Oct 25, 2017

விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைப்பு

விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
விளாத்திகுளம், 
விளாத்திகுளம் அருகே கலப்பட எண்ணெய் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
விளாத்திகுளம் அருகே வெம்பூரில் எண்ணெய் குடோன் உள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (வயது 42) என்பவர் எண்ணெய் குடோனை நடத்தி வந்தார். இங்கு முறைகேடாக டின்களில் தரம் குறைந்த எண்ணெயை கலந்து விற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்லப்பாண்டியன், பாலசுப்பிரமணியன், சிவபாலன் உள்ளிட்ட குழுவினர் நேற்று வெம்பூரில் உள்ள எண்ணெய் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
சீல் வைப்பு
அப்போது அந்த குடோனில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றில் தரம் குறைந்த எண்ணெயை கலப்படம் செய்து டின்களில் அடைத்து, கடைகளுக்கு விற்றது தெரிய வந்தது. அந்த எண்ணெய் குடோனில் தலா 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட 40 டின்கள் இருந்தன.
அவற்றில் இருந்து எண்ணெய் மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து, தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த எண்ணெய் குடோனை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆய்வக பரிசோதனையின் முடிவில் எண்ணெய் குடோனின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment