Oct 3, 2017
பீடி, சிகரெட் விற்க தடை? வணிகர் சங்கம் எதிர்ப்பு
சென்னை;'பீடி, சிகரெட் விற்கும் கடைகளில், வேறு பொருட்கள் விற்கக் கூடாது என்ற உத்தரவு, சிறு வணிகர்களை கடுமையாக பாதிக்கும்' என, வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது.
பேரமைப்பின் தலைவர், விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனையகங்களில், வேறு பொருட்கள் விற்கக் கூடாது என, மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான சிறு வணிகர்கள், குளிர்பானங்கள், உணவுப் பொருட்களோடு, பீடி, சிகரெட்டையும் விற்கின்றனர்.ஜி.எஸ்.டி.,யால், ஏற்கனவே, வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி, வணிகர்களுடன் பேசி, அரசுகள் முடிவெடுக்க வேண்டும். இந்த வழிகாட்டு முறையை, திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயிலில் ஜூஸ் சரியில்லை! 'மாஜி' அமைச்சர் புகார்
புதுடில்லி: சதாப்தி ரயிலில், தரம் குறைவான பழ ரசம் வழங்கப்பட்டதாக, முன்னாள் ரயில்வே அமைச்சர் புகார் தெரிவித்ததை அடுத்து, குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் பழ ரச விற்பனையை, ஐ.ஆர்.சி.டி.சி., தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த, முன்னாள் ரயில்வே அமைச்சர், தினேஷ் திரிவேதி, செப்., 30ல், காத்கோடாம் - டில்லி, சதாப்தி ரயிலில் பயணித்தார். அப்போது, அவருக்கு, பிரபலதனியார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பழ ரசம் வழங்கப்பட்டது.அதை அருந்திய அவர், தனக்கு வழங்கிய பழ ரசம், குப்பையில் வீசக்கூடிய தரத்தில் இருந்ததாக குற்றஞ்சாட்டினார்.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதிருப்தி தெரிவித்தார்.
இது குறித்து, தினேஷ் திரிவேதி மேலும் கூறியதாவது: ரயிலில் எனக்கு வழங்கப்பட்ட பழ ரசம் மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. இது போன்ற உணவுப் பொருட்கள், குப்பையில் கொட்டப்பட வேண்டியவை. இத்தகைய உணவு வகைகளை, பயணியருக்கு வழங்குவது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில், ரயில்வே அமைச்சரை குற்றஞ்சாட்டுவதில் நியாயமில்லை. உணவுப் பொருட்கள் விற்பனையை மேற்கொள்ளும், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனமும், ரயில்வே உயர் அதிகாரிகளும், இதுபோன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.'மாஜி' அமைச்சர் திரிவேதியின் குற்றச்சாட்டை அடுத்து, குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பழ ரசங்களை, விற்பனை பட்டிலில் இருந்து ஐ.ஆர்.சி.டி., நிறுவனம் நீக்கியுள்ளது.
அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை, மறு அறிவிப்பு வரும் வரை, ரயில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.'மாஜி' அமைச்சர் திரிவேதியின் குற்றச்சாட்டை அடுத்து, குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்த பழ ரசங்களை, விற்பனை பட்டிலில் இருந்து ஐ.ஆர்.சி.டி., நிறுவனம் நீக்கியுள்ளது
Subscribe to:
Posts (Atom)