''இன்னிக்கு...
பாவக்கா பொரியலா?... வாழைத்தண்டுக் கூட்டா...? அய்யே... எனக்கு சாப்பாடே
வேண்டாம்...'' என்று முகம் சுளிப்பது இன்றைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது.
இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, என வித்தியாசமான சுவைகளையும்,
சத்துக்களையும் அள்ளித்தருகிற அனைத்துக் காய்கறிகளையும் குழந்தையிலேயே
பழக்க மறந்துவிட்டதன் விளைவுதான், இந்த சுளிப்பு.
வாய்க்கு ருசியான பதார்த்தம் என்றாலே, குழந்தைகளுக்கு
உருளைக்கிழங்கு மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கும். அந்த அளவுக்கு, 'செய்வது
சுலபம்’ என்பதால், குக்கரில் சாதத்துடன் உருளைக்கிழங்கை வேகவைத்து, காரம்
போட்டுச் செய்து கொடுத்துவிடுகின்றனர். இப்படி, தினமும் ஒரே காய்கறியை
மட்டும் உணவில் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.
இயற்கையில் இல்லாதது எதுவுமே இல்லை. தினமும் ஒரு கீரை,
மூன்று வகைக் காய்கறிகள், மூன்று விதமான பழங்களைச் சேர்த்துக்கொண்டால்,
உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
குழந்தைக்கு உணவை ஊட்டத் தொடங்கும் காலத்திலேயே,
அறுசுவை உணவைப் பழக்கப்படுத்தி, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு
அடித்தளம் அமைத்துவிடலாம்.
மருந்து மாத்திரைகளை உணவாகச் சாப்பிடும் நிலையை மாற்றி,
உணவையே மருந்தாக உண்ணும் நிலைக்கு நாம் செல்வது ஒன்றுதான் ஆரோக்கியமான
வாழ்வை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள சிறந்த வழி.
இயற்கை உணவுகளான காய்கறி, பழங்கள், கீரை வகைகளில்
இருக்கும் சத்துக்கள், பலன்கள் அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் எனப்
பட்டியலிட்டிருக்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி. என்ன
நோய்க்கு என்ன சாப்பிட வேண்டும் என விளக்கியிருக்கிறார் இயற்கைப்பிரியன்
ரத்தின சக்திவேல்.
உங்களின் வயிற்றுக்கு அற்புத விருந்து படைத்திருக்கும்
காய்கறி, பழங்கள், கீரைகளைப் பற்றிய இந்த இணைப்பிதழ், நோயை விரட்டி...
உற்சாகமான ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் என்பது நிச்சயம்!
காய்கறிகள்
பீன்ஸ்
சத்துக்கள்: வைட்டமின்
சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளன. பொட்டாசியம்,
துத்தநாகம் ஓரளவும், மிகக்குறைந்த அளவு கலோரியும் இருக்கின்றன.
பலன்கள்:
ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிகள் பொரியலாகச் செய்து சாப்பிடலாம்.
மிதமாக அரைவேக்காட்டில் வேகவைத்தால் போதும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சிறுநீரகக்கல் அடைப்பு
இருப்பவர்கள் சேர்க்க வேண்டாம்.
பீர்க்கங்காய்
சத்துக்கள்: நீர்ச் சத்தும், தாது உப்புகளும் உள்ளன. கலோரி அளவும் குறைவு. மிதமான அளவு புரதம், நார்ச் சத்து உள்ளன.
பலன்கள்: உடலுக்கு
நல்ல குளிர்ச்சியைத் தரும். வெயில் காலத்துக்கு ஏற்றது. மலச்சிக்கல்
வராது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும்
நல்லது. இந்தக் காயை லேசாக வேகவைத்து, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த
மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்துத் தொக்காகச் செய்து சாப்பிடலாம்.
கேரட்
சத்துக்கள்: பீட்டாகரோட்டின்,
நார்ச் சத்து, பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. பொட்டாசியம், ஃபோலிக் அமிலம்,
கொலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி சத்துக்கள் ஓரளவும்,
இரும்புச் சத்து மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன.
பலன்கள்: கண்,
தோல், எலும்பு உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் நல்லது. கர்ப்பிணிகள்,
தாய்மார்கள், குழந்தைகள் என அனைவரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள்
அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். துருவி, வெதுவெதுப்பான நீரில் போட்டு
எடுத்தும் சாப்பிடலாம். கண் பார்வைக்கு மிகவும் நல்லது. உடல் பருமனாகாமல்
காக்கும். கேரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்துச் சாப்பிட்டுவர, உடல்
கழிவுகள் வெளியேறும்.
வெள்ளரிக்காய்
சத்துக்கள்:
நீர்ச் சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு பாஸ்பரஸ்,
ஃபோலிக் அமிலம் இருக்கின்றன. சிறிதளவு கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்
சத்து உள்ளன.
பலன்கள்: தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னை நீங்கும். குளுமை தரும்.
பிஞ்சு வெள்ளரிக்காய் வெயில் காலத்தில்
கிடைக்கக்கூடியது. அப்படியே சாப்பிடலாம். தடிமனான வெள்ளரியை சாலட், கூட்டு
செய்து சாப்பிடலாம். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள், சர்க்கரை
நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வெண்டைக்காய்
சத்துக்கள்: அதிக
அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்களும், ஓரளவு புரதமும், குறைந்த
அளவு பீட்டாகரோட்டின் மாவுச் சத்தும், பொட்டாசியமும் இருக்கின்றன.
பலன்கள்: உடல்
மற்றும் மூளை செயல்பாட்டுக்கும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
எல்லோருக்கும் ஏற்றது. அரைவேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடலாம்.
பாகற்காய்
சத்துக்கள்:
'பாலிபெப்டு டைட்’ எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப் பொருள்
நிறைந்துள்ளது. நார்ச் சத்து நிறைந்தது. குறைந்த அளவு பாஸ்பரஸ், புரதம்,
இரும்பு, கலோரி கால்சியம் உள்ளன.
பலன்கள்: உடலில்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராது. சர்க்கரை
நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்பூச்சித் தொல்லை நீங்கும்.
எல்லோருக்கும் ஏற்றது. தேங்காய் சேர்த்துக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.
வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது, இதனைச்
சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடித்துவிடும். மலச்சிக்கல் வராது.
அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாழைத்தண்டு
சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து அதிகம் இருக்கின்றன. ஓரளவு வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸும், குறைந்த அளவு கலோரியும் உள்ளன.
பலன்கள்: அதிக எடை
உள்ளவர்கள், தினமும் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச் சத்து அதிகம் இருப்பதால்,
சிறுநீரை நன்றாக வெளியேற்றும். சாப்பிட்டவுடன், நிறையத் தண்ணீர் குடிக்க
வேண்டும்.
புடலங்காய்
சத்துக்கள்: நீர்ச் சத்து நிறைந்தது. குறைந்த அளவு கலோரி, ஓரளவு இரும்புச் சத்து, நார்ச் சத்து, ஃபோலிக் ஆசிட் உள்ளன.
பலன்கள்: சர்க்கரை
நோயாளி, இதய நோயாளி, ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மிகவும்
நல்லது. மூலநோய் பிரச்னை இருப்பவர்கள், பாசிப்பருப்பு சேர்த்துக்
கூட்டுசெய்து சாப்பிடலாம். சிறுநீரகக்கல் இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.
மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
கத்திரிக்காய்
சத்துக்கள்:
ஃபோலிக் அமிலம், கொலின், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்கள் மிக அதிக
அளவும் கலோரி, பாஸ்பரஸ், இரும்பு மிகக்குறைந்த அளவும் உள்ளன.
பலன்கள்: உடல் இயக்கம் சீராகும். வாய்ப்புண் சரியாகும். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலைக் குறைக்கும்.
குழம்பில் போட்டும், பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் கத்திரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்துச்
சமைத்துச் சாப்பிட, உடல் சூட்டைத் தக்கவைக்கும். சிலருக்கு அலர்ஜியைத்
தரலாம். சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
அரிப்பைத் தூண்டும்.
பூசணிக்காய்
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, ஈ, புரதம், தாது உப்புக்கள் உள்ளன. கலோரி குறைந்த அளவு இருக்கிறது.
பலன்கள்:
மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது. நரம்புகளுக்கு வலுவூட்டும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே
நல்லது. உடல் மெலிந்தவர்கள் பூசணி சாலட், தேங்காய் சேர்த்துப் பொரியல்
செய்து சாப்பிட உடல் தேறும். உடல் பருமன் உள்ளவர்களும் சாப்பிடலாம்.
பரங்கிக்காய்
சத்துக்கள்: ஓரளவு
பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலிக் அமிலம் இருக்கின்றன.
கால்சியம், இரும்பு குறைவு. நீர்ச் சத்து, நார்ச் சத்துக்கள் ஓரளவு
இருக்கின்றன.
பலன்கள்: எல்லோரும் சாப்பிடலாம். சிறிதளவு தித்திப்பு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அவரைக்காய்
சத்துக்கள்: நிறைய நார்ச் சத்தும், ஓரளவு சுண்ணாம்புச் சத்தும், புரதமும், குறைந்த அளவு பொட்டாஷியம் மற்றும் கலோரியும் இருக்கின்றன.
பலன்கள்:
மலச்சிக்கலைப் போக்கும். சர்க்கரை நோய், செரிமானப் பிரச்னை உள்ளவர்கள்
கூட்டு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்குத்
தொடர்ந்து கொடுத்து வர, உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இரவில்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
பீட்ரூட்
சத்துக்கள்: குளுகோஸ், கார்போஹைட்ரேட், ஃபோலிக் ஆசிட், ரிபோஃப்ளேவின், தையமின், நியாசின், நார்ச் சத்தும் இதில் உள்ளன.
பலன்கள்: நல்ல
எனர்ஜியைக் கொடுக்கும். தொடர்ந்து 45 நாட்கள் மிளகு சேர்த்து பீட்ரூட்
சூப் சாப்பிட்டு வர, ரத்தசோகை விலகும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடக்கூடாது.
முட்டைக்கோஸ்
சத்துக்கள்: வைட்டமின் சி அதிகம் உள்ளன. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் உள்ளன.
பலன்கள்: சர்க்கரை
நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஆண்மைசக்தியை ஊக்குவிக்கும். மலச்சிக்கலைப்
போக்கும். இளமையைத் தக்கவைக்கும். கண்ணுக்கு மிகவும் நல்லது. கேன்சர்
வராமல் காக்கும்.
நெல்லிக்காய்
சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன.
பலன்கள்: ரத்த
அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும்
நல்லது. வாய் கசப்பைப் போக்கும். இதயம், நுரையீரலை வலுவூட்டும். இளமையைத்
தக்கவைக்கும். முடிவளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும், கண் பார்வை
கூர்மைக்கும் நெல்லிக்காய் அருமருந்து. தினமும் ஒரு நெல்லிக்காயை, தேனில்
ஊறவைத்துச் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
பழங்கள்
மாம்பழம்
சத்துக்கள்: தாது
உப்புக்கள், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், சர்க்கரை அதிக அளவு
இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் சி ஓரளவும், இரும்பு, பாஸ்பரஸ்,
கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப்
போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல
பலத்தைக்கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். சர்க்கரை
நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 துண்டுகள்
மட்டுமே சாப்பிடலாம்.
பலாப்பழம்
சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப்
போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை
என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள்
தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம்
சத்துக்கள்: சர்க்கரை,
மாவுச் சத்து அதிகமாகவும், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இரும்பு,
கால்சியம், புரதம், நார்ச் சத்து மிகவும் குறைவாகவும் உள்ளன.
பலன்கள்: இதய
நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும். எடை
குறைவாக இருப்பவர்கள், ஒரு வேளைக்கு ஒரு பழம் என்று தினமும் இரண்டு வேளை
சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கல், மூலநோயை
விரட்டும். கண்பார்வை குறைய ஆரம்பித்தால், தினசரி செவ்வாழைப்பழம் வேளைக்கு
ஒன்று வீதம் 21 நாட்களுக்குக் கொடுத்துவந்தால் பார்வை தெளிவடைய
ஆரம்பிக்கும்.
ஆரஞ்சுப்பழம்
சத்துக்கள்: வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் உள்ளன.
பலன்கள்: நாள்பட்ட நோயால் பாதித்துத் தேறியவர்களுக்கு இது நல்ல டானிக்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், அரை டம்ளர்
ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நன்றாகத்
தூக்கம் வரும்.
கிருணிப்பழம்
சத்துக்கள்:
நீர்ச் சத்து நிறைந்த பழம். சோடியம், பொட்டாசியம் அதிக அளவு இருக்கின்றன.
வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி ஓரளவு இருக்கின்றன.
பலன்கள்: வயிற்றுப்
புண்ணுக்கு நல்லது. சோர்வை நீக்கி சக்தியைக் கொடுக்கும். உடலுக்கு நல்ல
குளிர்ச்சியைத் தரும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
சாத்துக்குடி
சத்துக்கள்:
வைட்டமின் சி, பொட்டாசியம் அதிகம் இருக்கின்றன. ஓரளவு சர்க்கரை, மாவுச்
சத்து இருக்கின்றன. குறைந்த அளவில் இரும்பு, புரதம், பாஸ்பரஸ், கால்சியம்
இருக்கின்றன.
பலன்கள்: நோயாளிகள்
மீண்டுவருவதற்கும், விளையாட்டு வீரர்கள் தசை வலுவடைவதற்கும் மிகவும்
நல்லது. சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
மாதுளை
சத்துக்கள்:
நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து இதில் மிகவும் அதிகம்.
ஓரளவு வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம்
இருக்கின்றன.
பலன்கள்: உடலில்
உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா
வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு
இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்னை நீங்கும். மலச்சிக்கலால்
அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம்.
சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
திராட்சை
சத்துக்கள்:
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, சர்க்கரை இதில் மிக அதிகமாக உள்ளன.
ஓரளவு நார்ச் சத்தும், வைட்டமின் பி1, பொட்டாஷியம், வைட்டமின் சி குறைந்த
அளவே இருக்கின்றன.
பலன்கள்: உடலுக்கு
ஆற்றலை அளிக்கக்கூடியது. மாத்திரை, மருந்துகளை உட்கொள்பவர்கள், இதைத்
தவிர்க்க வேண்டும். ஏனெனில் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அசிடிட்டி,
வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல், அல்சர் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது.
திராட்சையை, கொட்டையுடன் சாப்பிட நார்ச் சத்து உடலில் சேரும். நன்றாகப் பசி
எடுக்காமல் வயிறு மந்தநிலையில் காணப்படுபவர்கள், கருப்புத் திராட்சை
ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து அருந்திவந்தால், நன்றாகப் பசி எடுக்கும்,
மந்தநிலை போகும்.
அன்னாசிப்பழம்
சத்துக்கள்: நார்ச்
சத்தும் சர்க்கரையின் அளவும் அதிகம் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ்,
பொட்டாஷியம் மிகக் குறைந்த அளவும் இரும்பு, வைட்டமின் சி மிதமான அளவும்
இருக்கின்றன.
பலன்கள்: உடலுக்கு
சக்தியை உடனடியாகக் கொடுக்கும். மலச்சிக்கல் வராது. ஜீரண சக்தி
அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் மிதமான அளவு
எடுத்துக்கொள்ளலாம். உயிர்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், உடலில்
ரத்தத்தை விருத்திசெய்து, உடலுக்குப் பலத்தைத் தரும். பெண்களுக்கு
வெள்ளைப்படுதல் இருந்தால், குணமாகும். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது
நல்லது.
கொய்யாப்பழம்
சத்துக்கள்: நார்ச்
சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. புரதம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம்
மிகக் குறைந்த அளவும் ஓரளவு பொட்டாஷியம், சோடியம், மக்னீசியம் மற்றும்
சர்க்கரையும் இருக்கின்றன.
பலன்கள்:
பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள்
மிகக்குறைந்த அளவில் துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுவது நல்லது.
நெல்லிக்காய் சாப்பிட முடியாதவர்கள் இதைச் செங்காயாகச் சாப்பிடலாம். வளரும்
குழந்தைகளுக்கு எலும்புகளை உறுதியாக்கி, பலத்தைக் கொடுக்கும். மலச்சிக்கல்
பிரச்னை தீரும். சொறி, சிரங்கு, ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம்
சாப்பிட்டு வர, சீக்கிரத்திலேயே குணமாகும்.
பப்பாளி
சத்துக்கள்: சர்க்கரை பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்து அதிகம் இருக்கின்றன.
பலன்கள்:
மலச்சிக்கல் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண், தோல் என
ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்
நிறைய எடுத்துக்கொள்ளலாம். சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பால் அருந்த வேண்டும்.
இதனால், உடலில் பீட்டாகரோட்டின் சத்து முழுவதும் கிரகிக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். பப்பாளிப்பழத்தை,
குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்துவதன் மூலம், உடல் மற்றும்
எலும்பு நன்கு வளர்ச்சியடையும். பல் உறுதிப்படும். நரம்புத்தளர்ச்சி
இருப்பவர்கள், பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர, குணமாகும். கல்லீரல்
வீக்கம் குறையும். சருமம் பொலிவுற்று, இளமையைத் தக்கவைக்கும்.
சப்போட்டா
சத்துக்கள்:
மாவுச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மிக அதிகம். ஓரளவு இரும்பு, பீட்டா
கரோட்டினும் மிகக் குறைந்த அளவு கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், யூரிக்
ஆசிட் சத்துக்கள் இதில் இருக்கின்றன.
பலன்கள்: ரத்த
ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் ஓரளவு
தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கீரைகள்
புதினா
சத்துக்கள்: பீட்டாகரோட்டின்,
ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், சுண்ணாம்புச் சத்து, கால்சியம், இரும்பு,
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் இதில் நிறைந்துள்ளன. ஓரளவு மக்னீசியம்,
தாமிரம், துத்தநாகம், மாங்கனீஷ், குரோமியம் இருக்கின்றன.
பலன்கள்:
செரிமானத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் மசக்கை வாந்தியைத் தடுக்கும்.
விக்கல் நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
பசியைத் தூண்டும். எல்லோருக்கும் ஏற்றது. துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
பாலக்கீரை
சத்துக்கள்:
ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஆக்சாலிக் அமிலம், யூரிக் அமிலம் அதிக அளவு
இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து குறைந்த அளவு உள்ளன.
தையமின், ரிபோஃப்ளேவின், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின் இதில் ஓரளவு
இருக்கின்றன.
பலன்கள்: தலைவலி
சரியாகும். மூளை வளர்ச்சிக்கு உதவும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
வேகவைத்து வாரம் ஒரு முறை சப்பாத்தியுடன் சாப்பிடலாம். சிறுநீரகத்தில் கல்
இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
வெந்தயக்கீரை
சத்துக்கள்:
கால்சியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின்,
வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகமாக உள்ளன. ஆக்சாலிக் அமிலம், இரும்பு,
நார்ச் சத்து, தாது உப்புக்கள் ஓரளவு இருக்கின்றன.
பலன்கள்: அதிகக்
குளிர்ச்சியைத் தரக்கூடியது. வாய்ப்புண்ணைச் சரியாக்கும். மாதவிடாய்க்
கோளாறு நீங்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தாராளமாகச் சேர்க்கலாம்.
குளிர்ச்சியைத் தரக்கூடியது. கீரையுடன் வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு
சேர்த்துக் கூட்டுசெய்து சாப்பிட, உடல்சூடு தணியும். சப்பாத்தியுடன்
சேர்த்தும் சாப்பிடலாம்.
முருங்கைக்கீரை
சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும், ஓரளவு தாது உப்புக்களும் இருக்கின்றன.
பலன்கள்: கண்கள்
மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு
தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரியாகும்.
மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள்
உறுதியாகும். தேங்காய் சேர்த்துப் பொரியலாகவும் சாப்பிடலாம்.
அரைக்கீரை
சத்துக்கள்:
கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து இதில் அதிகம்.
ஓரளவு பீட்டாகரோட்டின், நார்ச் சத்து இருக்கின்றன. மிகக் குறைந்த அளவு
புரதம், கலோரி இருக்கின்றன.
பலன்கள்: ரத்தசோகை
வராமல் தடுக்கும். ரத்தவிருத்தியடையும். வாத நோய், வாய்வு, உடல்வலிப்
பிரச்னை தீரும். சுக்கு, பூண்டு, பெருங்காயம் சேர்த்துப் பொரியல், கீரைக்
கடைசலாகச் சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி, பலவீனம், சோர்வு நீங்கி உடல்
வலுப்பெறும். எல்லோருக்கும் ஏற்றது.
