புதுடெல்லி, நவ. 12:
பால், பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுராக் தாகூர், பால் பொருட்களில், வெள்ளை பெயின்ட், சோடா, சோப்புகள், ஷாம்பூ, யூரியா, ஸ்டார்ச் போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன என்றார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஒய். இக்பால், சிவ கீர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று கூறியதாவது:
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வது மிகக் கடுமையான குற்றம் ஆகும். இதைத் தடுக்க, உணவுப் பாதுகாப்பு சட்டத்தில், தேவையான திருத்தங்களை செய்யலாம். அல்லது புதிய சட்டத்தை கொண்டு வரலாம். கலப்படம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வகை செய்ய வேண்டும். இதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
பால் கலப்படத்தை தடுக்க மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாலில் கலப்படம் செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 4 வாரத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.