கோஹிமா, ஜூன் 2:
நாகலாந்தில் உள்ள கரிபிமா என்ற கிராமம், நாட்டின் புகையிலை இல்லா முதல் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, நாகலாந்தில் உள்ள கரிபிமா கிராமத்தில் நேற்று முன்தினம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மாநில முதன்மை செயலாளர் பென்சிலோ தோங், புகையிலை இல்லா நாட்டின் முதல் கிராமமாக கரிபிமா கிராமத்தை அறிவித்தார்.
கிராம சபை, கிராம மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் அங்குள்ள மாணவர்கள் சங்கம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக கரிபிமா கிராமத்தில் முழுமையாக புகையிலை பொருட்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் புகையிலை அல்லது மது போன்ற போதைப் பொருட்களை யாராவது விற்றாலோ அல்லது யாராவது குடித்துவிட்டு வந்து அமைதியைக் குலைக்கும் விதமாக நடந்து கொண்டாலோ அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
தெருக்களிலோ, பொது இடங்களிலோ மது, பீடி, பான், பாக்கு அல்லது புகை வராத புகையிலை போன்றவற்றை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இத்தகைய நடைமுறைகளை தீவிரமாகப் பின்பற்றியதன் மூலம் இந்த கிராமத்தில் புகையிலைப் பயன்பாடு அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமம், நாட்டின் முதல் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை இயக்குனர் லோங்காய் பேசுகையில், “நாகலாந்தில் 67.9 சதவீத ஆண்களும், 28.1 சதவீத பெண்களும் புகையிலை உபயோகிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனாலும், கரிபிமா கிராமம் இந்த பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த முன்னோடியாக இருப்பது மட்டுமின்றி இதன் விதிமுறைகளைப் பின்பற்றுவதன்மூலம் மற்ற கிராமங்களும் இந்த பழக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.
புகையிலை பழக்கத்தால் தினமும் 2200 இந்தியர்கள் இறக்கிறார்கள். கேன்சர் நோயாளிகளில் 40 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். 90 சதவீத வாய் புற்றுநோய்க்கு புகையிலை பழக்கமே காரணமாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது” என்றார்.
No comments:
Post a Comment