இன்று ஷாப்பிங் என்பதே ஒரு கலாசாரமாக மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து பல பொருட்களை வாங்குகிறோம். ஆனால், செலவழித்த காசுக்கு அந்த பொருட்கள் தரமானதா எனில் கேள்விக்குறிதான்!
இதற்கொரு தீர்வாக, கான்சர்ட் என்கிற அமைப்பு மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட, தரமான லேப்களில் சோதித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது.
ஏழு முக்கிய பொருட்களையும் மூன்று முக்கிய சேவைகளின் தரத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த முடிவுகள் அடுத்தடுத்து வரும் நாணயம் விகடனில் வெளியாகும். இந்த ஆய்வில் முதல் ரிப்போர்ட், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் பற்றியது. தென் இந்தியாவில் விற்பனையாகும் பெரிய நிறுவனங்களின் சமையல் எண்ணெய் பிராண்டுகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அந்த முடிவுகளை தெரிந்துகொள்ளும் முன், ஒரு பொருளை மக்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதை அறிய ஒரு சிறிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின்படி, பொருட்களை வாங்குகிறவர்கள் விளம்பரத்தைப் பார்த்தும், டாக்டர் சொன்னதாலும் வாங்கியதாக சொன்னார்கள். இன்னும் சிலர் விலையைப் பார்த்தும், இலவசப் பொருட்களுக்காக வாங்கியதாகவும் சொன்னார்கள். தரத்தைப் பார்த்து யாரும் பொருளை வாங்குவதாக சொல்லவில்லை.
இனி ரிப்போர்ட்டுக்குள் செல்வோம். கீழே இருக்கும் அளவுகோல்களின் அடிப்படையில் சமையல் எண்ணெய்களை சோதனை செய்தோம்.
1. பேக்கேஜிங் (லேபிளுடன்) 2. ஆரோக்கிய மானதா? 3. தரமானதா? 4. விலை? 5. நிறம், மணம், பார்வை எப்படி இருக்கிறது போன்ற அளவு கோல்களை வைத்து சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதோ!
* பி.எஃப்.ஏ. விதிமுறைகள் 1955 மற்றும் எஃப்.எஸ். அண்ட் எஸ் விதிமுறைகள் 2011- விதிமுறைபடி, எண்ணெய்யின் லேபிளில் Free From argemone oil என்ற எச்சரிக்கை வாசகத்தைக் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்.
அதாவது, இந்த எண்ணெய்யில் நச்சுப் பொருட்கள் அல்லது சாப்பிடக்கூடாத எண்ணெய் எதுவும் இல்லை என்ற உத்தரவாதம் அந்த லேபிளில் இருக்க வேண்டும்.
ஆனால், பின்வரும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் எண்ணெய் பாக்கெட்டுகளில் இது மாதிரியான எச்சரிக்கை வாக்கியங்கள் எதுவும் இல்லை.
எஃப்.எஸ்.எஸ்.ஏ. விதிமுறைகள் 2011-படி எண்ணெய்யில் இருக்கும் சத்துகளை (Nutritional Information) லேபிளில் குறிப்பிட வேண்டும். ஆனால், காதி கிராமத்யோக், நந்தினி, இதயம் உள்ளிட்ட சில எண்ணெய்களில் இந்த தகவல்கள் இல்லை.
பொருளின் பெயர், உற்பத்தியாளர் பெயர், அவரது முகவரி, பேட்ச் கோட் எண், உற்பத்தி செய்த தேதி, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் என்ற தகவல், சத்துப்பொருட்களை பற்றிய தகவல், வாடிக்கையாளர்கள் புகார் செய்வதற்கான எண்கள் மற்றும் நச்சு பொருட்கள் இல்லை என்பது போன்ற தகவல்கள் கட்டாயம் அதன் லேபிளிலில் இருக்க வேண்டும்.
எனினும், இதை சரிபார்த்து வாங்குவது வாடிக்கையாளரின் கடமையே!