பொன்னாங் கண்ணிக்கீரை
சத்துக்கள்:
கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், ரிபோஃப்ளேவின் சத்துக்கள்
அதிகமாகவும், வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு, தாது உப்புக்கள், புரதம்,
கலோரி ஓரளவும் இருக்கின்றன.
பலன்கள்:
கண்களுக்கு மிகவும் நல்லது. உடல் பருமனைக் குறைக்கும். இதனுடன் பூண்டு,
தக்காளி, சிறிதளவு பருப்பு சேர்த்துக் கூட்டுசெய்து சாப்பிடலாம்.
மணத்தக்காளிக்கீரை
சத்துக்கள்: ஓரளவு புரதம், இரும்பு, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் இருக்கின்றன.
பலன்கள்:
வாய்ப்புண், வாய் துர்நாற்றம், வயிற்றுப் புண், குடல் புண்ணைக்
குணப்படுத்தும். சளி, ஆஸ்துமா தொல்லை நீங்கும். களைப்பு நீங்கும்.
தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல மருந்து. குடல் ரணம் சரியாகும். வாரம்
ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டு வர, கல்லீரல் வீக்கம் போகும். இதன்
காயை மோரில் ஊறவைத்து வற்றலாகக் காயவைத்து, சாதத்துடன் பிசைந்து
சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச் சத்து இதில் உள்ளன.
பலன்கள்: அஜீரணக்
கோளாறு, மந்தம், பேதி, பசியின்மை, உடல்சூட்டைத் தணிக்கும். வாய்க் கசப்பு
நீங்கும். ரத்தசோகை இருப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். நல்ல முடி
வளர்ச்சியைக் கொடுக்கும். பச்சையாகத் தண்ணீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய்
அளவு சாப்பிட்டு வர, வயிற்றுவலி சரியாகும். கறிவேப்பிலையுடன் உப்பு,
சீரகம், சுக்கு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து சூடான சாதத்தில்
நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.
கொத்தமல்லி
சத்துக்கள்: இரும்பு,
வைட்டமின் சி, புரதம், சுண்ணாம்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்
சத்து, மாவுச் சத்து, ஆக்சாலிக் அமிலம் மற்றும் உடலுக்குத் தேவையான தாது
உப்புக்கள் இதில் உள்ளன.
பலன்கள்: அஜீரணத்தைப்
போக்கும். வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல், பித்த வாந்தி
சரியாகும். வயிற்றில் ரணம் இருந்தால், இஞ்சி, புதினா, புளி, உப்பு
சேர்த்து அரைத்துத் துவையலாகச் செய்து சாப்பிடலாம். கொத்தமல்லித்
தண்ணீரில், கண்கள், சருமத்தைக் கழுவலாம். தினமும் ஒரு பிடி கொத்தமல்லியை
மென்று வர, உடலில் புது ரத்தம் ஊறும். எல்லோருக்கும் ஏற்றது.
தமிழ் நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் கமிட்டி
உறுப்பினரான இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் எந்த நோய்க்கு என்ன
காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் என்று விளக்குகிறார்.
உடல் பருமன்
முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக்
காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு
மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.
சர்க்கரை நோய்
தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி,
முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு,
வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய்,
வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம்.
சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.
வயிற்று குடல் புண்
மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.
மாதவிடாய்க் கோளாறுகள்
வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய்,
வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை,
தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.
ஆஸ்துமா
கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.
ஆஸ்டியோபொராசிஸ்
பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.
ரத்தசோகை
பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய்,
பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை
வகைகள், பேரீச்சம்பழம்.
மலச்சிக்கல்
பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.
சிறுநீரகக் கல்
புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.
மூலம்
பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ்,
கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி,
அத்திப்பழம், நெல்லிக்காய்.
ஹெர்னியா:
முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.
நரம்புக் கோளாறுகள்:
கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.
எப்படிச் சாப்பிட வேண்டும்?
காய்கறிகள்
தோலை கொஞ்சமாக சீவ வேண்டும்.
காய்கறிகளைப்
பொடியாக நறுக்கிவிட்டு, பிறகு கழுவுவது கூடாது. இதனால், அதில் உள்ள
பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் வெளியேறிவிடும். நறுக்குவதற்கு முன்பு
நன்றாகக் கழுவிவிட வேண்டும்.
