Jul 7, 2016

கொடி கட்டி பறக்கும் போதை பொருள் விற்பனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆசியோடு ஜோராக நடந்து வருகிறது.
தமிழகத்தில், ஹான்ஸ், பான்பராக் உட்பட பல்வேறு போதை வஸ்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணகிரியில் தங்கி மொத்த வியாபாரம் செய்து வரும் சில வியாபாரிகள், பெங்களூருவில் இருந்து போதை வஸ்துகளை கடத்தி வந்து, உள்ளூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆசியோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த போதை வஸ்துகள் விற்பனையில், 100 சதவீதம் லாபம் உள்ளதால், கடைக்காரர்கள் இதை விற்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி அருகே உள்ள பெட்டி கடைகள், கிராம புறத்தில் உள்ள பெட்டி கடைகளில் போதை வஸ்துகளின் விற்பனை தற்போது கொடி கட்டி பறக்கிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கிராமம், நகரம் பாகுபாடின்றி ஹான்ஸ், பான்பராக் உட்பட போதை வஸ்துக்களுக்கு இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள வடமாநில மொத்த வியாபாரிகளிடம் இருந்து இதை வாங்கி விற்பனை செய்கிறோம். எங்களுக்கு, 100 சதவீதம் லாபம் கிடைக்கிறது. பள்ளி மாணவர்களும் இதை வாங்கி செல்கின்றனர். போலீசார் மற்றும் பிற அதிகாரிகளுக்கு வடமாநில வியாபாரிகள் மாமூல் கொடுப்பதால், எங்களை யாரும் தொந்தரவு செய்வதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment