திருச்சி,ஏப்.27-
திருச்சி
மாநகராட்சிப் பகுதிகளில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு கால்சியம்
கார்பைட் கற்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்ததை அடுத்து, மாவட்ட கலெக்டர்
ஜெயஸ்ரீ உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் ஏ.இராமகிருஷ்ணன் தலைமையில்,
மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டேவிட் முத்துராஜ், செல்வராஜ்
மற்றும் பாஸ்கரன் ஆகியோரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த
ஆய்வில் காந்தி மார்க்கெட் நெல்பேட்டை தெருவில் உள்ள இரண்டு மொத்த விலை
விற்பனை நிறுவனங்களில் மாம்பழங்கள் கார்பைட் கற்கள் கொண்டு பழுக்க
வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது,
இந்நிறுவனங்களிலிருந்து
சுமார் 2.6 டன் (2600 கிலோ) மாம்பழங்கள் மற்றும் கால்சியம் கார்பைட்
பவுடர் பாக்கெட்டுகள் பறி முதல் செய்யப்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும்
மாநகராட்சி வாகனங்களின் உதவியுடன் மாநகராட்சி உரகிடங்கிற்கு கொண்டு
செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.
மாம்பழங்களை இயற்கை
முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் அல்லது வேளாண்மை மற்றும்
தோட்டக்கலை துறையால் அனுமதிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி பழுக்க வைக்க
வேண்டும்.
கால்சியம் கார்பைட் கற்கள் உபயோகித்து
பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் உட்கொள்ளும் பொழுது வயிறு சம்பந்தப்பட்ட
கோளாறுகள், தலைவலி, வயிற்றுப் புண், நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற உபாதைகள்
ஏற்படும். கால்சியம் கார்பனைட் கற்கள் பயன் படுத்தி மாம்பழங்களை பழுக்க
வைத்தாலோ மற்றும் இப்பழங்களை விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய
சட்டம் 2006-ன் படி பறிமுதல் செய்வதோடு கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட
விதிகளின்படி மேல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.