'பிளாஸ்டிக் அரிசி’ என்ற வார்த்தையை வாசிக்கும் போதே பகீர் என இருக்கிறதா? அந்தச் செய்தியை வாசிக்கும்போதும் அப்படித்தான் இருந்தது.
'சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசி கலப்படம் உள்ளது. இதைச் சாப்பிடும் பலருக்கும் இரைப்பை நோய் உண்டாகிறது. ஆகவே, இறக்குமதியாகும் எல்லா உணவுப் பொருட்களையும் தரக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சுக்ரீவே துபே என்கிற வழக்குரைஞர். நீதிமன்றம் அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில்... அது என்ன பிளாஸ்டிக் அரிசி?
பொம்மை முதல் கொசு பேட் வரை உற்பத்தி செய்து, உலகச் சந்தைக்கு அனுப்பிவைக்கும் சீனா, அரிசியையும் அப்படித் தயாரித்துவிட்டதா?
உலகில் அரிசியைப் பிரதான உணவாக உட்கொள்ளும் ஆசியர்களின் அரிசித் தேவைக்குத் தீனி போடுவது சீனாதான். உலக அளவில் அரிசி உற்பத்தியில் சீனா முதல் இடமும், இந்தியா இரண்டாவது இடமும், இந்தோனேஷியா மூன்றாவது இடமும் வகிக்கின்றன. உலக அளவில் அரிசி உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, சீனா முதல் இடத்தை பிடித்தது. சீனாவின் உச்சாங் (Wuchang) மாகாணத்தில் விளையும் அரிசிக்கு, உலகச் சந்தைகளில் மவுசு அதிகம். இந்த அரிசி இந்தியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மர்... எனப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இந்த அரிசியில் கலப்படம் செய்யப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் சர்ச்சை வெடித்து அடங்கியது.
ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாட்டில் இருப்பதாக, மாத்ருபூமி பத்திரிகை வீடியோவுடன் செய்தி வெளியிட்டது. இருப்பினும் அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மேகி நூடுல்ஸ் தடைக்குப் பிறகே, பிளாஸ்டிக் அரிசி பிரச்னை பரபரப்பாகிவிட்டது.
எது பிளாஸ்டிக் அரிசி?
'பிளாஸ்டிக் அரிசி’ எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அது பிளாஸ்டிக்கில் இருந்து தயாரிக்கப்படுவது அல்ல. பிளாஸ்டிக்கில் அரிசியைச் செய்து, அதை உண்மையான அரிசியுடன் கலப்பது சாத்தியமும் அல்ல.
விளையும் நெல்லில் இருந்து உமி நீக்கும்போது அரிசி உடைந்து விழுகிறது. இதை 'குருணை’ என்போம். இந்தக் குருணை அரிசியை அரைத்து மாவாக்கி, அதை அச்சில் வைத்து மீண்டும் முழு அரிசியாக மாற்றுவது நவீன அரிசி உற்பத்தி முறையில் ஒன்று. அடுத்தது... மரவள்ளிக் கிழங்கை அரைத்து அரிசியுடன் சேர்த்து அத்துடன் சில வேதிப்பொருட்களையும் கலந்து உற்பத்தி செய்யப்படும் அரிசி. இவை இரண்டுமே சீனாவில் உற்பத்தியாகின்றன. மூன்றாவதாக ஓர் அரிசி இருக்கிறது. ஊட்டச்சத்துமிக்க நியூட்ரீஷியன் அரிசி. மாத்திரை தயாரிப்பதுபோல விட்டமின்களைச் சேர்த்து அரிசி தயாரிப்பது. அடிப்படையில் இது ஜெர்மன் தொழில்நுட்பம் என்றாலும், சீனர்கள் இதில் மேற்கு உலக நாடுகளை மிஞ்சிவிட்டார்கள். இந்த மூன்று வகை அரிசியுமே உடல் நலனுக்குத் தீங்கானதுதான். இதில் பிளாஸ்டிக் அரிசி என தனியே ஒன்று இல்லை. மேற்கண்ட மூன்று வகை அரிசிகளுமே பிளாஸ்டிக் தன்மையுடன்தான் இருக்கும் என்கிறார்கள்.
''உலகமயத்தின் பின்னர் பபிள்கம் தொடங்கி எல்லா உணவுகளுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீபத்தில் மேகி நூடுல்ஸில் ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன எனத் தடை செய்தார்கள். அப்படி என்றால் மற்ற உணவுகள் எல்லாம் தரமானவையா என்ற கேள்விக்கு அளவுகோல் இல்லை. ஒரு மாநிலம், ஓர் உணவுப்பொருளைப் பரிசோதிக்கிறது என்றால், உடனே மற்ற மாநிலங்களும் பரிசோதிக்கின்றன. முதல் மாநிலம் அந்த நடவடிக்கையை எடுத்திருக்காவிட்டால், எந்த மாநிலமும் எடுத்திருக்காது. நாமும் நமது குழந்தைகளும் அன்றாடம் அருந்தும் தண்ணீரில் தொடங்கி அரிசி வரை பல விஷயங்களைப் பரிசோதித்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளிப்படும். ஓர் உணவுப் பொருளில் எந்த ஒரு வேதிப்பொருளைச் சேர்த்தாலும், அது குறிப்பிடப்பட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட உணவுகளை, பல ஐரோப்பிய நாடுகள் அனுமதிப்பது இல்லை. அப்படியே அனுமதிக்கும் நாடுகளிலும், 'இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு’ என பொருளின் மீது தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்காவிலும் இதுதான் நடைமுறை. ஆனால், நம் நாட்டில் இந்த முறைகளை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. இதுதான் அடிப்படைப் பிரச்னை' என்கிறார் மருத்துவர் கு.சிவராமன்.
