May 28, 2014

தூத்துக்குடியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7½ டன் மாம்பழங்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


தூத்துக்குடி, மே.28-

தூத்துக்குடியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7½ டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் மாம்பழங்கள் கால்சியம் கார்பைடு என்னும் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள பழக்கடையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன், சிவபாலன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினர்.
7½ டன் மாம்பழம் பறிமுதல்
அப்போது அந்த குடோனில் இருந்த மாம்பழங்கள் பழுக்க வைப்பதற்காக கால்சியம் கார்பைடு என்னும் ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 7½ டன் மாம்பழங்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த மாம்பழங்களை தருவைகுளம் பகுதிக்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டன.
நடவடிக்கை
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதாவது:-
மாம்பழங்களை பழுக்க வைப்பதற்காக கார்பைடு பயன்படுத்தும் போது, அசிட்டிலின் என்னும் கியாஸ் உருவாகும். இந்த கியாஸ் மாம்பழங்களை ஒரே நாளில் பழுக்க வைக்கும். இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதில் கரும்பு புள்ளிகளும் காணப்படும். இதனை சாப்பிடும் போது, தூக்கமின்மை, உணவு சாப்பிட முடியாத நிலை உருவாகும். தொடர்ந்து இந்த பழங்களை சாப்பிடும் போது, புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு மாற்று முறை குறித்து விளக்கி உள்ளோம். அதன்படி ஒரு சதவீதம் எத்திலீனை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கலாம். மாம்பழங்களின் தோலில் எத்திலீன் உள்ளது. இதனால் எத்திலீனை பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படாது. அதனை கடைக்காரர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று நன்கு பழுத்த மாம்பழங்கள், பப்பாளி, வாழைப் பழத்துடன் சேர்த்து மாங்காய்களை வைப்பதால் தானாகவே மாம்பழங்கள் பழுத்துவிடும். இதனை கடைக்காரர்கள் பயன்படுத்தலாம். இதனை தவிர்த்து தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறினார்.

No comments:

Post a Comment