Jan 26, 2014

குழந்தையின் லஞ்ச் பாக்ஸ்... குவிந்திருக்கும் ஆபத்து! அதிர வைக்கும் சர்வே ரிப்போர்ட்

பெற்றோர்களே... உங்களில் எத்தனை பேர், உங்கள் குழந்தையின் மதிய உணவு விஷயத்தில் அக்கறையுடன் செயல்படுகிறீர்கள்?
நீங்கள் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவை, உங்களின் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று உங்களால் உறுதிபடுத்த முடியுமா?
அவர்கள் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவுதானா?
தவறான உணவுப் பழக்கத்தினால், குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் விளையவிருக்கும் கேடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
- இப்படிப்பட்ட கேள்விகளில் சிலவற்றை எப்போதாவது நீங்கள் எழுப்பியிருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இவற் றுக்கான சரியான பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்?
இந்திய நுகர்வோர் சங்கம், ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக வணிகப் பள்ளியுடன் இணைந்து, பள்ளி மாணவர்களின் மதிய உணவு பற்றி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், மேலே உள்ள கேள்விகளுக்கான விடைகள் கிடைத் துள்ளன. அந்த விடைகள், எதிர்கால இந்தியா குறித்த கவலையைக் கூட்டுவதாகவே அமைந்திருப்பதுதான் கொடுமை!
சென்னை, 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸஸ்' நிறுவனத்தின் 'ஊட்டச்சத்து நிபுணர்' டாக்டர்  வர்ஷா, சென்னை, 'தேவி அகாடமி' தலைமை ஆசிரியை மாலதி ஸ்ரீனிவாசன் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் இடம்பெற்ற இக்குழுவின் ஆய்வு மூலம்... குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோரின் கவனக்குறைவு, பள்ளிகளின் பொறுப்பின்மை இரண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
''இன்றைய மாணவர்கள்தான், நாளைய சமுதாயம். எனவே மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளரச் செய்வதற்கும், நொறுக்குத் தீனியின் (ஸ்நாக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) தீமைகளை அறியச் செய்வதற்கும், நன்மை அல்லது தீமை தரும் உணவுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கும், பாதுகாப்பான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கும்தான் இந்த ஆய்வு.
சிட்னி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் தெரேஸா டேவிஸ், 'சென்னையிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவை வைத்து ஆய்வை மேற்கொள்ளலாம்' என்றார். அதற்காக பல பள்ளிகளை அணுகினோம். ஏராளமான பள்ளிகள் சம்மதிக்காத நிலையில், மாநகராட்சி பள்ளிகள், சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் இதர ஆங்கில வழிக்கல்வி பள்ளிகள் என மொத்தம் 25 பள்ளிகள் எங்களின் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தன. ஒரு பள்ளிக்கூடத்துக்கு 12 மாணவர்கள் (6 மாணவர்கள், 6 மாணவிகள்) வீதம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பங்கேற்ற இந்த ஆய்வை, கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி, டிசம்பர் வரை நடத்தினோம்'' என்று இந்த ஆய்வு பற்றி நம் மிடம் பேசிய இந்திய நுகர்வோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜன், இதன் மூலம் கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை அடுக்கினார்.
லஞ்ச் பாக்ஸில்... ரெஸ்டாரன்ட் உணவு!
''மொத்தம் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் 55.7% பேர் பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவு வகைகள் 2,941. இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சேர்ந்தவை. பெரும்பான்மையானோர் புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் என தென்னிந்திய அரிசி உணவு வகைகளையே கொண்டு வந்தனர். சில மாணவர்கள் வறுவல், பீட்ஸா உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் மதிய உணவாக கொண்டு வந்தனர். சில குழந்தை கள், கோலா உள்ளிட்ட பானங்களையும் குடிக்கக் கொண்டு வந்திருந்தனர்.
மொத்த மாணவர்களில் 87.7% பேர் வீட்டில் அம்மா செய்து கொடுத்த உணவையும், 7.3% பேர் பாட்டி உள்ளிட்ட மற்றவர்கள் செய்து கொடுத்த உணவையும், மீதமுள்ள 5% குழந்தைகள் ஹோட்டல் உள்ளிட்ட வெளிப்புற உணவையும் கொண்டு வந்திருந்தனர். இதில் வேதனையான ஒரு விஷயம், சில குழந்தைகள் பிரபல சிக்கன் உணவகத்தின் உணவுகளையும், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பான வகைகளையும் கொண்டு வந் திருந்தனர். சத்துமிகுந்த பழங்கள், காய்கறி களை, கைவிட்டு எண்ணக்கூடிய குழந்தைகளே எடுத்துவந்தார்கள்.
84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பிச் சாப்பிட்டார்கள். மீதமுள்ள குழந்தைகள் வேண்டா வெறுப்போடு சாப்பிட்டார்கள். சில குழந்தைகள் மதிய உணவைச் சாப்பிடவே விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... அதிக சதவிகித குழந்தைகள், சத்தான உணவுகளைக் கொண்டு வராததோடு, கொண்டு வரும் உணவையும் பிளாஸ்டிக் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களில்தான் எடுத்து வந்தார்கள்'' என்றவர், 'லஞ்ச் பாக்ஸ்’ விஷயத்தில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.
நூடுல்ஸ்... பர்கர்!
''பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுவரும் உணவுகள், பெற்றோர்களின் விருப்பப்படியே அமைகிறது. அதிகமான பெற்றோர்... காலை நேர பரபரப்பில் கட மையே என்று ஏதாவது ஒரு உணவைத் தயா ரித்து கொடுத்து அனுப்புபவர்களாகவும், அது சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பெரும்பாலான பள்ளிகள், குழந்தைகளின் மதிய உணவு விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் உணவுப் பழக்கத்துக்கு வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலுமே ஒரு கடிவாளம் இல்லை. இதனால் சில குழந்தைகள் பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ், கோலா என்று அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதுடன், அதையே மதிய உணவாக பள்ளிக்கும் எடுத்து வருகிறார்கள்.
இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப் பிட்டு வருகின்றனர்'' என்ற ராஜன், அதன் விளைவுகளை விளக்கினார்.
மரணத்தை நோக்கி இழுக்கும் நொறுக்குத்தீனி!
''மலேரியா, அம்மை, பிளேக் போன்ற நோய்களின் காலம் மலையேறிவிட்டது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு, காஃபின், மாவுச்சத்து, அதிக கலோரிகள்... இதுபோன்றவையே, இன்றைக்கு 'தொற்றாத நோய்கள்' எனப்படும் இதயநோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்குக் காரணமாக அமைகின்றன. குழந்தைகள் அருந்தும் பானங்களில் உள்ள சிலவகை அமிலங்கள், பல்லைக்கூட கரைக்கும் தன்மை கொண்டவை. மேலும் குழந்தைகளின் ஆதரவைப் பெற, இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமான விளம்பரங்களைச் செய்கின்றன... இலவச பொருட்களையும் அள்ளித் தருகின்றன. அதனால் குழந்தைகள் விரும்பிக் கேட்க, பெற்றோரும் மறுக்காமல் வாங்கித் தருகிறார்கள்... நோய், நொடிகளையும் சேர்த்தே வாங்கித் தருகிறோம் என்கிற பயங்கரம் புரியாதவர்களாக!
இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நொறுக்குத்தீனி மட்டுமே விற்பனை ஆகிறதாம். இதை அதிகமாக குழந்தைகள்தான் உட்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. விளைவு எதுவரை செல்கிறது என்றால், புகைப்பிடித்தலுக்கு அடுத்தபடியாக இந்த உடல் பருமன்தான் இறப்புக்குக் காரணமாக அமைகிறதாம். 'கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் உடல் பருமன் மும் மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே இதய நோய்க்கான மிகமுக்கியக் காரணியாக இருக்கிறது' என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 'நொறுக்குத் தீனிகள் மிக விரைவில் உடலில் உள்ள ஈரலையும் பாதிப்படையச் செய்கின்றன' என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கோலா பானங்கள், கூடவே கூடாது!
இன்றைக்கு 'சக்தி தரும் பானங்கள்’ என்று அழைக்கப்படும் பலவகை பானங்களை, குழந்தைகள் விரும்பிப் பருகுகிறார்கள். அதில் கபீன், ஜின்ஸெங், டாரின், இனோசிடால் மற்றும் கோடமைன் போன்றவை உள்ளன. நாம் அன்றாடம் குடிக்கும் 250 மில்லி காபியில், 80-150 மில்லி கிராம் கபீனும், 250 மில்லி தேநீரில் 60 மில்லி கிராம் கபீனும், 250 மில்லி கோலா பானங்களில் 300-500 மில்லி கிராம் கபீனும் உள்ளன. இது, மனஅழுத்தம், தூக்கமின்மை, கவலை, தலைவலி ஆகியவற்றை அதிகப்படுத்துவதோடு, மத்திய நரம்பு மண்டலத்தையும் அதிர்வடையச் செய்கிறது. சில பானங்கள் அதிக அளவில் எலும்பு தேய்மானத்தையும், பருமன் அதிகரிக்கவும், இரண்டாம் நிலை நீரழிவு நோய் அதிகரிக்கவும், சிறுநீரக பாதிப்பு ஏற்படவும், பற்சிதைவு மற்றும் பலவித பல் உபாதைகள் ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இதிலிருந்தெல்லாம் குழந்தைகளை மீட்பதற்கு ஆரோக்கியமான உணவுகளைத் தரவேண்டும். நொறுக்குத்தீனி, துரித உணவுகள், கோலா பானங்களுக்கு கண்டிப்புடன் 'நோ’ சொல்ல வேண்டும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார் ராஜன்.
தலைமையாசிரியை மாலதி ஸ்ரீனிவாசன் பேசும்போது, ''ஒவ்வொரு பள்ளியிலும் 5 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், இதன் முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டு ஆர்வத்துடன் ஆய்வில் பங்கேற்றனர். உணவு விஷயத்தில் தங்களின் தவறுகளைப் புரிந்துகொண்டு மாற்றிக்கொள்ளவும் தொடங்கினர். 'இனி, இதுபோன்ற உணவு வகைகளை உண்ணவே மாட்டோம்' என்று உறுதிபடச் சொன்ன மாணவர்கள், 'எங்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் இதையெல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்கும் புரியவைப்போம்' என்றும் சொன்னார்கள். இதுதான் எங்களுக்குக் கிடைத்த வெற்றி. இந்தக் கட்டுரையைப் படிக்கும் தாய்மார்களும் இத்தகையதொரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டால், அது நாளைய சமூகத்துக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்!'' என்று வேண்டுகோளாகச் சொன்னார்.
செய்வோமா?!

இதையெல்லாம் சொல்லிக் கொடுங்க!
ரோக்கிய உணவுக்காக ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா சொல்லும் டிப்ஸ்...
''காய்கறிகளை சரியான வெப்பநிலையில் சேமித்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவற்றிலிருக்கும் வைட்டமின்கள் சேதமாகிவிடும். காய் /  பழங்களில் தோலுக்கு அருகில்தான் வைட்டமின்களும் தாதுக்களும் இருக்கும். எனவே, தோலை மெலிதாக உரிக்க வேண்டும். காய், பழங்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும், நறுக்கியபின் கழுவினால் ஊட் டச்சத்துக்கள் வெளியேறிவிடும். புரதச்சத்து மிகுந்துள்ள அவரை, பட்டாணி, சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகை களை குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும். முழு தானியங்கள், கொலஸ்ட்ராலை குறைக்க உதவு கின்றன. அதனால் தானிய வகைகளை முடிந்த அள வுக்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சீஸனிலும் கிடைக்கும் பழங்கள், காய் கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் குழந்தை களுக்கு வாங்கித்தர வேண்டும். அவர்களை தினமும் கொஞ்ச நேரமாவது விளையாடவோ, உடல் பயிற்சி மேற்கொள்ளவோ அனுமதிக்க வேண்டும்... ஊக்குவிக்க வேண்டும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சொல்லித்தர வேண்டும்.''

No comments:

Post a Comment