Nov 25, 2017

உணவுப் புரட்சியின் மாயவலை..! துரித உணவுகள் வேண்டாமே

துரித உணவுகள்... இவற்றின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க, மேலை நாடுகளே இயற்கையான உணவுகளைத் தேடத் தொடங்கிவிட்டன. நாமோ இன்னமும் ஃப்ரைடு ரைஸ், பர்கர், பீட்ஸா... போன்ற துரித உணவுகளின் மாயவலையில் சிக்கிய மான்களாக அவதிப்படுகிறோம். விரைவில் இந்த மாயவலையைக் கிழித்துக்கொண்டு வெளிவராவிட்டால், நோய்களின் கூடாரமாக மாறிவிடும் நமது உடல்.
வரலாற்றுப் பாதை:
துரித உணவுகளின் வரலாற்றுப் பாதையை உற்று கவனித்தால், அவற்றுக்கும் நமது வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. வேறு சூழலில் வாழும் மக்களின் உணர்வுடனும் வாழ்வுடனும் தொடர்புகொண்டிருக்குமே தவிர, நமது வாழ்வுக்கும் உணர்வுக்கும் அவற்றோடு எந்தச் சம்பந்தமும் இருக்காது. ஆனால், இப்போது இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது, சீராக பயணித்துக்கொண்டிருக்கும் நமது உணவு வரலாற்றுப் பாதை, இனி திசைமாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது. நமது பாரம்பர்ய வரலாற்றுப் பாதையில் பயணித்து வரும் உணவுகள், நிச்சயமாக நோய்களை உண்டாக்காது. ஆனால், சமீபத்தில் நுழைந்து உணவுப் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருக்கும் துரித உணவுகள் உண்டாக்கும் நோய்களோ எண்ணிலடங்காதவை.
வாலிபருக்கு மாரடைப்பு!
சத்துக்கள் நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகளை அடித்து விரட்டிவிட்டு, துரித உணவுகளைப் பெருமைப்படுத்துகிறோம். `மினி சைஸ் சீஸ் சாண்ட்விச்’, `மீடியம் சைஸ் பர்கர்’, `லார்ஜ் சைஸ் ஃபேமிலி பீட்ஸா’... என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சைஸ் வாரியாகப் பிரித்து உண்கிறோம். நோய்களோ குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை. எழுபது வயது முதியவர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும், இருபத்தைந்து வயது வாலிபர் மாரடைப்பால் மரணம் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?! தவறான உணவுப் பழக்கத்தால், இளம் வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் அதிர்ச்சியான செய்திகள் நமது செவிகளில் கேட்கத் தொடங்கிவிட்டன. தவறான உணவுப் பட்டியலில், துரித உணவுகள் முக்கிய பங்கு வகிப்பவை.
உடல்பருமன்:
துரித உணவுகள் நமது சுவை உணர்ச்சிகளுக்கு மகிழ்ச்சியூட்ட மட்டும் தயாரிக்கப்படுபவை. உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய எந்தவிதமான ஆரோக்கியக் கூறுகளும் அவற்றில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கலோரிகள் நிறைந்த உணவுகளாக இருப்பதால், உடலை விரைவாக பருக்கச் செய்யும் திறன் வாய்ந்தவை. உடல்பருமன் நோய் அதிகரிப்பதற்கு இவை முக்கியப் பங்காற்றுகின்றன. ஒரு முழு பீட்ஸா உட்கொண்டால், உடலில் சேரும் கலோரிகளைக் கரைக்க பல கிலோமீட்டர் தொலைவு வேகமாக ஓடவேண்டியிருக்கும். நாம் முதலில் சில மீட்டர்களாவது தினமும் நடக்கிறோமா என்பதே கேள்விக்குறி. பின் எப்படித் தேவையில்லாமல் அதிகரித்த கலோரிகளை வெளியேற்றுவது. இந்த கலோரிகள், உடலில் கொழுப்பு சேர்மானத்தை அதிகரிக்கச்செய்து, கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.
சர்க்கரைநோய்... ஊட்டசத்துக் குறைபாடு!
அவசரத்துக்கு ரெடிமேடாகக் கிடைக்கும் துரித உணவுகள், அவசர அவசரமாக நோய்களை உண்டாக்கும். இன்சுலின் சுரப்பதில் பாதிப்பை உண்டாக்கி, சர்க்கரைநோயை துரித உணவுகள் உண்டாக்குவதாக அமெரிக்காவின் `National Institutes of Health (NIH)’ வெளியிட்ட ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. பத்து வயது சிறுவனுக்குக்கூட இரண்டாம் வகை சர்க்கரைநோய் (Type – 2 Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பிள்ளைகள் தொடர்ந்து துரித உணவுகளைச் சாப்பிடும்போது, உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல், ஊளைச்சதை மட்டுமே வளரிளம் பருவத்தில் அதிகரிக்கும். உடல் வளர்ச்சிரீதியில் பல செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
சமாதானம் செய்ய பீட்ஸா, பர்கர்!
பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த, பள்ளிக்குப் போகும் வழியில் பீட்ஸா, பர்கர்களை வாங்கிக் கொடுக்கும் சில பெற்றோர்கள், தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. நீங்கள் குழந்தைகளைச் சமாதானப்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொண்டு, அவர்களுக்கு நோய்களை வாங்கிக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு எதிரி ஆகலாமா? ’இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வா, ஈவினிங் உனக்கு ஒரு பர்கர் வாங்கித் தரேன்’ என்று பர்கர்களை ஊட்டி வளர்த்தால், பர்கர் போன்ற உருண்டையான தோற்றத்தில் உங்கள் குழந்தைகளை விரைவில் பார்க்கலாம். கண்டிப்புடன் இவை போன்ற உணவுகளுக்கு தடை விதிப்பதில் எந்தப் பாரபட்சமும் பெற்றோர்கள் காட்டக் கூடாது.
உப்பு… வெள்ளை சர்க்கரை…
துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தக் குழாய்களில் கொழுப்புத் திட்டுக்கள் படிந்து, அவற்றின் சுற்றளவைக் குறுக்கி, குருதி சுற்றோட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி, இதய நோய்களை உண்டாக்கும். இதிலிருக்கும் உப்புகள் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் நேரடியாக உப்பின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் நடுவயது உயர் ரத்த அழுத்த நோயாளிகள், மறைமுகமாக உப்புகள் நிறைந்த துரித உணவுகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அறியாமை. அளவுக்கு அதிகமாக உப்புகளோடு வெள்ளைச் சர்க்கரையும் கலந்த சுவையூட்டும் உணவுகள், மனதுக்கு களிப்பை உண்டாக்கி, ஆரோக்கியத்துக்கு வேட்டுவைத்துவிடும்.
ஹார்மோன்கள் பாதிப்பு!
ஹார்மோன் சமநிலையைத் தகர்த்து, உடலின் செயல்பாடுகளில் பல்வேறு மாறுதல்களை துரித உணவுகள் உண்டாக்கிவிடுகின்றன. இளம் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம் ’ஜங் ஃபுட்ஸ்’ எனப்படும் துரித உணவுகள்தாம். எள்ளுருண்டைகளையும், உளுத்தங்களியையும் அதிகமாகச் சாப்பிட்ட முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு சினைப்பைக் கட்டிகள் என்றால் என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை.
பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகள்...
முறையான உணவியலை கற்றுக்கொடுக்கவேண்டிய பள்ளிகள், தவறான உணவுகளை அறிமுகப்படுத்துகின்றன. சில பள்ளி கேன்டீன்களில் அதிகம் விற்பனையாகும் சிற்றுண்டி பீட்ஸாவாகத்தான் இருக்கிறது. எண்ணெயில் பொரித்த சிப்ஸ் வகையறாக்களும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்களும், சீஸ் தடவிய பர்கர், பீட்ஸாக்களும் சில பள்ளிகளின் உணவுப் பட்டியலில் தவறாமல் இடம்பெறுகின்றன. அதுவே மறுபுறம், அரசுப் பள்ளிகளில் இருக்கும் சத்துணவு கேன்டீன்களில் கிடைக்கும் கீரைகளும், காய்களும், முட்டைகளுமே எளிமையான சிறந்த தேர்வு.
உணவியல் கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் தேவை!
லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு கல்வி கற்றுக் கொடுக்கும் பல தனியார் பள்ளிகள், உணவு விஷயத்தில் தேர்ச்சி பெறுவதில்லை. பள்ளிப் பருவத்தில் கற்றுக்கொண்ட தவறான உணவியல் பழக்கம், வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது. முறையற்ற உணவியலைக் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் படிக்கும் நிறைய குழந்தைகளுக்கு உடல்பருமன் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்வியோடு சேர்த்து, உணவியலையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நாடுவது சிறந்தது. ’துரித உணவுகளை அறிமுகப்படுத்தாமல் வளர்த்தாலும், பள்ளிகளில் துரித உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்’ என்பது பெற்றோர்களின் ஆதங்கம். இப்போது துரித உணவுகளுக்கும், பன்னாட்டுக் குளிர்பானங்களுக்கும் பல பள்ளி வளாகங்களில் தடைவிதிக்கத் தொடங்கியிருப்பது ஆறுதல் தரக்கூடிய விஷயம்.பீட்ஸா, பர்கர்களில் இருக்கும் அசைவத் துண்டுகள் எப்போது சமைக்கப்பட்டது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? துரித உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை அறிந்துவைத்திருக்கிறோமா? ஒரு மனித உடலுக்குள், பல வகையான நோய்கள் வாடகையின்றி குடியிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தோமா? உடல் உழைப்புமில்லாமல், உணவுத் தேர்வும் சரியாக இல்லாமல், அறியாமையால் நமது உடலைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறோம். மாற்றம் தேவை. கொஞ்சம்கூட யோசிக்காமல், துரித உணவுகளை நம் எண்ணங்களில் இருந்து அழித்தாக வேண்டும். ஒவ்வொருவரும் துரித உணவுகளின் பாதிப்புகளைப் பிறருக்கு எடுத்துக்கூறுவது சமுதாயத்துக்கு செய்யும் நல்ல சேவையாக இருக்கும். தவறான உணவியலுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு சமூக சேவை செய்வோம்!

No comments:

Post a Comment