முன்பெல்லாம் காய்ச்சலோ உடல் நலிவோ ஏற்பட்டால்தான் பிரெட் எனப்படும் ரொட்டி வகையறாக்களைச் சாப்பிடுவோம். இப்போது நகரங்களில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவு, ரொட்டிகளால் அமைகிறது.
தீயில் வாட்டியோ, நெய் அல்லது வெண்ணெய் தடவியோ, நடுவே காய்கறிகளை வைத்துச் சாண்ட்விச் என்ற பெயரிலோ, முட்டை விரும்பிகளாக இருந்தால் பிரெட் ஆம்லெட் வடிவிலோ ரொட்டிகளைச் சாப்பிடுகிறார்கள். தெருவுக்குத் தெரு துரித உணவகங்களும் பேக்கரிகளும் நிறைந்திருக்கும் சூழலில் பிரெட், பர்கர், பாவ் பாஜி, பீட்ஸா போன்றவற்றைச் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
‘கோதுமை மாவு அல்லது மைதா மாவில் செய்யப்படும் ரொட்டி வகைகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவைதானே’ என்று படித்தவர்களும், ‘டாக்டரே சாப்பிடச் சொல்றாங்க. அதுல என்ன கெடுதல் இருக்கப் போகுது?’ என்று படிக்காதவர்களும் நினைப்பதில் தவறேதும் இல்லை.
சாத்தியமும் நிகழ்தகவும்
உலகச் சுகாதார மையத்தின் ஓர் அங்கமாகச் செயல்பட்டுவருகிறது புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு. இந்த அமைப்பு உலகம் முழுக்கப் பல்வேறு மாதிரிகளைப் பரிசோதித்து அவற்றில் மனிதர்களிடமும் விலங்குகளிடமும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்களை ஐந்து வகையாகப் பிரித்துப் பட்டியலிட்டிருக்கிறது.
புற்றுநோயை நிச்சயம் உருவாக்கும் ஆபத்து கொண்டவற்றை ‘கிரேட் 1’ என்று வகைப்படுத்தியிருக்கிறது. முதலுக்கும் கடைசிக்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கிறவற்றை 2A, 2B என்று இரண்டு வகையாகத் தரம் பிரித்திருக்கிறார்கள்.
அவை நோய் ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளவை (Possibly), நிகழ்தகவு கொண்டவை (Probably). இதில் புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியம் கொண்டவை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது பொட்டாசியம் புரோமேட். நிகழ்தகவு கொண்டவை என்ற பிரிவில் இடம்பெற்றிருக்கும் பொருட்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்பது நிச்சயமில்லை. அதனால் அதில் ஆபத்து குறைவு.
அனைத்திலும் ஆபத்து
புற்றுநோயை உருவாக்கும் என்பதால் உலக அளவில் பல்வேறு நாடுகள் பொட்டாசியம் புரோமேட்டுக்கு ஏற்கெனவே தடை விதித்திருக்கின்றன. ஆனால் பொட்டாசியம் புரோமேட், ஆக்ஸிஜனேற்றம் அடைந்து புரோமைடாகிவிடுவதால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்ற சமாதானத்துடன் இந்தியா அதன் பயன்பாட்டுக்கு அனுமதியளித்திருந்தது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவைத் தொடர்ந்து உண்ணும் பொருட்களில் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI).
உத்தரவாதம் என்ன?
பிரெட் வகைகளில் மட்டுமல்லாமல் காபியில் தொடங்கி அழகு சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் போன்ற நாம் தினமும் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களிலும் பொட்டாசியம் புரோமேட் இருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு, கேடு விளைவிக்கும் பொருட்களை நிச்சயம் தடை செய்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தியும் சாப்பிட்டும் வருகிறார்கள்.
இப்படித் திடீரென வெளியாகும் ஆய்வக முடிவுகள் அந்த நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன. இன்னும் எத்தனை வேதிப்பொருட்கள் இப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் நாம் சாப்பிடும் பொருட்களில் நிறைந்திருக்கிறதோ என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
வேதிப் பொருட்கள் குறித்தோ அவற்றின் தீங்கு குறித்தோ அறியாத ஒரு சாதாரணக் குடிமகன் எந்த அடிப்படையில் ஒரு உணவைச் சாப்பிடுவது? அவருடைய நல்வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன?
“இந்த ஒரு வேதிப்பொருள் மட்டுமல்ல, கிட்டத்தட்ட நாற்பதாயிரம் வேதிப் பொருட்கள் உணவு தயாரிப்பிலும் பதப்படுத்துதலிலும் பயன்படுத்தப்படுகின்றன. உலக அளவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் இந்தியாவில் இன்னும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
மக்களுக்கும் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்துவதிலும் அவற்றைத் தடை செய்வதிலும் அரசும் தரக் கட்டுப்பாட்டு ஆணையமும் காட்டும் மெத்தனமே இதற்குக் காரணம்” என்று சொல்கிறார் பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து.
