சேலம், ஜூலை 31:தமிழகத்தில் தடையை
மீறி பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தொடர்ந்து விற்பவர்கள்
மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
பான்ம சாலா, குட்கா, வாய்ப்புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு தடைவிதித்து
அரசு கடந்த மே 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இருப்பு வைத்துள்ள அனைத்து
கடைகளும் இது போன்ற பொருட்களை ஒரு மாதத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும்
என்றும் அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த கெடு முடிந்ததையடுத்து
அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைகளில் பான்மசாலா,
குட்கா போன்றவை விற்கப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை நடத்தி
வருகின்றனர். சேலத்தில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய
அதிரடி சோதனையில் , செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் மற்றொரு கடையில் 50 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை மாநகராட்சி குப்பைமேடு பகுதியில் அதிகாரிகள் கொட்டி எரித்தனர்.
இந்நிலையில்
பலமுறை எச்சரித்தும் தொடர்ச்சியாக இது போன்ற போதை பொருட்களை விற்பவர்கள்
மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு
செய்துள்னர். இது தொடர்பாக சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், உணவு
பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இது
குறித்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கூறுகையில்,
“தமிழகத்தில் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்க தடை
விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பது சட்டப்படி குற்றம். தமிழகத்தை
புகையிலை இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. சேலம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் போதை பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் விற்கப்பட்டது சோதனையின் போது
தெரியவந்துள்ளது. தொடர்ந்து பான்பாரக், குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை
செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது,” என்றார்.