உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் காரீயம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் மேகி உள்பட 4 நிறுவன நூடுல்சுக்கு ஜெயலலிதா உத்தரவின் பேரில் 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ்
பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ‘நெஸ்லே’ நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயன உப்பு அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, ‘‘மோனோ சோடியம் குளுட்டாமேட்’’ என்ற ரசாயன உப்பு உடலில் அதிகம் சேர்ந்தால் பலவித நோய்கள் உருவாகும் அபாயம் இருப்பதால், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்தது.
3 மாநிலங்களில் தடை
முதலில் உத்தரபிரதேச மாநிலத்தில் மேகி நூடுல்ஸ் துரித உணவு பொருளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்னர், எல்லா மாநிலங்களிலும் அது பரவத்தொடங்கியது. பெரும்பாலான மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
பரிசோதனை முடிவின்படி, டெல்லி, ஜார்கண்ட், கேரளா மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வுகள் நடந்தன. புதுச்சேரி மாநிலத்தில் மேகி நூடுல்சுக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆய்வு
தமிழ்நாட்டை பொறுத்த அளவில், 32 மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதற்கான ஆய்வு, தமிழ்நாட்டில் 6 இடங்களில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடங்களில் நடந்தது. ஆய்வு முடிவின் அறிக்கை நேற்று மாலை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையை தொடர்ந்து, மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தமிழக அரசு 3 மாதம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜெயலலிதா உத்தரவு
பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’, இந்தியாவில் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் “காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவைவிட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தரநிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா? என கண்டறியுமாறு உத்தரவிட்டார்.
காரீயத்தின் அளவு அதிகம்
இதனையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் ‘மேகி நூடுல்ஸ்’ மற்றும் அதைப் போன்ற இதர ‘நூடுல்ஸ்’ உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தது. தமிழ்நாடு முழுவதும் 65 உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் எடுக்கப்பட்ட 17 உணவு மாதிரிகளில் 7 மாதிரிகளில் பரிசோதனைக்குப் பின் ஆய்வக முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
இந்த 7 மாதிரிகளில் 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 லட்சத்திற்கு 2.5 என்ற அளவைவிட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ‘நெஸ்லே’ நிறுவனத்தின் ‘மேகி நூடுல்ஸ்’, ‘வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ்’, ‘ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’, ‘ஸ்மித் அண்டு ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ்’ ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சேமித்து வைக்கவும் தடை
அதன்படி மேற்சொன்ன ‘நூடுல்ஸ்’ உற்பத்தி நிறுவனங்களின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம், 2006, பிரிவு 30(2)(ஏ)-ன் கீழ் இந்நிறுவனங்கள் நூடுல்ஸ் உணவுப் பொருட்களை தமிழ்நாட்டில் தயாரிப்பதற்கும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் முதற்கட்டமாக 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆணையிட்டுள்ளார்.
மேலும், இவ்வகை உணவுப் பொருட்களை விற்பனையில் இருந்து உடனடியாக திரும்பப் பெறுவதற்கும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேகி நூடுல்சில் உணவு பாதுகாப்புத்துறை
மேகி நூடுல்ஸ் இப்போது பலத்த சர்ச்சையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. நாடு முழுவதிலும் நூடுல்ஸ் விற்பனை கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நேரத்தில், உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கடைகளில் உள்ள சில மேகி பாக்கெட் சாம்பிள்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். இந்த பரிசோதனை முடிவில், அதில் மோனோசோடியம் குளுடாமேட் என்ற ருசி அதிகரிப்பதற்காக போடப்படும் சீன நாட்டு உப்பும், காரீயமும் அளவுக்கு மிகஅதிகமாக இருக்கிறது, இதனால், இதை சாப்பிடுகிறவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்ற அபாய சங்கை ஊதினார். உடனடியாக உத்தரபிரதேச அரசாங்கம், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தது. இதுதொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் மேகி தயாரிக்கும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நெஸ்லே நிறுவனம் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பல மாநிலங்களில் இப்போது மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் கூட மேகியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மந்திரி ராம் விலாஸ் பஸ்வான், மேகி நூடுல்ஸ் விவகாரம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், நாட்டிலேயே முதல்முறையாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பிரிவு 12(1) (டி)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தடை விதித்துள்ளார்.
நூடுல்ஸின் விளம்பர தூதர்களாக சினிமா நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி ஒரு கலப்பட பொருளை வாங்கச்சொல்லி விளம்பரத்தில் தோன்றினார்கள் என்று அவர்கள்மீது பீகாரில் வழக்குப்போட்டு, இப்போது கோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கை வலுத்து வருகிறது. விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை என்பது அபாண்டமானது. அதில் நியாயமேயில்லை. அந்த கம்பெனி கலப்படம் செய்தால் அவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?. மேலும், அவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்போது பரிசோதனைகூட ஆய்வறிக்கையை காட்டும் நேரத்தில் எந்தக்குறையும் இல்லை என்கிறார்கள். அதன்பிறகு குறையிருந்தால் அவர்களை குறைசொல்லி பயனேயில்லை. இவ்வளவுக்கும் மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசிலும் உணவு பாதுகாப்புக்கென தனித்துறைகள் மற்றும் அமைப்புகள் இருக்கிறது. மேகி மட்டுமல்லாமல், அனைத்து உணவுப்பொருட்களையும் பரிசோதித்து ஆய்வுகூடங்களுக்கு அனுப்பவேண்டியது அவர்கள் கடமையாகும். அவர்கள் நடவடிக்கை தீவிரமாக இருந்திருந்தால், விற்பனைக்கு வரும் முன்பே தடுத்து இருக்கமுடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல, கோக்கோ கோலா, பெப்சி குளிர்பானங்கள் மீதும் பூச்சி மருந்து இருந்ததாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையமே தெரிவித்திருந்தது. அந்தநேரத்திலும், இதுபோல பரபரப்பாக பேசப்பட்டதே தவிர, நடவடிக்கை எதையும் காணோம். அதுபோல இல்லாமல், இனி உணவுப்பொருட்கள் பாதுகாப்பில் சம்பந்தப்பட்ட துறைகள் மிகவும் விழிப்போடு செயல்படவேண்டும். மக்கள் உயிருக்கு பாதுகாப்பு என்ற முறையில், இதில் தொய்வே இருக்கக்கூடாது. மேலும், மத்திய அரசாங்கம் இப்போது கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்தில் இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் வகையிலான வலிமையான பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும்.
No comments:
Post a Comment