில் உணவுப் பொருட்கள், பூக்களை வைக்கக் கூடாது. மருந்துகளுக்குப் பக்கத்தில் மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவை வைக்கக் கூடாது. இதனால் மருந்தில், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளது.
உருளைக்கிழங்கு
ஃபிரிட்ஜில் உருளைக்கிழங்குகளை வைப்பதால், அதன் சுவை குறைந்துவிடும். உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதற்கு மாறாக காகிதப் பைகளில் உருளைக்கிழங்குகளை வைக்கலாம். பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை முற்றிலுமாக தவிரக்கவும். இது விரைவாக காய்கறிகளை அழுகிப்போகச் செய்துவிடும்.