சென்னையில் வாழை இலைக்குப் பதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டது. அதைத் தட்டிக்கேட்ட காவலரிடம் தகராறில் ஈடுபட்டார் ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர்.
இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் தோசை
சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை அருகே ஃபாஸ்ட் ஃபுட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு புதுப்பேட்டை ஆயுதப்படையில் வேலைபார்க்கும் திருச்சியைச் சேர்ந்த காவலர் சரவணன் என்பவர் நேற்றிரவு சாப்பிடச் சென்றார். அப்போது அவருக்கு, வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், பணம் வாங்கும் இடத்தில் இருந்தவரிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், 'இதைக் கேட்க நீ யாரு?' என்று கேட்டுள்ளார்.
பாஸ்ட் புட் கடையில் சோதனை
உடனே காவலர் சரவணன், `கார்ப்பரேஷன் அதிகாரிகள்தான் கேட்க வேண்டுமா, காவலர் என்ற முறையில் கேட்கவில்லை. பொதுமக்களில் ஒருவன் என்ற அடிப்படையில்தான் கேள்வி கேட்கிறேன்' என்று கூறினார். இதனையடுத்து, சரவணனின் செல்போன் நம்பரைக் கேட்டு, அதை ஒரு பேப்பரில் எழுதினார் ஃபாஸ்ட் ஃபுட் உரிமையாளர். அப்போது அவரின் அருகில் இருக்கும் நபர், `நாளைக்கு மார்க்கெட்டுக்கு 10 மணிக்கு வா' என்று கூறுகிறார். அதற்கு காவலர் சரவணனும் சரியெனக் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சரவணனின் செல்போனில் ரகசியமாகப் பதிவானது.
ஃபாஸ்ட் ஃபுட் கடையில் நடந்த சம்பவத்தை காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் சரவணன். பிறகு, உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் நம்பருக்கு அந்த வீடியோவை அனுப்பிவைத்தார். அதைப் பார்த்த உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்துக்குள் நுழைந்து ஆய்வு நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் கவர்களில் உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கவரில் உணவு
காவலர் சரவணனிடம் பேசினோம். ''நேற்றிரவு 9.30 மணியளவில் அந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்துக்குச் சென்று தோசை சாப்பிட்டேன். தோசையை பிளாஸ்டிக் கவரில் சுடச்சுட வைத்துத் தந்தார்கள். உடனே சப்ளை செய்தவரிடம் பிளாஸ்டிக் கவரில் உணவை வைத்துக் கொடுப்பதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்றேன். சப்ளை செய்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நான் பேசியது அவருக்குப் புரியவில்லை.
சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும்போது அங்கிருந்தவரிடம் விவரத்தைக் கூறினேன். வீடியோ எடுக்க வேண்டும், தகராறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. பணம் கொடுத்தபோது அந்த நபர், என்னிடம் மிரட்டும் தொனியில் பேசினார். அதனால்தான் செல்போனில் வீடியோவை ஆன் செய்தேன். அதைக் கவனித்த அந்த நபர், வீடியோவை நல்லா எடுக்கும்படி கூறியதோடு என் செல்போன் நம்பரையும் கேட்டார். இதனையடுத்து, அவரிடம் என் நம்பரைக் கொடுத்தேன். தற்போது அந்த உணவகத்துக்கு சீல் வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது" என்றார்.
காவலர் சரவணன் எடுத்த வீடியோவில், அவரிடம் தகராறு செய்யும் நபரின் அருகில் ஃபாஸ்ட் ஃபுட் கடையை நடத்துபவர் சிரித்தப்படி அமர்ந்திருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதோடு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்யும் வீடியோவும் வலம்வருகிறது.
கடைக்கு சீல்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ''எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி ஆய்வு நடத்தினோம். அப்போது, உணவு வகைகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்துவைத்து பதப்படுத்தியிருந்ததைக் கண்டறிந்தோம். மேலும், தடைவிதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டன. அதோடு, சுகாதாரச் சீர்கேடும் காணப்பட்டது. இதனால்தான், சம்பந்தப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு சீல் வைத்தோம்" என்றவர்,
''சம்பந்தப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் சாதம், நூடுல்ஸ், சிக்கன், மட்டன் போன்றவற்றை அடைத்து குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்திருந்தனர். இதனால் அந்த உணவு வகைகள் சாப்பிடத் தகுந்த நிலையில் இல்லை. ஆனால், அதைத்தான் அந்த உணவகத்துக்கு வரும் வாக்கையாளர்களுக்கு சமைத்து சப்ளை செய்கின்றனர்" என்றார்.
பாஸ்ட் புட் கடை
அதிகாரிகள் சீல் வைத்தது குறித்துப் பேசிய ஃபாஸ்ட் ஃபுட் கடையை நடத்தி வருபவர்கள், ``தீபாவளி நேரம் என்பதால், வாழை இலைகள் காலியாகிவிட்டன. பிளாஸ்டிக் பேப்பரில் உணவை வைத்து பரிமாறியது தவறுதான். மேலும், காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், ஃபாஸ்ட் ஃபுட்டை நடத்திவருபவரின் நண்பர். அவர் பேசிய பேச்சுக்களால்தான் சீல் வைக்கும் நிலை ஏற்பட்டது" என்கின்றனர்.