சேலம், செப்.14-
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கலப்படம் செய்து விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
வெல்லம் உற்பத்தி நிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், தேக்கம்பட்டி, மூங்கில்பாடி, வட்டக்காடு, கருப்பூர், காமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வெல்ல உற்பத்தியாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை உற்பத்தியாளர்கள், செவ்வாய்பேட்டை வெல்ல மண்டிக்கு கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், செவ்வாய்பேட்டை பகுதி வெல்ல வியாபார கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெல்லத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட, அதி ரசாயனம் கலந்துள்ளதாகவும், வெல்ல தயாரிப்பிற்கு சர்க்கரை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வெல்லத்தை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இதனால் கடந்த 2 வாரமாக வெல்லம் உற்பத்தியாளர்கள், தங்களது வெல்ல உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
குடோனில் பதுக்கல்
இந்தநிலையில், ஓமலூர் பகுதியில் இருந்து ரசாயனம் கலந்த சுமார் 6 டன் வெல்லம் லாரியில் கொண்டு வந்து செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வியாபாரிக்கு சொந்தமான குடோனில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாகவும், மேலும், வெல்லம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நேற்று காலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வெல்ல உற்பத்தியாளர்கள் புகார் செய்தனர். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் செவ்வாய்பேட்டை பகுதியில் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள ரசாயனம் கலந்த வெல்லம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து மூட்டை மூட்டையாக சாக்குபையில் இருந்த வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பரிசோதனைக்காக சில வெல்லத்தை மட்டும் மாதிரிக்கு எடுத்தனர். அப்போது, வியாபாரிகள் சிலர் லாபநோக்கத்தோடு செயல்பட்டு வெல்லத்தை மறைமுகமாக கொள்முதல் செய்வதாக வெல்ல உற்பத்தியாளர்கள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
பேட்டி
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் அனுராதா நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் சுற்றுவட்டார பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தில் சர்க்கரை பாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. வெல்லத்தில் சர்க்கரை மூலப்பொருட்களாக இருந்தாலும், அழுக்கு எடுப்பதற்காக சூப்பர் பாஸ்பேட், சப்போலேட், ஹைட்ரோசன், சோடா உப்பு போன்ற ரசாயனம் சேர்ப்பதால் மனிதர்களுக்கு உணவு குழாயில் பாதிப்பு, கல்லீரல், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு தரமான வெல்லத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே வெல்ல உற்பத்தியாளர்களிடம் பலமுறை விழிப்புணர்வு செய்துள்ளோம்.
80 சதவீதம் சர்க்கரை
கரும்புச்சாறு மூலம் தான் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் லாபம் அதிகமாக கிடைப்பதால் சர்க்கரை 80 சதவீதமும், கரும்புச்சாறு 20 சதவீதம் கலந்து வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை வெல்ல உற்பத்தியாளர்கள் தவிர்க்க வேண்டும். ரசாயனம் கலந்த வெல்லத்தை கொள்முதல் செய்யக்கூடாது என்று ஏற்கனவே வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ரசாயனம் கலந்த வெல்லத்தை சில உற்பத்தியாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்குவதாக வந்த தகவலையடுத்து குடோனில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெல்லம் ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்ததால் அவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சில மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெல்லத்தை கொண்டு வந்த உற்பத்தியாளர்கள் யார்? இதை மொத்தமாக வாங்கிய வியாபாரிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் வியாபாரியின் குடோனுக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.