அரிசியில் மட்டுமா ஆபத்து?
இந்தியாவுக்குள் கடல்பாசி தொடங்கி காளான் வரை இறக்குமதியாகின்றன. அத்துடன், உணவுப்பொருள் தயாரிப்புக்கான சில வேதிப்பொருட்களும் இறக்குமதியாகின்றன. இவற்றின் தரம் பெரும்பாலும் கேள்விக்குறிதான். உதாரணத்துக்கு... சீனாவில் முட்டைகளில்கூட போலிகள் வந்துவிட்டன. கால்சியம் கார்பனேட்டைக் கொண்டு முட்டை ஓடு உருவாக்கப்படுகிறது. கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினேட் போன்ற வேதியியல் பொருட்களுடன் இன்னும் சிலவற்றைச் சேர்த்து முட்டையின் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. மஞ்சள் கலர் சேர்ப்பதன் மூலம் மஞ்சள்கரு உருவாகிறது. சில முட்டைகளின் கரு, சிவப்பு வண்ணத்திலும் இருக்கிறது. இந்தச் செயற்கை முட்டையில் சத்து எதுவும் இல்லை என்பதுடன் வேதிப்பொருட்களால் பெரும் கேடுகள்தான் வந்துசேரும்.
முட்டையில் மட்டும் அல்ல, மாமிசத்திலும்கூட சீனர்கள் போலிகளை உருவாக்குகின்றனர். பால், வால்நட், ஒயின், பிரெட் என எதுவும் இவர்களிடம் தப்பவில்லை. அதேநேரம், உலக அளவில் சீனாவின் பொருட்கள் அமெரிக்க - ஐரோப்பியச் சந்தைகளை ஆக்கிரமித்துவரும் நிலையில், 'அரிசி உற்பத்தியில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அமெரிக்கா உருவாக்கிய வதந்திதான் பிளாஸ்டிக் அரிசி’ என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை என்ன? மாம்பழங்களை செயற்கையாகப் பழுக்கவைக்க கார்பைடு கல் கண்டுபிடித்தவர்களும், கெட்டுப்போகாத பாலைக் கண்டுபிடித்தவர்களும் நம் ஆட்கள். மேகி நூடுல்ஸ் தடையைத் தொடர்ந்து டாப் ராமன், யிப்பீ ஆகிய நூடுல்ஸ்களுக்கும் சில மாநிலங்கள் தடை விதித்திருக்கின்றன. 'ஹால்திராம்ஸ்’ தயாரிப்புகளை தன் நாட்டில் தடை செய்திருக்கிறது அமெரிக்கா.
இன்னும் பெரும்பாலான மக்கள் பளபளப்பான, காஸ்ட்லியான உணவுகளைச் சாப்பிடுவதையே கௌரவமாக நினைக்கிறார்கள். செல்போன்போல உணவும் கௌரவத்தின் அடையாளமாக மாறிவிட்டது. இதன் விளைவே இத்தனை போலி உணவுப்பொருட்களின் வருகை. உண்மையில் நல்ல உணவுப்பொருளாக இருந்தால், அது குறிப்பிட்ட நாட்களில் கெட்டுப்போகும். அப்படிக் கெட்டுப்போனால்தான், அது நல்ல பொருள். மாறாக, எப்போதும் பளபளப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பதுதான் ஆபத்துக்கான அடிப்படை. அதில் பளபளப்பு மட்டும் இல்லை, ஆபத்தும் இணைந்தே இருக்கிறது!
எதற்குப் பதில்... எவை?
1) காலி அட்டைப்பெட்டிகளை ரசாயனத்தில் ஊறவைத்து மென்மையாக்கி, அதை 'பன்’போல ஆக்குகிறார்கள். அதனுடன் இறைச்சியை வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள். அட்டைப்பெட்டியில் நச்சுத்தன்மைகொண்ட மை மற்றும் ஊறவைக்கப்படும் கெமிக்கல்கள், உடலுக்கு நிச்சயம் தீங்கானவை.
2) விலை உயர்ந்த 'வால்நட்’களில் கலப்படம் செய்ய, காலி வால்நட் ஓடுகளுக்குள் சிமென்ட் அல்லது கற்களை வைத்து, ஓடுகளை ஒட்டி நல்ல வால்நட்களுடன் கலந்துவிடுகிறார்கள்.
3) போலிகளில் நெ.1, சீன ஒயின் பாட்டில்கள் என்கிறார்கள். வெறும் பழச்சாறுகளை விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களில் அடைத்துவிடுவதோடு, போதை ஏறுவதற்காக அதில் உள்ளூர் கள்ளச்சாராயத்தைக் கொஞ்சம் சேர்த்துவிடுகிறார்களாம்!
பிளாஸ்டிக் அரிசி... கண்டுபிடிப்பது எப்படி?
சாதாரண அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கழுவினால், அரிசி நனைந்து தண்ணீரில் மூழ்கிவிடும். ஆனால், பிளாஸ்டிக் கலப்பட அரிசி அத்தனை எளிதில் மூழ்காது. வெந்த அரிசியை நசுக்கிப்பார்த்தால், மாவுபோல உதிர்ந்துவரும். சமைத்து சில நாட்கள் ஆன பின்னரும் கெட்டுப்போகாமல் அப்போது சமைத்ததுபோலவே இருக்கும். உலை கொதிக்கும்போது மேலே ஆடை போல வரும். அது, வேதிப்பொருட்களின் விளைவு. அதை எடுத்து சூடு ஆறிய பின்னர் எரித்தால், மரவள்ளிக் கிழங்கின் வாசனையுடன் பிளாஸ்டிக்போல நின்று எரியும்!