தண்ணீரைக்
கொதிக்கவைத்து, அதில் காய்கறிகளைப் போட்டு அடுப்பை 'சிம்’மில் வைத்து
மூடிபோட்டு சில நொடிகள் வேகவிட்டு, பிறகு அணைத்துவிட வேண்டும்.
மூடியைப்போட்டுவைத்திருந்தால், அந்தச் சூட்டிலேயே வெந்துவிடும். மூடாமல்
வேகவிடும்போது சத்துக்கள் ஆவியாக வெளியேறிவிடும்.
வேகவைத்தால், சிறிது நிறம் மாறத்தான் செய்யும். காய்கறிகளில் நிறம் மாறக் கூடாது என்று ஆப்பச் சோடா கலப்பது, வயிற்றைப் பாதிக்கும்.
பச்சைக் காய்கறிகளை குக்கரில்வைத்து வேகவைப்பது தவறு. கிழங்கு வகைகளை மட்டும் குக்கரில்வைத்து வேகவைக்கலாம்.
தினமும்
2 அல்லது 3 வகைக் காய்கறிகளை, சாதம் அளவுக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சாலடாகவும் சாப்பிடலாம். அதாவது ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400
கிராம் அளவுக்கு காய்கறிகள் தேவை.
'கேரட்டைப்
பச்சையாகச் சாப்பிடக் கூடாது. அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சி,
புழுக்கள் இருக்கிறது. அப்படி சாப்பிட்டால், வைட்டமின் பி12 குறைபாடு
வரும். இதனால், நரம்புத்தளர்ச்சி, ரத்தசோகை வரும்’ என்று தற்போதைய உணவு
ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. பச்சையாக சாப்பிடுவதைத்
தவிர்க்கவும்.
பழங்கள்:
சிவப்பு
ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்ப்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி,
பீட்ரூட் போன்றவை, சிவப்பு நிறக் காய்கறிப் பழங்கள். வாழை, பலா, மாம்பழம்
போன்றவை, மஞ்சள் நிறப் பழங்கள், பேரிக்காய், கொய்யாப்பழம், சாத்துக்குடி
இவை, பச்சை நிறப் பழங்கள். சப்போட்டா, விளாம்பழம், திராட்சை, நாவல்பழம்
போன்றவை இதர நிறப் பழங்கள். இப்படி நிறங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு பழத்திலும்
சத்துக்கள் வித்தியாசப்படுகின்றன.
உணவு சாப்பிட்டவுடன் பழங்களைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது.
ஒரே
மாதிரியான பழங்களைச் சாப்பிடாமல், தினமும் மூன்று நிறப் பழங்களைச்
சாப்பிடுவதன் மூலம், உடலுக்குத் தேவையான சரிவிகித சத்தைப் பெற முடியும்.
வெவ்வேறு
நிறப் பழங்கள் சாப்பிடமுடியாமல் போனால், இனிப்பு, புளிப்பு என இரண்டு
வகைப் பழங்களைச் சாப்பிடலாம். வயிற்றில் கேன்சர் வராது.
ரொம்பவும் காயையும், அதிகம் பழுத்ததையும் தவிர்க்கவும். கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருக்கும்.
நாக்கில் அமிலம் சுரக்கும்போது, பழங்களைக் கடித்து மென்று சாப்பிட்டால், ஜீரணிக்க நல்ல சக்தி கிடைக்கும்.
கீரைகள்
கீரை வாங்கியதும் பிரித்து, பெரிய பக்கெட்டில் போட்டு நன்றாகச் சுத்தம் செய்து பூச்சி, மண்களை அகற்ற வேண்டும்.
கீரையைச்
சுத்தமாகக் கழுவிய பிறகு, நறுக்கிவிட்டுத் திரும்பவும் கழுவத் தேவை இல்லை.
இதனால் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், தாது உப்புக்கள் போய்விடும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் கொதித்ததும், அதில் நறுக்கிய கீரையைப் போட்டு வேகவிடுங்கள்.
மஞ்சள்தூள்,
உப்பு போட்டு வேகும்போது மூடிபோட்டு அடுப்பை 'சிம்’மில் வைக்க
வேண்டும். அரைவேக்காடு பரவாயில்லை. மழைக் காலத்தில் மட்டும் நன்றாக
வேகவைக்க வேண்டும்.
