தி.நகரில் உள்ள ஒரு பெரிய கடையில், கருப்பட்டிக் காபிக்கு மிகப் பெரிய க்யூ. விலை அதிகம் என்றாலும், பலரும் காத்திருந்து அதை வாங்கிக் குடித்தனர். ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ் என்ற அளவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, முன்பு கவனிப்பாரின்றிக் கிடந்த கருப்பட்டி விலைகூட பல மடங்கு ஏறிவிட்டது.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் என கவனத்தைச் செலுத்திய நம் மக்கள், இப்போது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பனை வெல்லம், கருப்பட்டி, பூச்சிக்கொல்லி ரசாயனம் கலக்காத ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று தேடித்தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தெரு முனைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆர்கானிக், பாரம்பரியப் பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கிறது.
இப்படி, தெருவுக்குத் தெரு ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடப்பதால், எது உண்மையான ஆர்கானிக் என்றே தெரிவதுஇல்லை. ஆர்கானிக் என்றால், செழுமையே இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் என்பதால் விலையும் மிக அதிகம் என்று சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படுவது உண்மையான ஆர்கானிக் பொருட்களா, ஆர்கானிக் பொருட்களை வாங்குவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
ஆர்கானிக் பொருட்களை கண்டறிவது எப்படி?
வடிவம்: இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவத்தில் மாறுபடும். சாக்கில் போட்டு கொண்டுவரும்போது, இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகள், பறித்து ஒரு நாளுக்குள் சிறிது சுருங்கித்தான் போகும். வெண்டைக்காய், கத்திரிக்காயில் 20 சதவிகிதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், இரண்டில், வண்டு இருக்கத்தான் செய்யும். எனவே, இத்தகைய பொருட்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், அதில் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பூச்சி, புழுக்களே பயந்து ஒதுங்கிய காய்கறிகளின் அழகைப் பார்த்து வாங்குவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
சுவை: பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை மறுநாள் வைத்தால், நொதிந்துபோய், ஒருமாதிரியான வாடை வரும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்தால், சீக்கிரத்தில் கெடாது. பருப்பில் செய்யும் குழம்பு மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய், உப்பு, வெல்லத்தில்கூட வித்தியாசம் தெரியும். ஆர்கானிக் உணவைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பழைய சோற்றை மறுநாள் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். எனவே, ஆர்கானிக் என்று சொல்லும் பொருளை ஒருமுறை வாங்கி சமைத்துப் பார்த்து, ருசியின் வேறுபாடு தெரிந்தால் மட்டும் வாங்கலாம். நிறைய சமையல் நிபுணர்கள் ஆர்கானிக் பொருட்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் சுவை, நிறம், ஃபிளேவர் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, சமைத்துப் பார்க்கும்போதுதான் அதன் வித்தியாசத்தை உணர முடியும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள் பளிச் நிறத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நம்மை வசீகரிக்கத்தான் ரசாயன உரம் கலக்கப்படுகிறது.
ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் வைத்திருக்க முடியும். இதுவே பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், வெந்தயம், மற்றும் பழங்கள் என 70 சதவிகிதம் காய்கறி, பழங்களை நாமே வீட்டில் பயிரிட முடியும். பயிரிட்ட 21 நாட்களில் கீரைகளைப் பறித்துக் கொள்ளலாம். தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் தமிழக அரசு தோட்டக்கலைத் துறையே தருகிறது.
ஆர்கானிக் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளைத் தேடிச் சென்று மொத்தமாக வாங்கலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பட்டியலை சேகரித்து அவர்களிடம் வாங்கலாம். இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள், உள்ளூர்ச் சந்தை மற்றும் விவசாயிகள் சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்கலாம். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளுக்குச் சென்றாலே, இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க முடியும்.
இயற்கையோடும் இயற்கை விவசாயத்தோடும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வசப்படும்.
ஆர்கானிக் எது?
ராஜ முருகன், ‘நல்லசோறு’ இயக்குனர்
நேர்த்தியான, அழகான காய்கறிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை இதற்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வரவேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது.
காய், கனிகளில் அதற்கென வரும் வாசம் வருகிறதா எனப் பரிசோதியுங்கள். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
கோணலாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும் முகர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.
சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பார், கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்துபோகாது.
அரிசியைக் கைவிட்டு அள்ளும்போது மாவு போல கைகளில் பட்டால், அவை தீட்டப்பட்ட அரிசி அல்ல. மில்களில் அரிசி தீட்டும்போது எண்ணெய் சேர்ப்பதால், மாவு போல கைகளில் ஒட்டாமல் இருக்கும். இதுவே தீட்டப்படாத அரிசி கைகளில் வெள்ளை மாவாக ஒட்டிக்கொள்ளும்.
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்களில் ஓரிரண்டு வண்டுகள் இருந்தால், அந்த உணவைத் தாராளமாக வாங்கலாம். அதை சுத்தப்படுத்தி நம் வீட்டில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.
சிறுதானியம் ‘பளீர் வெள்ளை’யில் இருக்கக் கூடாது. ஏனெனில், அதில் பச்சரிசி, ஜவ்வரிசி குருணை கலக்கப்பட்டிருந்தால், பளிச்சென இருக்கும். சிறிது பழுப்பு நிறத்தில் இருக்கும் சிறுதானியங்களைத் தேர்ந்தெடுங்கள்.
அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது என தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களில் கிடைக்கும்.
தேனை வாயில் வைத்தால், சிறு துவர்ப்புச் சுவை வரவேண்டும் அதுதான் ஆர்கானிக். தேனுக்கு காலாவதி தேதியே கிடையாது. ஆனால், தற்போது கடைகளில் வேகவைத்த தேனை அனுப்புகின்றனர். அதாவது சர்க்கரை, வெல்ல பாகைச் சேர்க்கின்றனர்.
நாட்டு சர்க்கரை அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அடிநாக்கும், நடுநாக்கும் நாட்டு சர்க்கரையைச் சாப்பிட்ட பின் எரியக் கூடாது.
கருப்பட்டி, கருப்பாக இருக்க வேண்டும். பளபளப்புடன் மின்னக் கூடாது. மின்னுவதால் அதனுள் சர்க்கரையோ, கற்கண்டோ சேர்ந்து இருக்கலாம். கருப்பட்டி எளிதில் உடையக் கூடாது. சிறுகசப்புச் சுவை இருக்கும். அதிகமாக இனிக்காது.