திருச்சி, டிச. 26:
ஸ்ரீரங்கத்தில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், அன்னதானம் செய்ய விரும்புவோர் அதற்காக முறையாக அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பூலோக வைகுண்டம் எனப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ம் தேதி தொடங்கி ஜன. 21 வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு ஜன. 11ம் தேதி அதிகாலை நடைபெறும். ராப்பத்து, பகல் பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு பக்தர்கள் அவதிப்படாமல் இருக்கும் வகையில், கலெக்டர் ஜெயஸ்ரீ சில நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வைகுண்ட ஏகாதாசி விழாவில், வணிகர்கள், காலாவதியான, கலப்படம் செய்யப்பட்ட, தப்பான குறியீடுகள் கொண்ட, தரம் குறைந்த, பாதுகாப்பற்ற உணவுப் பொருட்களை தெரிந்தோ, தெரியாமலோ விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது. பொருட்களில் வாசனை திரவியங்களை உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் கொசுக்கள், ஈக்கள் மொய்க்காத வண்ணம் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக வைத்தல் வேண்டும். அன்னதானம் செய்ய விரும்புவோர், உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்ற பின்னரே அன்னதானம் செய்ய வேண்டும். மேலும் உணவு தயாரிக்கும் இடம் தூய்மையாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்கப்பட வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பாலிதீன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் கூடாது. சமைக்கப்பட்ட உணவுகள் பாதுகாப்பாக மூடியிருக்க வேண்டும்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமையலுக்கோ, உணவுப் பொருட்களை பறிமாறவோ கூடாது. இவற்றை மீறுவோர் துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். அதேபோல பொதுமக்களும் பாதுகாப்பான உணவு மற்றும் பானங்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பாக்கெட் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை வாங்கும்போது அவை காலாவதியாகி விட்டதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
இவை குறித்த மேலும் விபரங்களுக்கும், அன்னதானம் அனுமதி பெறுவது குறித்தும் தகவல் பெற விரும்புவோர், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, (உணவுப்பிரிவு), ஜமால் முகமது கல்லூரி அருகில், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ் சாலை (ஆயுதப்படை மைதானம் எதிரே), டிவிஎஸ் டோல்கேட், திருச்சி &620021 என்ற முகவரியில் நேரிலோ, அல்லது 0431&2333330 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.