சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, காலாவதியான பால், குடிநீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் தி.அனுராதா தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் மாம்பழக் கிடங்குகள், பழச்சாறு, குளிர்பான விற்பனை நிலையங்களில் கடந்த சில நாள்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேநீர்க் கடை, பழக்கடை, பழச்சாறு விற்பனை நிலையம், உணவகங்கள் உள்ளிட்ட சுமார் 80 கடைகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இதில், அந்தக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், பாக்குகள், போலியான குளிர்பானங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், 120 பாக்கெட் காலாவதியான குடிநீர், சுமார் 25 லிட்டர் காலாவதியான பால் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று தெரிவித்த அனுராதா, விதிகளை மீறி தொடர்ந்து செயல்படும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.