சேலம், ஜூலை 30:
சேலத்தில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு
இருந்த 5 லட்சம் மதிப்புள்ள போதை பாக்கு, பான் மசாலா பொருட்களை உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில்,
பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு, வாய் புகையிலை போன்ற
பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மே 23ம் தேதி முதல் இந்த தடை
உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை
சந்தைப்பேட்டையில் உள்ள குடோன் ஒன்றில், போதை பாக்கு பொட்டலங்கள் பதுக்கி
வைக்கப்பட்டு இருப்பதாக சேலம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல்
கிடைத்தது.
மாவட்ட நியமன அலு வலர் டாக்டர்
அனுராதா தலைமையில், அலுவலர்கள் பாலு, ஜெகன், திருமூர்த்தி ஆகியோர்
புகாருக்குரிய குடோனுக்கு நேற்றிரவு சென்றனர். அந்த குடோனில் புதுவிதமான
போதை பாக்கு பொட்டலங்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
புகையிலை பொட்டலங்கள், நறுமண பாக்கு என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பாக்கு
பொட்டலங்கள் இருந்தன.
சிறு சிறு பிளாஸ்டிக்
பைகளில் போதை பாக்கு பொட்டலங்கள் அடைக்கப்பட்டு முடிச்சு போடப்பட்டு
இருந்தது. அவை, சேலம் மாநகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இரவு நேரங்களில்
சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது
தெரிய வந்தது. குடோனில் இருந்த போதை பாக்கு, புகையிலை பொருட்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 5 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட போதை
பாக்குகளை உணவுப் பகுப்பாய்வுக்கூட பரிசோதனைக்காக அதன் மாதிரிகளை
அதிகாரிகள் சேகரித்தனர்.
இதுகுறித்து
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், செவ்வாய்ப்பேட்டை உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம்
மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குடோன் உரிமையாளர் முனவர் சிங் தடை மீறி போதை பொருட்களை விற்பனை
செய்து வருவதால், இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு
ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்,” என்றார். இதைதொடர்ந்து விசாரணைக்கு
ஆஜராகும்படி குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment