‘சாலையோரத்தில் செயல்படும் தள்ளுவண்டி உணவகங்களில் உணவுகள் தரமாக இருக்காது, சுத்தம் இருக்காது என்பது நம் எண்ணம். அதுமாதிரி கடைகளைப் பரிகாசத்தோடு கடந்து செல்வோம். அதேநேரம், ‘கண்ணாடிகளால் வேயப்பட்ட பெரிய பிராண்டட் ஹோட்டல்கள் என்றால், எல்லாம் சுத்தமாக இருக்கும், தரமாக இருக்கும், உணவுகளைப் பாதுகாப்பாக வைத்துப் பரிமாறுவார்கள்’ என்று நாம் நம்புகிறோம்.
கண்ணாடித் தரைகள், அலங்கார விரிப்புகள், துடைத்து வைத்தாற்போல பளபளக்கும் சுவர்கள், பல வண்ணங்களில் ஜொலிக்கும் விளக்குகள் நமக்கு அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகின்றன. கொடுப்பதை சாப்பிட்டு, கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறோம்.
ஆனால் யதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.
பிரபல செயின் ரெஸ்டாரன்ட் பேக்கரி ஒன்றில், கண்ணாடித் தடுப்புகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இனிப்புகளை எலி ஒன்று சாவகாசமாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. மிகவும் பரபரப்பான ஓசூர் பேருந்துநிலையத்தில் உள்ள பிரபலமான அந்த ரெஸ்டாரன்ட்டில்தான் இந்த விபரீதம். அந்த ரெஸ்டாரன்டுக்கு இப்போது நகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்திருக்கிறார்கள்.
நாளொன்றுக்குப் பலநூறு பேர் வந்து வணிகம் செய்யும் பேக்கரி அது. வீடியோவைப் பார்த்து மக்கள் மிரண்டு போய்விட்டார்கள். பொதுவாக, நாம் உயர்வாகக் கருதும் பல ரெஸ்டாரன்டுகள், பேக்கரிகளில் வெளித்தோற்றத்துக்கும், உள்ளிருக்கும் நிலைக்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஒரு பேக்கரியின் நிலை வெளியில் தெரிந்து விட்டது. பல பேக்கரிகளில் தெரியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
‘தள்ளுவண்டிக் கடைகள் முதல் பள்ளி, கல்லூரி விடுதிகள், திரையரங்க கேன்டீன்கள், ரெஸ்டாரன்ட்கள் என உணவு சம்பந்தமான தொழில் புரிவோர், கோவில்களில் அன்னதானம் செய்வோர் அனைவரும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்ட உரிமம் மற்றும் பதிவைக் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். தரமற்ற பொருள்களையோ, தடை செய்யப்பட்ட பொருள்களையோ, தேவையற்ற செயற்கை நிறம் பூசப்பட்ட உணவு பொருள்களையோ விற்பனை செய்யக் கூடாது. சுகாதாரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம்’ என்கிறது உணவுப் பாதுகாப்புச் சட்டம்.
இதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த மாவட்ட அளவில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள் இருக்கிறார்கள். ஆனால் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
“உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் தங்கள் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஸ்டால்களில் திடீர் ஆய்வு செய்வார்கள். இந்த ஆய்வுகளின்போது, உணவுப்பொருள்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கிறதா, தண்ணீர், எண்ணெய், சர்க்கரை உள்பட உணவுத் தயாரிக்கப்பயன்படும் பொருள்கள் தரமானவையாக இருக்கின்றனவா, ஸ்டாக் ரூம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா, சைவ, அசைவ உணவுகளைத் தனித்தனியாகப் பயன்படுத்துகிறார்களா என எல்லாவற்றையும் ஆய்வு செய்வார்கள்.
பெரும்பாலும் அசைவ உணவகங்களில் முதல் நாள் மிச்சமான சிக்கன், மட்டனை எடுத்து ஃப்ரிட்ஜ் வைத்து, அடுத்தநாள் பிரியாணியில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். அதையும் கண்காணிப்போம்.
உணவுப்பொருள்களில் கலப்படம் செய்தாலோ சுகாதார விதிமுறைகளைச் சரிவர கடைபிடிக்காவிட்டாலோ, அந்த உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்துப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வது, உணவுப்பொருள்களில் தரம் குறைவு, பராமரிப்புக் குறைபாடு குறித்து 9444042322 என்ற எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம்..” என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா.
வீடுகளிலும் கூட சில நேரங்களில் தேங்காய் போன்ற பொருள்களை எலிகள் கொறித்துப் போட்டுவிடும். சிலர், எலி கொறித்த இடத்தை மட்டும் வெட்டி வீசிவிட்டு மற்ற பகுதியைப் பயன்படுத்துவார்கள்.
“எலி சாப்பிட்ட உணவுப்பொருட்களைச் சாப்பிடலாமா. அதனால் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா?”
பொதுநல மருத்துவர் அருணாச்சலத்திடம் கேட்டோம்.
"எலி சாப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் வாந்தி, பேதியில் தொடங்கி, எலிக்காய்ச்சல்(Leptospirosis) வரை பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு” என்று பீதி கிளப்புகிறார் அவர்.
“எலியின் சிறுநீரில், லெப்டோஸ்பைரா (Leptospira) என்ற பாக்டீரியா இருக்கிறது. இது, எலியின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலமாகவோ அல்லது கடிப்பதன் மூலமாகவோ பரவுகிறது. ஹோட்டல் உணவுகளையோ, பேக்கரி உணவுகளையோ சாப்பிட்டபின் தொடர் காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, கண் எரிச்சல், உடல் வலி போன்றவை இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். எலிக்காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விடும்போது, மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பாதிப்பு, கணையப் பாதிப்பு, பித்தப்பை பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்” என்கிறார்.
No comments:
Post a Comment