தூத்துக்குடி, மே 28:
தூத்துக்குடியில் செயற்கை முறையில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 7.50 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாம்பழ சீசன் களைகட்டியுள்ளதால், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் தூத்துக்குடிக்கு வந்துள்ளன. பல கடைகளில் பழங்களுக்கு பதிலாக காய்கள் வந்திறங்கியுள்ளதால் அவற்றை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், அதிகாரிகள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோரது தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை பழக்கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி & பாளை ரோட்டில், மாநகராட்சி அலுவலகம் எதிர்புறம் உள்ள பழக்கடையின் குடோனிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கார்பைடு கற்கள் மாங்காய்களுக்கு மத்தியில் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் சட்டவிரோதமாக செயற்கை முறையில் ரசாயன ஸ்ப்ரே மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 7.50 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்காக தருவைகுளம் செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கிற்கு எடுத்து சென்றனர். தொடர்ந்து இதுபோன்று கார்பைடு கற்களை வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தூத்துக்குடி பழக்கடை குடோனில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment