ஓசூர்: ஓசூரில், கலர் பொடி மற்றும் பல நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட கோழி இறைச்சியில், பிரியாணி தயார் செய்யப்படுவதால், அதை சாப்பிடும் மக்களுக்கு வயிறு உபாதைகள் ஏற்படுகிறது. ஆனால், இதையெல்லாம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
தொழில் நகரமான ஓசூரில், பிரியாணி கடைகளுக்கு பஞ்சமில்லை. தாலுகா அலுவலக சாலை, ராயக்கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில், பல பெயர்களில் பிரியாணி கடைகள் புதிது, புதிதாக முளைத்து வருகின்றன. ஆனால், இந்த கடைகளில் தயாராகும், பிரியாணியின் தரம் மட்டும் கேள்விக்குறியாக உள்ளது. கோழி பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் இறைச்சி, பிரிட்ஜில் பல நாள் வைக்கப்பட்டு, பிரியாணிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை அறிந்த, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களும், ஓட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், ஓட்டல்களின் நிலையும் மிக மோசமாக உள்ளது. கடும் துர்நாற்றத்தின் பிடியில் அமர்ந்து தான் மக்கள் சாப்பிட வேண்டியுள்ளது. கோழியின் விலை தினமும் மாறும் என்பதால், பல ஹோட்டல் நிர்வாகம், விலை குறைந்த நாட்களில் கூடுதலாக கோழி இறைச்சிகளை வாங்கி, பிரிட்ஜில் இருப்பு வைத்து விடுகின்றன. இதை தான் பல்வேறு நாட்களுக்கு பிரியாணிக்கு பயன்படுத்துகின்றன. சிறிய ஓட்டல்களில் துவங்கி, பெரிய ஓட்டல்கள் வரை இதே நிலை தான் தொடர்கிறது. முதல் நாள் விற்பனையாகாமல் மீதமாகும் பிரியாணியில் இருந்து கோழி இறைச்சிகளை மட்டும் தனியாக எடுத்து, அடுத்த நாள் புதிதாக தயாரிக்கும் பிரியாணியில் கலக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. இது போன்ற தரமற்ற முறையில் தயாராகும் பிரியாணியை சாப்பிடும் பொதுமக்களுக்கு, வயிறு உபாதைகள், வாந்தி, பேதி ஆகியவை ஏற்படுகிறது. அத்துடன், பிரியாணியில் கலர் கொண்டு வருவதற்காக, கலர் பொடி கலக்கப்படுவதால், பல நேரங்களில் பிரியாணி கசப்பு தன்மை அடைகிறது. மக்களுக்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் பிரியாணி கடைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.