`பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’... எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்... எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்... தெரிந்துகொள்வோமா?
`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.
தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்... நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா... என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது.
வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா... எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்...
``இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். இரண்டாம் உலகப் போர்... அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.
கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா... அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும்.
ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!’’ என்கிறார் உமர் பாரூக்.
ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.
பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்... வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது.