மதுரை, ஜூன் 6:
மதுரையில் 100 கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் எலி கடித்து அழுகிய பழங்களில் ஜூஸ் தயாரித்து வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான திண்பண்டங்கள், பொருட்கள் வியாபாரம் செய்வதாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் சுகுணாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆரப்பாளையம் உட்பட 100க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட காலாவதியான திண்பண்டங்கள் விற்றது தெரிந்தது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை போன்றவை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள் குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள பழம் மற்றும் ஜூஸ் கடைகளில் ஆய்வு செய்தனர். அங்கு வைத்திருந்த பெரும்பாலான பழங்கள் அழுகி இருந்தன.
பல பழங்கள் எலி கடித்தவைகளாக இருந்தன. ‘இந்த பழங்களை கடையில் ஏன் வைத்திருக்கிறீர்கள்’ என்று அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, ‘அழுகிய மற்றும் எலி கடித்த பகுதிகளை நீக்கி விட்டு, பழங்களை வெட்டி தான் ஜூஸ் போடுவோம்’ என்றனர்.
இதைக்கேட்ட அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட் டது. அழுகிய, எலி கடித்த பழங்களை அப்புறப்படுத்தி, குப்பையில் கொட்டி அழித்தனர். மேலும் ஜூஸ் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.
No comments:
Post a Comment