Jun 2, 2014

சுகாதாரம் பற்றி கவலையில்லை பழநியில் பாக்கெட் தண்ணீர் விற்பனை அமோகம்



பழநி, ஜூன் 2:
பழநி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் நடைபெறும். இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சராசரியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்ய ஏராள மான இடங்களில் தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தண்ணீர் பாக்கெட் விலை ரூ.3க்கு விற்பனை செய்வதால், தண்ணீர் பாட்டிலைவிட, பாக்கெட்களையே பக்தர்கள் அதிகளவில் வாங்குகின்றனர். இந்த தண்ணீர் பாக்கெட்டுகளில், பெரும்பாலானவை முறையாக அனுமதி பெறாமல், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டவையாக உள்ளது. இதில் உற்பத்தி செய்யப்பட்ட தேதிக்கான இடம் பூர்த்தி செய்யப்படாமல் காலியாக உள்ளது. இதுபோன்ற சுகாதாரமற்ற குடிநீரை உபயோகிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கிணற்றுநீர், ஆற்றுநீர் மற்றும் போர்வெல் தண்ணீரைப் பாக்கெட் செய்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு தயார் செய்யப்படும் பாக்கெட்டுகள் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே தயாரிக்கப்பட்டு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாலும், சுத்திகரிக்கப்படாததாலும் நோய் தாக்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

No comments:

Post a Comment