மென்பானங்களைக் கொண்டு இரும்புக் கதவைத் துடைக்கலாம், துரு சூப்பராகப் போகும் என்று சொன்னால் சந்தேகமாகத்தான் இருக்கும். யூடியூபைத் தட்டுங்கள், செயல்முறை விளக்கமாகச் செய்தே காட்டி விடுகிறார்கள். துருவை மட்டுமல்ல, கழிவறை கறையையும் மென்பானங்கள் போக்குமாம். குறைந்த செலவில் கிடைப்பதால் நல்ல விஷயம்தான், இல்லையா?
மென்பானங்களில் பூச்சிக்கொல்லி இல்லை என்று மென்பான நிறுவனங்கள் சாதித்தாலும், அதைத் தவிடுபொடியாக்குவது போல மேலும் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. அதிக விலை கொடுத்துப் பூச்சிக்கொல்லியை வாங்க முடியாத விவசாயிகள் சிலர், மென்பானங்களையே பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தி இருப்பதாகப் பி.பி.சியே செய்தி வெளியிட்டிருக்கிறது. மென்பானத்தில் பூச்சிக்கொல்லி எச்சம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
அரசு ஆராய்ச்சி
மென்பானங்களில் பூச்சிக்கொல்லி இருப்பது தொடர்பான சி.எஸ்.இயின் (அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்) 2003-ம் ஆண்டு ஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசின் சுகாதாரச் சேவை தலைமை இயக்குநர் (Directorate General of Health Services - DGHS), மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின்கீழ் மைசூரில் உள்ள மத்திய உணவு ஆய்வகத்துக்கும் (Central Food Technological Research Institute - CFTRI), கொல்கத்தாவில் உள்ள மத்திய உணவு ஆய்வகத்துக்கும் 12 நிறுவனங்களின் மென்பான மாதிரிகளை அனுப்பி, பகுப்பாய்வு செய்ய அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வகப் பரிசோதனைகளில் சி.எஸ்.இ. ஆய்வில் கண்டறியப்பட்ட பூச்சிக்கொல்லி எச்சங்களைவிட, குறைவான பூச்சிக்கொல்லி எச்சங்களே கண்டறியப்பட்டன. இந்த மென்பானங்களில் ஒன்பது மாதிரிகள் ஐரோப்பிய யூனியன் தரக்கட்டுப்பாட்டை மீறுவதாக இருந்தன. இதே நிறுவனத்தைச் சேர்ந்த மாதிரிகள் சி.எஸ்.இ. பரிசோதனையின்போது, ஐரோப்பிய தரக்கட்டுப்பாட்டை 11-70 மடங்கு மீறியிருந்தன. அரசு ஆய்வகங்களின் ஆய்வில் 1.2-5.2 மடங்கு மட்டுமே பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டறியப்பட்டன. இது தொடர்பாக அப்போதைய மத்தியச் சுகாதார, குடும்ப நல அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் 2003 ஆகஸ்ட் 21-ல் அறிக்கை சமர்ப்பித்தார்.
திசைதிருப்பல்
சி.எஸ்.இ.யின் பகுப்பாய்வில் 97 சதவீத மாதிரிகளில் மாலத்தியான் இருந்தது. அதேநேரம் மத்திய அரசு ஆய்வகங்கள் நடத்திய ஆய்வில் மாலத்தியான் கண்டறியப்படவில்லை. இந்த இரண்டு முடிவுகளுக்கும் உள்ள வேறுபாட்டை, மென்பான நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக மாற்றி கொள்ள முயற்சித்தன.
இந்தச் சர்ச்சையில் சி.எஸ்.இ. ஆய்வைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கி, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மென்பான நிறுவனங்களும் மத்திய அரசும் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டைச் சி.எஸ்.இ. முன்வைக்கிறது.
இதற்குக் காரணம் என்னவென்றால், இந்த மாதிரிகள் எப்படிச் சேகரிக்கப்பட்டன என்பது குறித்த தெளிவு இல்லை. இவை விற்பனைக்குத் தயாராக உள்ள கடையில் வாங்கப்பட்ட மாதிரிகளா அல்லது மென்பானம் நிரப்பப்படும் ஆலைகளில் சேகரிக்கப்பட்டவையா, அரசு அதிகாரிகள் சேகரித்தார்களா அல்லது நிறுவன அதிகாரிகள் தாங்களாக முன்வந்து அளித்தார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.
இரு வேறு மாதிரிகள்
மத்திய ஆய்வகங்களின் ஆய்வு முடிவுகள் சி.எஸ்.இ. ஆய்வுகளில் இருந்து வேறுபடுவதற்கான அடிப்படைக் காரணம், அவர்களுடைய மாதிரிகள் வேறொரு தொகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்பதுதான். இது சி.எப்.டி.ஆர்.ஐ. அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இரு வேறு தொகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கிடைத்த முடிவுகளை ஒப்பிடுவது அடிப்படை அற்றது. ஆனால், இந்த வேறுபாட்டை நாடாளுமன்றத்தில் அரசு வெளிப்படையாகக் கூறவில்லை.
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், பெங்களூரைச் சேர்ந்த ராம் அறிவியல், தொழிற்சாலை ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வகத்தில் மேற்கொண்ட இதேபோன்ற ஆய்வுகளில் மாலத்தியான் கண்டறியப்பட்டது, பின்னர் வெளியிடப்பட்டது. இதையடுத்துச் சி.எஸ்.இ. ஆய்வுக்கு எதிராகக் கிளப்பப்பட்ட சந்தேகம் அடிப்படையற்றது என்பது தெரிய வந்தது.
419 மடங்கு
அதேபோலக் கேரள அரசின் சுகாதாரச் சேவை இயக்குநரகம் கோகோ கோலா, பெப்சி மாதிரிகளைப் பெங்களூருவில் உள்ள ராம் அறிவியல், தொழிற்சாலை ஆராய்ச்சி அறக்கட்டளை ஆய்வகத்துக்கு அனுப்பியது. அந்த ஆய்வக முடிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மத்திய அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் நடைபெற்ற பரிசோதனையில் பூச்சிக்கொல்லி எச்ச அளவு அதிகபட்சமாக இருப்பதை இந்த ஆய்வகம் உறுதி செய்தது. அந்த மாதிரிகளில் ஐரோப்பிய யூனியன் தரக்கட்டுப்பாட்டைவிட 17 முதல் 419 மடங்கு அதிகப் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததை என்னவென்று சொல்வது?
இப்படிப் பிரச்சினைகளைத் திசைதிருப்பிக் குளிர்காய நினைக்கும் மென்பான நிறுவனங்கள், தாங்கள் தயாரிக்கும் மென்பானங்களின் தரத்தை உறுதிப்படுத்த அடிக்கடி பரிசோதனை நடத்துவது மிகவும் கடினமானது என்று வாதிடுகின்றன.
தப்பிக்கும் நிறுவனங்கள்
அதற்குக் காரணமாக மென்பானத் தயாரிப்புகள் மிகவும் சிக்கலானவை, அதனால் அவற்றைப் பரிசோதிப்பது கடினம் என்று மென்பான உற்பத்தி நிறுவனங்கள் வாதிடுகின்றன. ஆனால், இது நடைமுறைக்கு முரணானது. அந்த நிறுவனங்கள் சொல்வதுபோல மென்பானங்களை பரிசோதிப்பது கடினம் என்றால், பாலைப் பரிசோதிப்பதும்கூடக் கடினம்தான். பாலில் புரதம், லாக்டோஸ், கொழுப்பு, கனிமச்சத்து, நீர் போன்றவை உள்ளன. ஆனால், பாலின் தரம் தொடர்பாக இந்தியா உட்பட உலகெங்கும் வழக்கமாகப் பரிசோதனை-பகுப்பாய்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மென்பானங்களை பரிசோதிப்பது கடினம், முடியாது என்று கூறுவது தப்பிப்பதற்கான வழியாகவே தெரிகிறது.
எல்லா மென்பானத் தயாரிப்புகளின் அடிப்படை மூலப்பொருள், 99 சதவீதம் நீரும் கரும்புச் சர்க்கரையும்தான். எனவே, இந்தத் தயாரிப்பு கடினமானது என்று வாதிடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. அது மட்டுமல்லாமல் உலகெங்கும் மென்பானங்கள் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இதே மென்பான நிறுவனங்களின் தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி இல்லை. இந்தியாவில் மட்டும் இருக்கிறது என்றால், அதற்கான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பெரிய ஆராய்ச்சிகள் அவசியமில்லை.
நாட்டுக்கு ஏற்றவாறு தரத்தைத் தாழ்த்திக்கொள்ளும் இந்த நிறுவனங்கள், தொடர் பரிசோதனை மட்டும் கடினம் என்று கூறித் தப்பிக்க நினைப்பது எப்படி நியாயம்? மென்பானங்கள் ஏற்படுத்தும் உடல்நல ஆபத்தைக் கணக்கில்கொண்டு, அதன் தயாரிப்பு நிறுவனங்களைத் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைக்குள் கொண்டுவர மென்பானப் பிரியர்கள் இனியாவது முயற்சிக்க வேண்டும்.
