திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
கோடை காலமாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாக்கெட், பாட்டில் மற்றும் கேன்கள் தரமாக உள்ளதா? எனவும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு முகவரி மற்றும் தேதி ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பழக்கடைகள் மற்றும் குளிர்பான கடைகளில் விற்கப்படும் பழங்கள், குளிர்பானங்கள், குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் ஐஸ், மோர், சர்பத் மற்றும் தண்ணீர் தரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும்.
தெருவோர கடைகளில் விற்பனை செய்யப்படும் தேநீர் மற்றும் போண்டா, பஜ்ஜி போன்ற உணவு பண்டங்களின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். நடைபாதையோரம் விற்கப்படும் கோழி இறைச்சி, மீன் கடைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சிகள், வதைக்கூடத்தில் கால்நடை டாக்டரின் சான்று பெற்று விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.உரிமம்
அரசு மற்றும் அரசு சார்ந்த உணவு வணிக நிறுவனங்களான ரேஷன் கடைகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், கூட்டுறவு அங்காடிகள், அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகங்கள், கோவில் அன்னதான மையங்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு உணவு விடுதிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு மையங்கள் ஆகியவை உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.
பண்டிகை காலங்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின்போது இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த செயல் அதிகாரிகள், தெருவோரமாக விற்பனை செய்யும் கடை ஒப்பந்ததாரர்களிடம் கடைகளை ஏலம் விடும்போது உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள சிறுவணிகர்கள் முதல் அனைத்து உணவு வணிகர்கள் மற்றும் தனியார் மறுவாழ்வு இல்ல காப்பகங்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.