அதிரடி ஆக்ஷன் ரிப்போர்ட்
அசைவப் பிரியரா நீங்கள்... ஒரு நிமிஷம்! சென்னை மக்களுக்கு 90 சதவிகித இறைச்சியை அளிக்கும் மாநகராட்சி இறைச்சிக் கூடத்தின் மோசமான சூழ்நிலையைப் பாருங்கள். இங்கிருந்து வரும் இறைச்சிதான் பெரும்பாலான கிச்சன்களுக்குப் போகிறது.
துர்நாற்றம் படிந்துகிடக்கும் இந்த இடத்துக்குள் மூக்கைப் பிடித்துக்கொண்டு நுழைந்தோம். நுழைவாயில் அருகே சாக்கடையில் கால்நடைகளின் ரத்தக்கழிவுகள் வழிந்தோடின. அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்களும் கைக்குட்டையை மூக்கில் கட்டியபடியே நின்றிருந்தனர். அங்கும் ரத்தம் தேங்கிக்கிடந்தது. உள்ளே வெட்டப்பட்ட மாடுகளின் தலைகள் குவியலாகக் கிடந்தன. மாட்டின் தோலை விரித்து அதில் இறைச்சியைப் பரப்பி விற்பனை செய்துகொண்டிருந்தனர்.
‘ஆட்டுத்தொட்டி’ என அழைக்கப்படும் இந்த இடம், திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பில் செயல்பட்டுவருகிறது. 1903-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப் பட்ட ஆட்டுத்தொட்டி, இப்போது ஒட்டுமொத்த வடசென்னைக்கும் தொற்றுநோயைப் பரப்பும் கூடமாகிவிட்டது. அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள், ஜூ.வி. அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தனர். “கெட்டுப்போன இறைச்சிகளைக் குவியல் குவியலாகப் போட்டு ஒரே துர்நாற்றம் வீசுகிறது’’ எனத் தாங்கள் தினம்தினம் அனுபவித்து வரும் அவஸ்தைகளை வேதனையுடன் சொன்னார்கள்.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த ஆட்டுத்தொட்டியில் தினமும் 3,500 ஆடுகளும் (ஞாயிறுகளில் 8,000 வரை), 150 மாடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவை, மருத்துவ சீலுடன் இறைச்சி வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. மூவாயிரம் பேருக்குமேல் தினமும் இங்கு வந்துபோகிறார்கள். தொழிலாளர் களின் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் மேல்! மழைக்காலத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கியதால் ஓரிரு நாள்கள் இறைச்சி வெட்டுவதைத் தள்ளிவைத்தார்கள். மழைக்குப் பிறகு ஏற்பட்ட சகதி அள்ளப்படாமல் கிடந்தது.
நாம் வந்த தகவலறிந்து, தொழிலாளர்கள் திரண்டுவந்து தங்கள் நிலையைச் சொன்னார்கள். சென்னை ஆடு இறைச்சி மொத்த வியாபாரிகள் சங்கப் பொருளாளர் ஸ்ரீராமுலு மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த கொட்டிலைக் காட்டினார்கள். ‘‘திறந்தவெளியில் ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டிலையில் மழைக்காலத்தில் சகதியில் சிக்கி, தினமும் பத்து ஆடுகள் வரை இறந்துபோகின்றன. ஆடுகள் குடிக்கத் தண்ணீர் வசதிகூட இல்லை. பாதுகாப்பான கொட்டகை அமைத்துத் தரும்படி, பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.
சென்னை மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சம்பத், அபோய் ஆகியோர் மாடு வெட்டும் இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். ‘‘மாடுகள் சில சமயங்களில் தொழிலாளர்களை முட்டித் தள்ளிவிடுகின்றன. படுகாயம் அடையும் தொழிலாளர்களை, உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துப்போக முடியவில்லை. ரிக்ஷா தொழிலாளர்கள், இறைச்சி விற்கும் பெண்கள், லாரி மற்றும் வேன் டிரைவர்கள், கிளீனர்கள், இறைச்சி வியாபாரிகள் எனப் பலரும் அதிகாலையில் இங்கே குவிகிறார்கள். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரோ, கழிப்பிட வசதியோ இல்லை. ஆட்டுத்தொட்டியைச் சுற்றிலும் முறையான கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததுதான், இங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேட்டுக்குக் காரணம்’’ என்றனர்
ஆட்டுத்தொட்டியை சுற்றி வந்தபோதே, தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவியுடன் தொடர்புகொண்டோம். ‘‘அருகில்தான் இருக்கிறேன். நேரில் வருகிறேன்’’ என்றார். சில நிமிடங்களில் வந்துசேர்ந்தார். அப்போது நேரம் காலை 9.30. மாட்டுக்கறி விற்றுக்கொண்டிருந்த ஜானகி என்கிற பெண்மணி, ‘‘அய்யா... இங்க பாருங்க, எப்படி ஈ மொய்க்குதுன்னு! போன வாரம் எலிக்காய்ச்சல் வந்து, படாதபாடு பட்டேன். நாங்க கடைபோட இங்கேயே இடம் ஒதுக்கித் தாருங்கள்’’ என்றார்.
‘‘ஒரு மாதம் முன்பு நான் அதிகாரிகளுடன் இங்கே வந்தேனே. அதன்பிறகு ஏதாவது சரிசெய்தார்களா?’’ எனத் தொழிலாளர்களிடம் கேட்டார் தாயகம் கவி. ‘‘எதுவுமே நடக்கவில்லை’’ எனத் தொழிலாளர்கள் சொல்ல... எம்.எல்.ஏ முகத்தில் கோபம் கொப்பளித்தது. மாடுகளை வெட்டும் கூடத்துக்கு முதலில் சென்றார். மேற்கூரை ஓடுகள் உடைந்து மிகவும் மோசமாக இருந்தது. நம் பக்கம் திரும்பி, ‘‘மாநகராட்சி அதிகாரிகளை நேரில் வரவழைத்து, ‘இடியும் நிலையில் உள்ள இந்தக் கட்டடத்தை உடனே இடித்துவிடுங்கள். இல்லாவிட்டால் தொழிலாளர்களுக்கு ஆபத்து’ எனச் சொன்னேன். ஒரு மாதம் ஆகியும் இடிக்கவில்லை. தொழிலாளர்கள் ஓய்வெடுக்க, அருகில் உள்ள ஓர் அறையை ஒதுக்கித் தரும்படிக் கேட்டேன். அதையும் இதுவரை செய்து தரவில்லை” என்றார்.
‘‘ஆட்டுத்தொட்டியின் ஒரு பகுதியில், பயோ கேஸ் முறையில் இறைச்சிக் கழிவுகளைச் சுத்திகரித்து, தண்ணீரை அருகில் உள்ள மாநகராட்சி பூங்காக்களுக்கு அனுப்பும் திட்டம் எப்படி நடக்கிறது?” என்று கேட்டபடி, அதைப் பார்வையிடச் சென்றார். அங்கிருந்த ஊழியர் ஒருவர், ‘‘டிசம்பரில் இது செயல்பட ஆரம்பிக்கும். தொட்டிகள், இணைக்கும் குழாய்கூட ரெடி. அருகில் அறை கட்ட வேண்டியதுதான் பாக்கி’’ என்றார். சுற்றியிருந்தவர்கள், ‘‘இவரு சொல்றதெல்லாம் நடக்காது’’ என்றனர். அந்த ஊழியர் ஏதேதோ சொல்லிச் சமாளித்தார்.
கழிவுநீர்த் தொட்டி அருகே எம்.எல்.ஏ-வை அழைத்துச்சென்ற சங்க நிர்வாகிகள், சுகாதாரச் சீர்கேடுகளைக் காட்டினார்கள். மாநகராட்சி ஊழியரிடம், ‘‘எப்போது சுத்தம் செய்தீர்கள்?’’ எனக் கேட்டார் எம்.எல்.ஏ. அவர் பதில் சொல்வதற்கு முன்பே, ‘‘எட்டு மாதங்கள் கடந்து விட்டன’’ என்றார்கள் தொழிலாளர்கள்.
ஒரு நிமிடம் யோசித்த எம்.எல்.ஏ, அங்கிருந்தவர்களுடன் இணைந்து ஆட்டுத் தொட்டியின் ஒரு பகுதியில் உட்கார்ந்துவிட்டார். ‘‘பலமுறை பொறுமையாகச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. இன்று ஒரு முடிவு தெரியாமல் நகர மாட்டேன். இங்கிருக்கற கழிவுகளை அகற்றணும். கழிவுநீர்த் தொட்டியை கிளீன் செய்யணும். அதுவரை இங்கேயே தொழிலாளர்களுடன் உட்கார்ந்திருப்பேன்’’ என்றார். உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது.
ஆட்டுத்தொட்டியில் வேலைபார்க்கும் பெண்கள், ‘‘ஒரு குடம் தண்ணீர்10 ரூபாய்க்கு வாங்குகிறோம்” என ஆரம்பித்து அவலங்களை எம்.எல்.ஏ-விடம் அடுக்கினார்கள். சங்க நிர்வாகிகளோ, ‘‘மூன்று டேங்குகளை எங்கள் செலவில் அமைத்து இரண்டு வருடங்களாச்சு. மெட்ரோ வாட்டரிடம் பலமுறை சொல்லியும், அவற்றில் தண்ணீர் நிரப்புவதில்லை’’ என்றார்கள்.
சம்பந்தப்பட்ட 72-வது வார்டு மெட்ரோ வாட்டர் அதிகாரியை எம்.எல்.ஏ போனில் அழைத்தபோது, ‘‘அது 70-வது வார்டில் வரும்’’ என்றார். 70-வது வார்டு அதிகாரியோ, ‘‘இல்லை. அது 72-வது வார்டுதான்’’ என்றார். குழப்பமான எம்.எல்.ஏ., இருவரையும் நேரில் வருமாறு அழைத்தார். வார்டு எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முடியாத நிலையில், உயர் அதிகாரியிடம் விஷயத்தைச் சொல்லி, ‘‘ஆட்டுத்தொட்டி டேங்குகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுங்கள்’’ எனக் கேட்டுக்கொண்டார்.
‘‘2009-ல், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகத் தளபதி மு.க.ஸ்டாலினும் மேயராக மா.சுப்பிரமணியனும் இருந்தார்கள். அப்போது பழைய ஆட்டுத்தொட்டியை நவீனமயமாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 2011-ம் ஆண்டுவரை பணிகள் நடந்தன. அ.தி.மு.க ஆட்சி வந்ததும், மொத்தத் திட்டத்தையும் முடக்கிவிட்டனர். இதுபற்றி சட்டசபையில் பேசியும் இதுவரை நோ ஆக்ஷன். இந்த ஆட்டுத்தொட்டியைச் சீரமைக்க என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கித் தர ரெடி. என் வேண்டுகோளை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளுமா?’’ எனக் கேட்டார்.
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்க முயன்றோம். முடியவில்லை. அடுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொள்ள முயன்றும் பேச முடியவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேச முடிந்தது. ‘‘ஆட்டுத் தொட்டி, மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ்தான் வருகிறது. எங்கள் துறையின் கீழ் வராது. நான் மாநகராட்சி கமிஷனரிடம் பேசி, சுகாதாரச் சீர்கேடுகளுக்கு உடனே நடவடிக்கை எடுக்கச்சொல்கிறேன்’’ என்றார்.
இதற்கிடையில், ஆட்டுத்தொட்டியில் எம்.எல்.ஏ-வின் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கேள்விப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிறிய ரக புல்டோசரையும், கழிவுநீர் அகற்றும் பணியாளர் களுடன் லாரியையும் அனுப்பிவைத்தனர். மின்னல் வேகத்தில் சுத்திகரிப்புப் பணிகள் நடந்தன. மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, ஆட்டுத்தொட்டியின் ஒரு பகுதியில் இருந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
‘‘மொத்தக் கழிவுகளையும் அகற்ற வேண்டும்’’ எனச் சொல்லிவிட்டு, போராட்டத்தை முடித்துக்கொண்டு எம்.எல்.ஏ புறப்பட்டார். சங்க நிர்வாகிகளும் குடியிருப்புவாசிகளும் நம்மைச் சூழ்ந்துகொண்டு ஜூ.வி-க்கு நன்றி சொன்னார்கள்.
நிரந்தரத் தீர்வுக்கு நிதி தருவதாக எம்.எல்.ஏ தாயகம் கவி சொல்லிவிட்டார்... மாநகராட்சி என்ன செய்யப் போகிறது?