"கேன்' குடிநீர் நிறுவனங்களிடம், மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என, மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறை : இது குறித்து, நுகர்வோர் நலத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: "கேன்' குடிநீர் நிறுவனங்கள் தொடர்பாக, மத்திய அரசு புதிய நடைமுறைகளை அமல்படுத்துகிறது. "கேன்' குடிநீர் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ., சான்று பெற்றுள்ளதா என்பதை, தரக்கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும்.
குடிநீர் தொழிற்சாலைகளில், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறையினர், அவ்வப்போது, கள ஆய்வு செய்யவேண்டும். ஐ.எஸ்.ஐ., விதிக்குட்பட்டு, குடிநீர், சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்பு மாதிரிகளை எடுத்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதே போல விற்பனையில் உள்ள குடிநீரையும் ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமீறல் நிறுவனங்கள் மீது, எச்சரிக்கை நோட்டீஸ், உற்பத்தியை நிறுத்த உத்தரவு, லைசன்ஸ் முடக்கம், லைசன்ஸ் நிரந்தர நீக்கம் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இதை மாநில அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் : தமிழகத்தில் ஏற்கனவே. "கேன்' குடிநீரின் தரம் குறித்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. நிலத்தடி நீரை வறண்ட பகுதியிலிருந்து எடுக்கும், 252 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு, விதிமீறல் கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.