நாமகிரிப்பேட்டை: உடலுக்கு கேடு விளைவிக்கும், பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மினரல் ஆயிலில், வாசனை மற்றும் நிறமிகளை கலந்து நூதமான முறையில், சமையல் எண்ணெய் விற்பனையில் மோசடி நடக்கிறது. தம்மம்பட்டி, நாரைக்கிணறு பகுதியினர், இந்த ஆயிலை மரச்செக்கில் ஆட்டிய சமையல் எண்ணெய் எனக்கூறி விற்கின்றனர்.
மண்ணுக்கு அடியில் இருந்து கிடைக்கும் குருடு ஆயிலில் இருந்து, பெட்ரோல், சமையல் எரிவாயு, டீசல், தார் உள்ளிட்ட பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகிறது. இதில், மினரல் ஆயில் என்ற வாசனையில்லாத, நிறமில்லாத, பசைதன்மையில்லாத ஒரு வகை எண்ணெயும் கிடைக்கிறது. மலிவான விலையில், எதற்கும் பயன்படாத இந்த மினரல் ஆயிலை, தற்போது திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலர் சமையல் எண்ணெய்யாக பயன்படுத்துகின்றனர்.
கலப்பட எண்ணெய்: பெரிய அளவிலான கன்டெய்னரில் வாங்கப்படும் இந்த ஆயிலில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகிவற்றுக்கு என, தனித்தனியாக கிடைக்கும் வாசனை, நிறமி ஆகியற்றை தரும் கெமிக்கல் கலக்கப்படுகிறது. குறிப்பாக, 14 லிட்டர் எண்ணெய் கேனில், சில துளி கெமிக்கல் விட்டால், அந்த எண்ணெய்க்கான குணம், மணம் கிடைத்துவிடும். சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் இருந்து, பல பகுதிகளுக்கு கலப்பட எண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த நாரைக்கிணறு கிராமம், தம்மம்பட்டி அருகிலேயே இருப்பதால், இங்கும் கலப்பட எண்ணெய் தயாரிப்பு அமோகமாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும், 400க்கும் மேற்பட்டோர், கலப்பட எண்ணெய்யை கேனில் வாங்கிச்சென்று, பல மாவட்டங்களில் விற்று வருகின்றனர். இவர்கள், 'எங்கள் தோட்டத்தில் விளைந்த எள், கடலையை மரச்செக்கில் ஆட்டி எடுத்து வருகிறோம்' எனக்கூறி, மார்க்கெட் விலையை விட லிட்டருக்கு, 20 முதல், 50 ரூபாய் வரை குறைத்து விற்கின்றனர். அதேபோல், சுற்று வட்டார பகுதியில், சில்லி சிக்கன் விற்பனை செய்யும் கடைக்காரர்களும், இந்த எண்ணெய்யை அதிகளவு வாங்கி செல்கின்றனர். இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் கலைவாணன் கூறியதாவது: தூய்மையான கடலை எண்ணெய் லிட்டர், 150 ரூபாய், நல்லெண்ணெய், 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆனால், இதுபோன்ற பெட்ரோல் ஆயிலில் கலப்படம் செய்து விற்கப்படும் கடலை எண்ணெய் லிட்டர், 85 ரூபாய்க்கும், நல்லெண்ணெய், 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நடுத்தர குடும்பத்தினர் மற்றும் ஏழைகள், விலை குறைவாக இருப்பதால், இதை வாங்கி செல்கின்றனர். இதனால், பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. கடலை எண்ணெய் என்று விற்கப்படும் ஆயில் பாக்கெட்டில், நிலக்கடலை படம் போட்டிருந்தாலும், கடலை எண்ணெய் என்று எழுதுவதில்லை. சமையல் எண்ணெய் என்று பொதுவாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோன்ற மோசடிகளை அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சிங்களாந்தபுரம் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: கலப்பட ஆயில்களை உணவில் சேர்த்துக்கொள்வதால், ரத்தத்தின் உறையும் தன்மை அதிகமாகிவிடும். இதனால், குறைந்த வயதில் கூட மாரடைப்பு ஏற்படும். அல்சர் போன்ற குடல் புண் நோய் மட்டுமின்றி, ஜீரண மண்டலமே பாதிக்கப்படும். புற்றுநோய், பக்கவாதம் உள்ளிட்ட கொடிய நோய்களும் தாக்கும் அபாயம் உள்ளது. பாக்கெட்டில் அடைத்த பொருட்களை பயன்படுத்தியதில் இருந்தே, இதுபோன்ற பாதிப்பு அதிகரிக்க துவங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அலுவலர் டாக்டர் கவிக்குமார் கூறியதாவது: பெரும்பாலும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் தான் கலப்படம் செய்வர். நல்லெண்ணையில் ஆமணக்கு எண்ணெயும், கடலை எண்ணெய்யில் பால்மோலிவ் ஆயிலும் கலப்படம் செய்வர். கலப்பட ஆயில் குறித்து, ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் உண்மை தெரியவரும். நல்லெண்ணெயை பொறுத்த வரை, அக்மார்க் சான்று பெற்றால் தான் பாக்கெட்டில் விற்க முடியும். மினரல் ஆயிலில் கலப்படம் குறித்து புகார் எதுவும் இல்லை. தகவல் கிடைத்தால், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.