கொடூரக் கொல்லிகள்
மென்பானங்களில் கண்டறியப்பட்ட லிண்டேன் பூச்சிக்கொல்லி, 1997-லேயே இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது. இது சுவாச, செரிமான உறுப்புகள் வழியாகக் கிரகிக்கப்பட்டுக் கொழுப்புத் திசுக்களில் இது சேகரமாகும். இந்தக் கொல்லி கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம், உடல் எதிர்ப்புசக்தியை பாதிக்கும். அது மட்டுமல்லாமல் பிறவிக் குறைபாடு, புற்றுநோய், ஏன் இறப்புக்கும் வழிவகுக்கக்கூடும். 1997-லேயே தடை செய்யப்பட்டுவிட்டாலும், தடை செய்யப்படுவதற்கு முன் வயல்களில் கண்மூடித்தனமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளதே, இதன் எச்சம் சுற்றுப்புறத்தில் நீடித்து இருப்பதற்குக் காரணம்.
டி.டி.டி. மற்றும் அதன் துணைப் பூச்சிக்கொல்லி வகைகள் பாலியல் குறைபாடுகள், விந்தணு குறைவு, திடீர் கருக்கலைவு, எலும்பு கனிம அடர்த்தி குறைவு, மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பு போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. விவசாயத்தில் இது தடை செய்யப்பட்டுவிட்டாலும், கொசு உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக இன்னமும் புழக்கத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
குளோர்பைரிஃபாஸ் பூச்சிக்கொல்லி கருவிலிருக்கும் குழந்தையின் நரம்புமண்டலத்தைப் பாதிக்கும். தண்ணீரைச் சுத்திகரிக்கக் குளோரின் பயன்படுத்தப்படும்போது, அந்தத் தண்ணீரில் ஏற்கெனவே எச்சமாக இருக்கும் குளோர்பைரிஃபாஸ் இன்னும் நஞ்சு மிகுந்ததாக மாறிவிடுகிறது.
அதேபோல மிகக் குறைந்த அளவு மாலத்தியான் பூச்சிக்கொல்லியே, குழந்தைகளிடம் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த நஞ்சின் வீரியம் எளிதில் குறையாது.
செலவில்லாத சத்து பானங்கள்
மென்பானங்களில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பார்த்துவிட்டோம். சரி, இவற்றுக்கு மாற்று என்ன? சென்னை, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த ராம் கூறும் யோசனைகள்:
வெப்பமண்டல நாடான நம் மண்ணில் சூட்டைத் தணித்துக்கொள்ளக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய நிறைய உள்ளூர் பானங்கள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. இளநீர், பதநீர், நீர்மோர் ஆகிய மூன்றையும் முதன்மையாகச் சொல்லலாம். மூன்றுமே ஆரோக்கியமானவை, உடலுக்கு உடனடி சக்தியைத் தருபவை. இளநீர் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். நீர்மோரை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம்.
இவற்றைத் தவிர்த்துச் சுக்கு தண்ணி, சுக்கு காப்பி எனப்படும் பானம், இப்போது எல்லா இடங்களிலும் பரவலாகி வருகிறது. முன்பெல்லாம் கிராமங்களுக்கு யாராவது வந்தால், கலர் உடைத்துக் கொடுப்பார்கள். இன்றைக்குக் கிராமங்களில் சுக்கு காப்பி கொடுக்கும் வழக்கம் பெருகி வருகிறது. பொது நிகழ்ச்சிகளிலும்கூடச் சுக்கு காப்பி பரவலாக ஆரம்பித்துவிட்டது. இது, உடலுக்குச் சக்தி தந்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கும். சுடச்சுடத் தருவதற்குப் பதிலாக ஆறவைத்தும் இதைத் தருகிறார்கள்.
பரவலாக விற்கப்படும் சர்பத்தில் சர்க்கரைப் பாகு அதிகம். அதற்குப் பதிலாக எலுமிச்சைச் சாற்றைக் குடிக்கலாம். செரிமானக் கோளாறின்போது பன்னீர் சோடா குடிப்பது வழக்கமாக இருந்தது. அதையும், கார்பனேற்றம் செய்யப்பட்ட மற்றக் குளிர்பானங்களையும் ஆரோக்கியமானவை என்று சொல்ல முடியாது.
பதநீர் நல்லது என்றாலும், அதற்கான அரசு ஆதரவு குறைந்து வருவதாலும், இடத் தேவைக்காகப் பனை மரங்கள் வெட்டப்பட்டதாலும் பதநீர் இறக்குவது குறைந்துவிட்டது. அதற்கான ஆதரவை அரசு மேம்படுத்த வேண்டியது அவசியம்.