'மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, பரிசோதனை முறையில் சாகுபடி செய்யலாம்' என்று, கடந்த 18ம் தேதி, மத்திய அரசு அளித்த அனுமதி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, நம் உணவு பாதுகாப்பு குறித்தும், விவசாயம் குறித்து யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும், பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
உலகெங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் விவகாரம், சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. மரபணு மாற்று பயிர்களை, பெரு வியாபாரமாக, லாப வெறியோடு நோக்கும் சில பெரும் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் செல்லுபடியாகும், வெகு சில நாடுகளில் மட்டுமே, இந்த பயிர்கள் அறிமுகமாகி உள்ளன. உலகளவில், ஐந்து நாடுகள் மட்டுமே, 90 சதவீத மரபணுமாற்றுப்பயிர்கள் சாகுபடிசெய்யப்படுகின்றன. அதிலும், அமெரிக்கா மற்றும் கனடாவில், இத்தகைய பயிர்கள், கால்நடை தீவனத்திற்காக மட்டுமே, பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் மீது, அனைத்து வகையான உணவு பயிர்களிலும், மரபணு மாற்று முறையை திணிக்க, இந்த நிறுவனங்கள்முயற்சித்து வருகின்றன.
அப்படி திணித்தால் தான் என்ன? என்ன தான் நடந்துவிடும்?தங்கள் மகசூலில் இருந்து ஒரு பங்கு விதைகளை, அடுத்த சாகுபடிக்கு, விவசாயிகள் ஒதிக்கி வைப்பது வழக்கம். அதாவது, நெல் அறுவடை செய்யப்பட்டால், அதில் இருந்து ஒரு பங்கு, விதை நெல்லாக ஒதுக்கி வைக்கப்படும். இந்த அடிப்படை வழக்கமே, மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் சாத்தியமில்லை!ஏனெனில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான விதைகளை பெரிய தனியார் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. குறிப்பிட்ட மரபணு மாற்றங்களுக்கு, அவை அறிவியல் காப்பு உரிமை பெற்றுள்ளன. அதனால், ஒவ்வொரு முறையும், அவர்களிடம் இருந்து தான், அந்த விதைகளை வாங்க வேண்டும். மாறாக, விதைகளை சேகரித்து பயன்படுத்தி விட்டால், அதற்கு அந்த விவசாயி, சட்ட ரீதியாகதண்டனை பெறக் கூடும்.ஒரு சில நிறுவனங்கள், ஒரு படி மேலே சென்று, மரபணுவில் சில மாற்றங்களை செய்து, மலட்டு விதைகளையே உருவாக்கும் தன்மையுடைய பயிர்களை உருவாக்கி உள்ளன. இந்தப் பயிர்களின், விதைகளை சேகரித்தாலும், அவற்றை விதைத்தால் பயிரே முளைக்காது.
இதனால் விவசாயிகள், விதைக்காக எப்போதுமே அந்த நிறுவனத்தை தான் நம்பி இருக்க வேண்டும். அந்த நிறுவனம் முடிவு செய்வது தான் விலை; வைத்தது தான் சட்டம்.'சரி... நாங்கள் பாரம்பரிய முறையிலேயே தொடருகிறோம்; நிறுவனங்களை நம்புபவர்கள், எக்கடோ கெட்டு போகட்டும்' எனச் சொன்னால், அதில், பெரும் சிக்கல் உள்ளது. உதாரணத்திற்கு, ஒருவர் பாரம்பரிய முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு அடுத்து உள்ள வயலில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. மகரந்த சேர்க்கை மூலம் தான், கத்தரிப் பூ, கத்தரிக்காயாக மாற முடியும். மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் வயலில் இருந்து காற்று மூலம், பாரம்பரிய வயலுக்கு, அந்த மகரந்த மணிகள் வரக்கூடும். அதனால், பாரம்பரிய வயலிலும், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்கள் தான் உற்பத்தியாகும். ஒரு முறை இப்படி மாறிவிட்டால், அந்த மாற்றத்தை நீக்க முடியாது என்பது, அதிர வைக்கும் உண்மை.
இதனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை திறந்த வெளியில் பரிசோதனை செய்வதே, பெரும் அபாயமான விஷயம். இதன் மூலம், தாங்கள் தேர்ந்தெடுக்காத சாகுபடி முறை, விவசாயிகளின் மேல் திணிக்கப்படும்.
இன்றளவில், நம் நாட்டில், பருத்தி மட்டும் மரபணு மாற்று பயிராக அனுமதிக்கப்படுகிறது. பொதுவாக பி.டி., காட்டன் என்று அறியப்படும் இது, இந்திய பருத்தி சாகுபடியில் 95 சதவீத பங்கை பிடித்து உள்ளது. ராசி, பொன்னி, ரம்யா, போல்கார்ட் என, பல பெயர்களில் உலா வரும் இந்த பருத்தி விதை எல்லாம், ஒரே ஒரு அன்னிய நிறுவனத்தின் சொத்து. ஆம், மொன்சான்டோவினுடையது!
போகட்டும், இது உண்மையிலேயே நல்ல விஷயமாக இருக்கும் அதனால் தான், 95 சதவீத சந்தை பங்கை பிடித்து உள்ளது என்ற, வாதம் எழும். ஆனால், காற்று வீச்சு, மகரந்த சேர்க்கை, விளம்பரங்கள் உள்ளிட்ட காரணங்களால் தான், இது பிரபலமாக இருக்கிறது என்பது தான் உண்மை. இது நிஜமாகவே லாபகரமான விஷயமாக இருந்தால், இன்று நடக்கும் விவசாயிகள் தற்கொலைகளில், 60 சதவீதத்திற்கும் மேலானவை, பருத்தி விவசாயிகளின் தற்கொலைகள் என்பதற்கு, யார் பதில் சொல்லப் போகின்றனர்?நிலை இப்படி இருக்க, கத்தரிக்காய், வெண்டைக்காய், நெல் போன்ற உணவு பயிர்களி லும், மரபணு மாற்று விதைகள் நுழைந்தால், விவசாயிகளின் நிலை என்னவாகும்? இந்த பயிர்களின் மூலம் கிடைக்கும் உணவு பாதுகாப்பாக இருக்குமா? இதெல்லாம் முழுமையாக பரிசோதிக்கப்படாத விஷயங்கள்.இந்தியாவில் தான் பரிசோதனை நடக்கப் போகிறது! இந்திய மக்களின் மீது தான், பரிசோதனை நடக்கப் போகிறது! இதனால், இந்தியாவின் உயிரி பன்மயம் அழிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதை அனைத்து அரசியல்கட்சியினரும் நன்கு அறிவர். அதனால் தான், எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும், மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு, ஆட்சியில் அமர்ந்ததும், 'வேறு சில காரணங்களால்' இதை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, பா.ஜ., வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், எங்களுடன் தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து, எதிர்ப்பை தெரிவித்தனர்!ஆனால் இன்று? உணவு பாதுகாப்பு மூலம் நிலைநாட்டப்படும் இந்திய இறையாண்மைக்கே சவால் விடும் முடிவை பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு எடுத்து உள்ளது.
பரிசோதனைக்கு எதிர்ப்புகள்
*இவ்வளவு காலமாக, மரபணு மாற்று பயிர்களின் திறந்தவெளி பரிசோதனை குறித்த முடிவு, நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து, முன்பு சர்ச்சை எழுந்த போது, பார்லிமென்ட் வேளாண் நிலைக்குழு ஆய்வு நடத்தியது. அந்த குழுவின் அறிக்கை, கடந்த ஆண்டு வெளியானது. அதில், 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த தொழில்நுட்பம் அழிக்கும் என்பதால், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தேவை இல்லை' என, அழுத்தமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
*நம் நாட்டின், சிறந்த ஐந்துவிஞ்ஞானிகளை கொண்ட, சுப்ரீம் கோர்ட்டின் தொழில்நுட்ப ஆய்வுக் குழுவும், 'மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் அவற்றின் கள பரிசோதனை, நம் நாட்டிற்கு தேவையே இல்லை. அவற்றுக்கு நிரந்தர தடை வேண்டும்' என்று, சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்து உள்ளது.
*மத்திய வேளாண் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சொபோரி கமிட்டி, தன் ஆய்வு அறிக்கையில், மரபணு மாற்றப்பட்ட பயிர் கள பரிசோதனைகளில் நடந்த தவறுகளையும், கேடுகளையும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. அதுவும், நூற்றுக்கணக்கான வேளாண் பல்கலைகள், கல்லூரிகள், நிறுவனங்கள், நிர்வாகக் குழுக்கள் அடங்கிய தேசிய வேளாண் ஆய்வு கட்டமைப்பு பரிசோதனைகளில் நடந்த தூய்மை கேடுகளும், முறைகேடுகளும் முக்கியமானவை.
*இந்தியாவில் மரபணு பொறியிய லின் தந்தையான டாக்டர் புஷ்பா பார்கவா, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, வன்மையாக எதிர்க்கிறார். எந்த? விதமான ஒழுங்கு வழிமுறை கள் மற்றும் கண்காணிப்பு அற்ற இந்த, 'வளர்ச்சி,' இந்தியாவிற்கு தேவை இல்லை என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தாக உள்ளது. உலகள வில், பல விஞ்ஞானிகள், பல சோதனைகள் மூலம், 'இந்த தொழில்நுட்பம், இப்பொழுது விவசாயத்திற்கு தேவை இல்லை; இது பல, சீரிய பின் விளைவு கொண்டது' என்றுஎச்சரிக்கின்றனர்.
சிந்திக்க வேண்டியவை:
*சுப்ரீம் கோர்ட்டில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த வழக்கு முடியும் நிலையில் உள்ளது. இப்போது ஏன், மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும்?
*விவசாயம் ஒரு மாநில அரசின் அரசுரிமை. அதன் இறையாண்மையை பறிப்பது போல், இந்த களப்பரிசோதனை திணிப்பு, மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது.
*பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தேவை இல்லை என்றும், அதற்கு ஆதரவு கொடுக்கப்படாது என்றும் குறிப்பிட்டு இருந்தது. அது வெறும் ஏமாற்று வேலையா?
*மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோஹன் சிங் பதவியேற்ற முதல் நாளே, இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவதை கூறி, 'மரபணு பயிர்கள் தேவை இல்லை' என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். அந்த வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லையா?
*ஆர்.எஸ்.எஸ்., தொடர்புடைய அமைப்புகளான, சுதேசி ஜாக்ரன் மன்ச், பாரதிய கிசான் சங் மற்றும் பாரதிய கிசான் மோர்ச்சா ஆகியவை, கள பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அதற்கு மதிப்பு இல்லையா?
'கண்காணிக்கப்பட வேண்டும்':
கடந்த ஆட்சி காலத்தில், ஜெயராம் ரமேஷ், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது, இது குறித்து, நாடு முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தினார். அதன் அடிப்படையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அறிக்கை அளித்தார்.அதில், தற்போது, கள பரிசோதனைக்கு அனுமதி வழங்கி இருக்கும், மத்திய அரசின் அங்கமான, 'மரபணு பொறியியல் ஒப்புதல் குழு' போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்கள், சீரமைக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய முக்கிய விஷயங்கள் அரைகுறை ஒழுங்குமுறை நிறுவனங்களால் முடிவு செய்யப்படக் கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.கண்காணிக்கப்பட வேண்டிய இந்த ஒழுங்குமுறை நிறுவனம், புதிய ஆட்சி அமைந்தவுடன், தனது கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்கள் பற்றி, வழக்கமாக இணையதளத்தில் வெளியிட்டு வந்த குறிப்புகளை, தற்போது, வெளியிடுவதையே நிறுத்திவிட்டது.