விழிப்புணர்வே மாமருந்து
மக்கள் விழிப்புடன் இருப்பதும் அறியாமையில் இருப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும் என்கிறார் அவர்.
“இன்று திரும்பிய பக்கமெல்லாம் வேதிப்பொருட்களின் ஆட்சி. நம் வீட்டுச் சமையலறையைக்கூட அவை விட்டுவைக்கவில்லை. சுவையூட்டிகள், மணமூட்டிகள், நிறமூட்டிகள், துரித உணவு வகைகள் என்ற போர்வையில் வேதிப் பொருட்கள் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.
தினசரிச் சமையலில் கூடுமானவரை செயற்கை வேதிப்பொருட்களைக் குறைக்க வேண்டும். உணவுப் பொருள் என்றால் ஒரு நாளுக்குள் அது கெட்டுப்போக வேண்டும். ஆறு மாதம் முதல் ஒரு வருடம்வரை கெடாமல் இருந்தால், அது எப்படி உண்ணத் தகுந்த பொருளாகும்?
கண்ணைக் கவரும் நிறத்திலும் வடிவத்திலும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் ஆரோக்கியத்துக்கான சாவு மணி என்பதை உணர வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே பிரெட், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது என்ற உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். நம் பாரம்பரியச் சமையலில் ஏராளமான அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடித்துவந்தாலே போதும், நலவாழ்வு வசமாகும்” என்கிறார் அனந்து.
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து
எந்தவொரு வேதிப்பொருளும் அளவுக்கு மிஞ்சும்போதுதான் ஆபத்து. அது பொட்டாசியம் புரோமேட்டுக்கும் பொருந்தும். இது சிறந்த ஆக்ஸிஜனேற்றி என்பதால் பிரெட் தயாரிப்பிலும் பேக்கரி துறையிலும் பொருட்களை உப்பச் செய்யவும், மிருதுவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பின்போது முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் அடையாமல் கசடாக இருக்கும் பொட்டாசியம் புரோமேட்டின் அளவு அதிகமாக இருந்தால், அது மனிதர்களிடம் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் அதிகம்” என்கிறார் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ஜான் மரிய சேவியர். பிரெட் தயாரிப்பில் 50 (p.p.m.) அளவிலும் பேக்கரி பொருட்களில் 20 (p.p.m.) அளவிலும் பொட்டாசியம் புரோமேட்டைப் பயன்படுத்தலாம் என அனுமதித்திருக்கிறது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI).
இந்த அளவுகள் நேர்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே என்கிறார் இவர். “உணவுப் பொருள் தயாரிப்பின் எந்த நிலையிலும் வேதி மாற்றம் ஏற்படலாம் என்பதால், பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் தொடங்கி ஒவ்வொன்றையும் ஆய்வுக்கு உட்படுத்தித் தரச் சான்றிதழ் வாங்குவது முக்கியம்.
உணவுப் பொருளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் குறிப்பிட்டால், அது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதால் குறியீடுகள் (Code) மூலம் குறிப்பிடுகிறார்கள். மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் குறியீடுகளைத் தவிர்த்துவிட்டு வேதிப்பொருட்களின் பெயர்களை அச்சிட்டால் தரத்தைச் சரிபார்த்து வாங்க முடியும்” என்கிறார் மரிய சேவியர்.
ஆனால் புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகள், நம் நினைப்பைத் தகர்க்கின்றன. ரொட்டி, பாவ், பர்கர், பன், பீட்ஸா போன்றவற்றில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக இந்த மையம் தெரிவித்திருக்கிறது.
“டெல்லியில் நாங்கள் பரிசோதித்த மாதிரிகளில் 84 சதவீத மாதிரிகளில் பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் இருப்பது கண்டறியப்பட்டது. எங்கள் ஆய்வக முடிவை உறுதி செய்வதற்காகத் தனியார் பரிசோதனை மையம் ஒன்றில் சோதனைக்கு அனுப்பினோம்.
அந்த முடிவு எங்கள் ஆய்வக முடிவை உறுதிசெய்திருக்கிறது” என்று சொல்கிறார் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இணை இயக்குநர் சந்திரபூஷன். இந்த ஆய்வு முடிவுக்கு ஆதரவாகப் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (IARC) வெளியிட்டிருக்கும் பட்டியலைச் சுட்டிக்காட்டுகிறது இந்த மையம்.