ஆறியதும்,
எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட வேண்டும். அப்போதுதான் கீரையில் உள்ள
வைட்டமின் சி சத்து உடலில் கிரகிக்கும். ஒட்டுமொத்தச் சத்துக்களும் உடலில்
சேரும்.
வீட்டிலேயே வளர்க்கலாம்!
இன்று உடல் ஆரோக்கியத்துக்கென, அதிக விலைகொடுத்துக்
காய்கறிகளை வாங்க வேண்டி இருக்கிறது. இதனைத் தவிர்க்க, வீட்டின் வாசல்,
கொல்லைப்புறம், மொட்டை மாடி, ஜன்னல் பகுதி என சின்ன இடத்தில்கூட,
கத்திரிக்காய், வெண்டைக்காய், புதினா, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை,
முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி போன்ற அன்றாடத் தேவைக்கான சில காய்கறிகளை
வளர்க்கலாம். செடிகள் உரமிட்டு வளர்க்கும்முறை, பராமரிக்கும் விதம், மானிய
விலையில் தேவையான பொருட்கள், தரமான விதைகள் என அனைத்தையும் வழங்குகிறது
தோட்டக்கலைத் துறை அலுவலகம். மேலும், அரசு விதைப் பண்ணைகளிலும்,
வேளாண்மைத் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை
மையங்களிலும், ஆராய்ச்சி மையங்களிலும் இவற்றை வாங்கலாம்.
மணத்தக்காளிக் கீரை:
இந்தக் கீரைக்கு நன்றாக வெயில் தேவை. சூரிய ஒளி படும்
இடத்தில் வளர்க்கலாம். இதை வளர்க்க செம்மண்ணும் மணலும் கலந்து, கொஞ்சம்
சாண உரமும் கலந்து மண் தொட்டி, தகர டப்பாக்கள், பிளாஸ்டிக் வாளிகளில்
வளர்க்கலாம். இந்தச் செடிகள் ஓர் அடி உயரம் வளர்ந்ததும் பிடுங்கி உணவுக்காக
எடுத்துப் பயன்படுத்தலாம்.
தக்காளி:
தக்காளிப் பழத்தின் விதையை, தண்ணீர்விட்டு எடுத்து மண்
அல்லது சாம்பலுடன் சேர்த்துக் கலந்து காயவைத்தால், தக்காளிச்செடி விதை
தயார். செம்மண் நிரம்பிய தொட்டியில் மண்ணை லேசாகக் கிளறிவிட்டு விதைகளைத்
தூவி மண் காய்ந்துபோகாத அளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டியின்
அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு வைத்துவிட வேண்டும். காய் காய்க்கும்போது,
இந்தக் கம்புடன் செடியைக்கட்டிவிட வேண்டும். இது வளர்ந்து 40 வது நாளில்
தக்காளிகளைப் பறிக்கலாம்.
பச்சை மிளகாய்:
ஒரு தொட்டியில் செம்மண்ணைப் போட்டுக் கிளறிவிட்டு,
காய்ந்த மிளகாய் விதைகளைத் தூவி தண்ணீர் ஊற்றவும். சாணத்தை உரமாக இதன் மேல்
போட்டு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விதையாக இருக்கும்போது நீர் ஊற்ற
வேண்டும். 30 நாட்களில் மிளகாய்ச் செடி வளர்ந்துவிடும். 50 நாட்களில்
மிளகாய் வளர்ந்து பறித்துக் கொள்ளலாம்.
கறிவேப்பிலை:
தொட்டியில் வண்டல் மண்ணைப் போட்டு, கறிவேப்பிலைச்
செடியை ஒரு அடி ஆழமாக நட்டு, மாட்டுச் சாணம், மண் கலந்துவிட வேண்டும்.
நட்டதும், மூன்றாம் நாள் ஒரு முறையும் பின்பு வாரம் ஒரு முறையும் தண்ணீர்
ஊற்றலாம். 40 நாட்களில் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு
வளர்ந்துவிடும். தினமும் இதைப் பறித்துப் பயன்படுத்தலாம்.
இதேபோல் புதினா, கொத்தமல்லி, கற்றாழை, சிறுகீரை இவற்றை
வீட்டிலேயே வளர்ப்பதன் மூலம், ஃப்ரெஷ் கீரை, காய்கறிகள் செலவில்லாமல்
கிடைத்துவிடும்.