Jul 6, 2014

DAILY THANTHI NEWS


ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்'

ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா கூறினார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற வட்டார ஸ்டார்ச், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சதாசிவம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி.அனுராதா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்யக்கூடாது.
மரவள்ளிக் கிழங்கு தோலை சுத்தமான நீரில் அரைவை செய்யவேண்டும். ரசாயனம், திராவகம் போன்றவைகளை பயன்படுத்தக்கூடாது. வரும் 10 -ஆம் தேதி முதல் ஆலைகளில் பிரஷர் மோட்டார்களை பயன்படுத்தக்கூடாது என்று அவர் உற்பத்தியாளர்களைக் கேட்டுக் கொண்டார். சேகோ ஆலை அதிபர்கள் தொழிலில் உள்ள பிரச்னைகளை எடுத்துக் கூறினர்.
இதைத் தொடர்ந்து டி.அனுராதா கூறியது:
ஜவ்வரிசி உற்பத்தி ஆலை உரிமையாளர்கள் உணவுப் பாதுகாப்பு முறைகேற்ப ஜவ்வரிசியைத் தயாரிக்க வேண்டும். மீறினால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டும். அதையும் மீறினால் ஆலைக்கு "சீல்' வைக்கப்படும். கலப்படத்தைத் தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார் அவர். இந்தக் கூட்டத்தில் சங்கச் செயலர் டி.சி.எஸ்.வெங்கடேஷ், பொருளாளர் பிரபாகரன்,
ஆலை அதிபர்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சுந்தர்ராஜன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலப்படம் இருந்தால் சேகோ ஆலைக்கு "சீல்' உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை

ஆத்தூர்: ""உணவாக பயன்படும், ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பில், ரசாயனம் மற்றும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால், சேகோ ஆலைக்கு, "சீல்' வைக்கப்படும்,'' என, சேகோ உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
ஆத்தூர், புதுப்பேட்டையில் உள்ள, ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டிடத்தில், ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி தாலுகாவை சேர்ந்த சேகோ ஆலை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், சங்கத் தலைவர் சதாசிவம் தலைமையில், நேற்று நடந்தது.
கூட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அனுராதா பேசியதாவது:
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, சேகோ அரவை ஆலைகளில், மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் ஸ்டார்ச், ஜவ்வரிசி, சேகோ சர்வ் மூலம், வடமாநிலங்களுக்கு அதிகளவில் உணவுக்கு அனுப்பப்படுகிறது.
மக்காச்சோளம் உணவு பொருளாக இருந்தாலும், மரவள்ளி கிழங்கில் இருந்து தான், ஜவ்வரிசி தயாரிக்க வேண்டும். மரவள்ளி கிழங்கு தவிர, மக்காச்சோளம் கலந்தாலும் கலப்பட உணவுதான். அவ்வாறு இருந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். லாப நோக்கம் இல்லாமல், உணவு பொருள் உற்பத்தி என்பதால், தரமான, கலப்படமில்லாத ஜவ்வரிசியை உற்பத்தி செய்ய வேண்டும்.
மரவள்ளி கிழங்கை தோல் உரித்து அரவை செய்ய வேண்டும். ஒரு லிட்டர் ஆஸிட் இருந்தாலும், சேகோ ஆலைக்கு, "சீல்' வைக்கப்படும். தமிழக அளவில், ஆத்தூர் பகுதியில், ஜவ்வரிசி உற்பத்தி அதிகம் என்பதால், சங்க நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தான், கூட்டம் நடத்துகிறோம்.
மரவள்ளி கிழங்கு அரவை, ஜவ்வரிசி தயாரித்தல் பணிகளை, இரவு நேரத்திலும் ஆய்வு செய்வோம். 100 சதவீதம் மரவள்ளி கிழங்கு தோல் உரித்து, குடிக்கும் தண்ணீரில் அரவை செய்தல் வேண்டும். கெமிக்கல், ஆஸிட் இருக்கக் கூடாது.
மக்காச்சோளம் மாவு கலந்து, ஜவ்வரிசி தயாரிப்பு போன்ற கலப்படம் இருந்தால், சேகோ ஆலைக்கு, "சீல்' வைப்பதுடன், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கலப்பட உணவு பொருளால், உணவு குழாய் பாதிப்பு, புற்று நோய் ஏற்படுகிறது. ஜூலை, 10ம் தேதி முதல், ஆய்வு பணிகளில், கலப்படம் போன்றவை கண்டறிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.