முக்கனிகளில் முதல் கனி என்ற சிறப்பு கொண்டது மாங்கனி. அதன் பெயரைச் சொன்னாலே வயது வித்தியாசமன்றி அனை வரின் நாக்கிலும் எச்சில் ஊறும். சேலத்து மாம்பழம், மல்கோவா, ராஸ்பூரி என்று மாம்பழம் வகை வகையாய் வந்துகுவியும், மாம்பழ சீசனில். தாய் ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் என கிராமப்புறங்களில் சொலவடை கூட உண்டு.
கோடைக்காலம் வந்துவிட்டது. இப்போது வீதிக்கு மாம்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாமே நல்ல பழங்கள் இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
நல்ல மாம்பழத்தை எப்படி காண்பீர்கள்...?
தமிழகத்தில் மாம்பழ சீசன் களை கட்டத் துவங்கியுள்ள நிலையில், மாம்பழங்களின் விற்பனை படு ஜோராக சூடுபிடிக்க துவங்கிவிட்டது. கைநிறைய காசு பார்க்கும் ஆசையில் சில வியாபாரிகள், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்து செயற்கை முறையில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாம்பழங்களை வாங்கி சாப்பிடுபவர்கள் வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட உடல்ரீதியான அவஸ்தைகளை சந்திக்கவேண்டும் என்பதுதான் வேதனை.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் எச்சரித்தாலும், வியாபாரிகள் சிலர் தொடர்ந்து கார்பைட் பழங்களை விற்கின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மாம்பழக் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில், 2 கடைகளில் கார் பைடு கல் வைத்து மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை வாக னம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டன. அதிகாரிகள் ஏன் கார்பைடு மாம்பழத்திற்கு கறார் காட்டுகிறார்கள்? என விசாரித்தோம்.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களே இந்த சீசனில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய உணவுப் பொருள். ஏனெனில், கார்பைடு கல்லில் இருக்கக்கூடிய அசிட்டிலீன் வாயு. இந்த வாயுவின் மூலம் மா, வாழை போன்றவை 12 முதல் 24 மணி நேரத்துக்குள் பழுக்க வைக்க முடிகிறது. காய்களில் இயற்கையாக உள்ள எத்திலின் வாயு மூலம் அவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் பழுத்துவிடும்.
எனினும், அவசர அவசரமாக கல்லா கட்டும் நோக்கத்தில் வியாபாரிகள் செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கின்றனர் என்று சொல்லும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். கடந்த காலங்களில் தமிழகம் முழுவதும் மார்க்கெட்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கார்பைடுகல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 50டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும். தொடர்ந்து சோதனை நடத்திட அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளதாக கூறினர்.
கேன்சர் வரும் எச்சரிக்கை
இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் நேரும் விபரீதம் புரியாமல் பொது மக்களும் வாங்கிச் செல்கின்றனர். வெல்டிங் பட்டறைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதுதான் கார்பைடு கற்கள், இந்த கற்களில் உள்ள அசிட்டிலீன் வாயு மூலம் பழங்கள் மிக விரைவாக செயற்கையாக பழுக்க வைக்கப்படுகிறது.
பொதுவாக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாக இருக்கும். தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காய்வெட்டாக இருக்கும். முகர்ந்தால் மாம் பழம் வாசனையாகவும், ருசியாகவும் இருக்காது. காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இவைதான் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பைடு பழங்கள்..
இந்த மாம்பழங்களை சாப்பிட்டால், தோல் அலர்ஜி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும். அதி கமாக சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கும், தொடர்ந்து உண்பதன் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கும். கல்லீரல், குடல், இரைப்பையும் பாதிக்கும்.
குழந்தைகள், முதியவர்கள் இதுபோன்ற பழங்களை அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு கடும் வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் இயற்கை முறையில் பழுக்கும் மாம்பழங்களை மட்டுமே வாங்கி உண்ண வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
நல்ல பழங்கள் நம் உடலுக்கு நண்பன். நல்ல பழங்களை சாப்பிடுவோம் நலமாய் வாழுவோம்