தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 7.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
தற்போது மாம்பழ சீசன் களைகட்டியுள்ளதால், சேலம், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து மாம்பழங்கள் அதிகளவில் தூத்துக்குடிக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில், பல கடைகளில் மாம்பழங்களை கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்ததாம்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜகதீஷ்சந்திரபோஸ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமகிருஷ்ணன், சந்திரமோகன்,சிவபாலன் ஆகியோர் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மாநகராட்சி புது கட்டடம் எதிர்புறம் உள்ள கணேசன் மகன் துரைராஜுக்குச் சொந்தமான பழக்கடை மற்றும் குடோனில் சோதனையிட்ட போது, மாம்பழங்கள் கார்பைடு என்ற ரசாயனக் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
மாம்பழங்களுக்கு இடையே தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் கார்பைடு கற்கள் இருந்தன. அதையடுத்து அங்கிருந்த 7.5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து, மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அழிக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்பதால் பல்வேறு நோய்கள் உருவாகிறது. எனவே, இத்தகைய செயல்களை தடுப்பதற்கு சோதனைகள் தீவிரமாகும். தொடர்ந்து தவறுகள் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment